Featured Posts

கப்ருகளை தொட்டு முத்தமிட ஸஹாபாக்கள் ஆதாரமா?

بسم الله الرحمن الرحيم
கப்ருகளை தொட்டு முத்தமிட ஸஹாபாக்கள் ஆதாரமா?

அஸ்கீ இப்னு ஷம்சுல்ஆப்தீன்
மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யா
நீர்கொழும்பு – இலங்கை

அபூஅய்யூப், பிலால் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் நபியவர்களின் கப்ரைத் தொட்டு முத்தமிட்டார்களா?

கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமே என்று பரவலாக வட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் சம்பவத்தை முன்வைக்கின்றனர். பொதுவாகவே கப்ரு பக்தி கொண்டவர்கள் அவர்களது கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையே முன்வைத்து வருகின்றனர் என்பது பொதுமக்களும் அறிந்த விடயமாகிவிட்டது. ஒரு சிலரின் தீர்ப்பை மாத்திரம் முன்வைத்து ஏனைய இமாம்களின் தீர்ப்புக்களை ஆழமாக ஆராயாமல் முடிவு காணக்கூடியவர்களே இவர்கள்.

கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது கூடும் என்ற அவர்களது வாதத்திற்கு அவர்கள் பிரதானமாக முன்வைக்கும் ஆதாரங்கள் மேற்கூறப்பட்ட இரு ஸஹாபாக்களினதும் சம்பவங்களாகும். அந்த சம்பவங்கள் எவை? அவற்றில் யாது கூறப்பட்டுள்ளது? அவற்றின் தரம் என்ன? அவற்றில் உள்ள சிக்கல்கள் என்ன? போன்றவற்றை தெளிவுபடுத்துவதே எமது நோக்கமாகும்.

அபூஅய்யூப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தி:

ஒருமுறை மர்வான் என்பவர் ஒரு மனிதர் தமது முகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது வைத்திருப்பதைக் கண்டார். அவர் ‘நீங்கள் என்ன காரியம் செய்கிறீர் என்று அறிவீர்களா?’ என அந்த மனிதரிடம் கேட்டார். அந்த மனிதர் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் என்பதை மர்வான் அறிந்து கொண்டார். அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஆம், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்திருக்கின்றேன். மாறாக இந்தக் கல்லிடம் நான் வரவில்லை’ என்று மர்வானுக்கு பதிலளித்தார்கள்.

இதுவே அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியாகும்.

இந்த செய்தி முஸ்னத் அஹ்மத் (5/422), ஹாகிம் (4/515) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியானது என்று இமாம் ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார். அதற்கு இமாத் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் உடன்பட்டுள்ளார்.

ஆயினும், இவர்கள் இருவரினதும் இத்தீர்ப்பு பிழையானது. ஏனெனில், இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவருடைய ‘மீஸானுல் இஃதிதால் (2/9)’ என்ற நூலில் இந்த செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய தாவூத் இப்னு அபீஸாலிஹ் என்பவரைப் பற்றி ‘இவர் ஹிஜாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர், இவர் யார் என்று அறியப்படவில்லை’ என்று கூறியிருக்கின்றார்கள். இக்கருத்தை இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவருடைய ‘தஹ்தீபுத் தஹ்தீப்’ என்ற நூலில் ஆதரித்துள்ளார்.

அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: இவ்வாறு அறியப்படாத அறிவிப்பாளர் ஒருவர் இதில் காணப்படும்போது எவ்வாறு இந்த செய்தி சரியானது என்று கூற முடியும்? (ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அள்ளஈபா: ஹதீஸ் இலக்கம்: 373)

இமாம் அபூஸுர்ஆ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘தாவூத் என்பவரை ஒரேயொரு ஹதீஸின் மூலமே நான் அறிவேன். அதுவும் ‘முன்கர்’ எனும் வகையைச் சேர்ந்த பலவீனமான ஹதீஸாகும்’ என்று இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.

இமாம் அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘தாவூத் என்பவர் அறியப்படாத ஒரு நபராவார், இவர் ‘முன்கர்’ எனும் பலவீனமான ஒரு ஹதீஸை அறிவித்திருக்கின்றார். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் (3/188)

இமாம் தபரானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த செய்தியை அவருடைய ‘அல்கபீர் (4/189, 3999)’ என்ற கிரந்தத்திலும் ‘அல்அவ்ஸத் (1/18/1/282)’ என்ற கிரந்தத்திலும் பதிவு செய்துள்ளார். அவர் அறிவித்துள்ள செய்தியின் அறிவிப்பாளார் வரிசையில் மேற்கூறப்பட்ட தாவூத் இப்னு அபீஸாலிஹ் என்பவர் இடம்பெறவில்லை.

