Featured Posts

பிரச்சனைகளை அணுகும் முறைகள்

–மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
மனிதர்களை அல்லாஹ் பிரச்சனைகளுக்கு மத்தியில் படைத்துள்ளான். அந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் மிக அழகான முறையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாக வழிக்காட்டியுள்ளான். மார்க்கம் சொல்லும் வழிகளில் அந்த, அந்த பிரச்சனைகளை நாம் அணுகுவோம் என்றால் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மிக இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும்.

இரண்டு நண்பர்களுக்கு இடையில், அல்லது கணவன் மனைவிக்கு இடையில் அல்லது ஜமாத்தார்களுக்கு இடையில், சில பிரச்சனைகள் வரும். அது போல அரசியல் ரீதியாக மக்களுக்கும். அல்லது ஒரு சமுதாயத்திற்கும் வரலாம். இப்படியான சந்தர்பங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனைகளை தீர்க்கும் வழிகள்

பின் வரும் குர்ஆன் வசனங்களை முதலில் கவனியுங்கள்.

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (49-09)

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (49-10)

இந்த குர்ஆன் வசனங்கள் மூலம் ஒரு சமுதாயத்தில் பிரச்சனையின் காரணமாக இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டால் அவர்களை சமாதானப் படுத்தி வைய்யுங்கள் என்று அல்லாஹ் நமக்கு வழிக் காட்டுகிறான். எனவே நடுநிமையான நடுவர் கூட்டம் ஒன்று சரியான முறையில் சமாதானப்படுத்தி வைக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.

பல வழிகளில் சமாதனத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களில் ஒரு கூட்டம் இறுதி வரை சமாதானத்திற்கு முன் வராவிட்டால், சமாதானத்திற்கு வரும் கூட்டத்துடன் நீங்கள் இணைந