ஆயினும், இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இமாம் தபரானீயின் ஆசிரியர் அஹ்மத் இப்னு ருஷ்தீன் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பொய்யைக் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட ஓர் அறிவிப்பாளர் ஆவார். இமாம் இப்னு அதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவரைப் பற்றி ‘இவரை அறிஞர்கள் பொய்யர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இவருடைய இன்னும் சில விடயங்களும் கண்டிக்கப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார். இவர் அறிவித்த சில பொய்யான செய்திகளை இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இனங்காட்டியுள்ளார். (ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அள்ளஈபா: ஹதீஸ் இலக்கம்: 47)

மேலும், இவ்வறிப்பாளர் வரிசையில் முத்தலிப் இப்னு அப்தில்லாஹ் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இமாம் அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: முத்தலிப் இப்னு அப்தில்லாஹ் என்பவருடைய பெரும்பாலான ஹதீஸ்கள் ‘முர்ஸல்’ எனும் வகையைச் சேர்ந்த பலவீனமான ஹதீஸ்களாகும். இவர் ஸஹ்ல் இப்னு ஸஃத், அனஸ் இப்னு மாலிக், ஸலமத் இப்னுல் அக்வஃ மற்றும் இவர்களுடன் இருந்த சில ஸஹாபாக்களைத் தவிர வேறு ஸஹாபாக்களை இவர் அடைந்துகொள்ளவில்லை. (ஜாமிஉத் தஹ்ஸீல்: பக்கம் 281)

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் ‘முத்தலிப் இப்னு அப்தில்லாஹ் என்பவர் அதிகமாக ஹதீஸ் விடயத்தில் (தத்லீஸ்) இருட்டடிப்புச் செய்யக்கூடியவர், மேலும், அதிகமாக ‘முர்ஸல்’ எனும் பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்புச் செய்யக்கூடியவர்’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். (தக்ரீபுத் தஹ்தீப்: பக்கம் 949)

எனவே, அஹ்மத், ஹாகிம் ஆகிய கிரந்தங்களில் பதிவான செய்தியும், இமாம் தபரானீ ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கும் செய்தியும் பலவீனமானவை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. அறிவிப்பாளர் வரிசையில் சில சிக்கல்கள் இருப்பதால் இந்த சம்பவத்தை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை புரிந்திருப்பீர்கள்.

இந்த செய்தியை அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பலவீனமானது என்று கூறிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு கப்ருகளைத் தொட்டு பரகத் தேடுவது கூடும் என்ற கருத்து பின்வந்த சில மனிதர்களிடம் பரவலாகிவிட்டது. ஏனெனில், அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது முகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது வைத்ததாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பரகத் தேடும் நோக்கில்தான் கப்ரைத் தொட்டார்கள் என்று இவ்வாதாரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு நீங்கள் அறிந்தவாறு இந்த சம்பவத்தின் அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமானதே.

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் போன்ற உறுதிமிக்க சில மார்க்க அறிஞர்கள் கப்ருகளைத் தொட்டு முத்தமிட்டு பரகத் தேடுவதை கண்டித்திருக்கின்றார்கள். மேலும், இச்செயல் கிறிஸ்தவர்களுக்குரிய செயலுமாகும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அள்ளஈபா: ஹதீஸ் இலக்கம்: 373)

இந்த செய்தியில் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது முகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஏனெனில், முகத்தை கப்ரின் மீது வைக்கின்ற அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு உயர்ந்திருக்கவில்லை. மாறாக அவர்களுடைய கப்ரு நிலத்தில் சமப்படுத்தப்பட்டதாக இருந்திருக்கின்றது. எனவே, அவர்களது கப்ரை யாராவது முத்தமிடுவதாக இருந்தால் ஸுஜூது செய்தவராகவே முத்தமிட முடியும். ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு ஸுஜூது செய்துள்ளார்கள் என்று எவராலும் கூற முடியுமா?

இதற்கு ஆதாரமாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள். பயம் மட்டும் இல்லையாயின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். (புஹாரீ: 1330)

பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தி:

பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் கண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘பிலாலே! ஏன் என்னைச் சந்திக்க வராமல் தூரமாக இருக்கின்றீர்கள்? என்னைச் சந்திக்க உங்களுக்கு நேரம் வரவில்லையா?’ என்று கனவில் கேட்டார்கள். பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கவலைப்பட்டவராக விழிப்புணர்வுடன் காணப்பட்டார்கள். பயந்தவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கப் புறப்பட்டார்கள். தனது வாகனத்தின் மீது ஏறி, மதீனாவை நாடிச் சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரைச் சந்திக்கச் சென்றார்கள். அவர்களுடைய கப்ருக்கருகில் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழத்தொடங்கினார்கள். தமது முகத்தைக் கப்ரின் மீது வைத்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அங்கு வந்தார்கள். அவ்விருவரையும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டார்கள். பின்பு அவர்கள் இருவரும் ‘பிலாலே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக நீங்கள் பள்ளிவாசலில் கூறிய அதானைச் செவிமடுப்பதற்கு எங்களுக்கு ஆசையாக உள்ளது’ எனக்கூறினார்கள். பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதற்குச் சம்மதித்து பள்ளிவாசலின் மேல் பகுதிக்கு ஏறி இதற்கு முன்பு அவர்கள் அதான் கூறிய இடத்தில் நின்று அதான் கூற ஆரம்பித்தார்கள். அவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறியபோது மதீனா நகரம் நடுங்கத் தொடங்கியது. மேலும், அவர் ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியபோது முன்பை விட அதிகமாகவே மதீனா நடுங்கத் தொடங்கியது. அவர் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறியபோது திரைக்கு அப்பால் இருந்த கண்ணிப் பெண்கள் (வீடுகளை விட்டும் ) வெளியே வந்தனர். அவர்கள் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் (கப்ரிலிருந்து) எழுந்து விட்டார்கள்’ என்று கூறிக்கொண்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு இந்த நாளைவிட வேறு எந்த நாளிலும் மதீனாவில் அழக்கூடிய அதிகமான ஆண்களோ பெண்களோ காணப்படவில்லை.

இந்த சம்பவம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக பதிவாகியுள்ளது.

இமாம் இப்னு அஸாகிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை தனது ‘தாரீஹு திமிஷ்க்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இமாம் இப்னு அப்தில்ஹாதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘அஸ்ஸாரிமுல் முன்கீ’ என்ற தனது நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்: இது ஒரு அபூர்வமான செய்தியாகும். மேலும், முன்கர் எனும் வகையைச் சேர்ந்த பலவீனமான செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் அறியப்படாத ஒரு நபர் இடம்பெற்றுள்ளார். மேலும், இவ்வறிவிப்பாளர் வரிசையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. (பக்கம்: 230)

மேலும், இமாமவர்கள் இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய இப்றாஹீம் இப்னு முஹம்மத் என்பவர் ஹதீஸ்களை எத்திவைப்பதில் அறியப்படாத ஒரு நபர் என்றும், ஹதீஸ்களை அறிவிப்பதில் பிரசித்திபெறாத ஒர் அறிவிப்பாளர் என்றும் விமர்சித்துள்ளார்.

இப்றாஹீம் இப்னு முஹம்மத் என்பவர் அறியப்படாத ஒரு நபர் என்று இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார். (மீஸானுல் இஃதிதால்: 1/64)

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ‘அல்லிஸான்’ என்ற நூலில் இவர் அறியப்படாத ஓர் அறிவிப்பாளர் ஆவார்’ என்று விமர்சித்துள்ளார். (1/107)

மேலும், இதே நூலில் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘இந்த சம்பவம் இட்டுக்கட்டப்பட்டது என்பது மிகவும் தெளிவானதே’ என்று கூறியுள்ளார். (1/107)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ஏனையோரின் கப்ருகளைப் போன்று வெளிப்படையாக இருந்தது, விரும்பியவர்கள் அதனைப் பார்வையிட முடியும் என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகின்றது. இந்த சம்பவம் ஓர் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகின்றது.

ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களினது மரணத்திற்குப் பின்பும் அவருடைய அறைக்குள் தான் அமைந்திருந்தது. ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களினது அனுமதியின்றி யாருக்கும் அந்த அறைக்குள் நுழைய முடியாது.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணத்தருவாயில் இருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அருகில் தாம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அனுமதி கேட்க, அவர்களும் அனுமதி வழங்கினார்கள். (ஹாகிம்: 3/93)

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, வெட்கத்தின் காரணமாக ஆடையால் தம்மை மறைத்தவர்களாகவே அந்த அறைக்குள் நுழைவார்கள். (ஹாகிம்: 4/7)

இந்த செய்திகள் யாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு அறைக்குள் இருந்ததாகவும் விரும்பியவர்கள் அதனைப் பார்வையிட முடியவில்லை என்பதையும் எமக்குத் தெரிவிக்கின்றன. இவ்வாறு இருக்கும்போது பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வாறு எவருடைய அனுமதியின்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கப்ருக்கு தன் இஷ்டப்படி வந்திருக்க முடியும்? எனவே, இந்த சம்பவம் கப்ரு பக்திகொண்டவர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.

நன்றி: salaf.co

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *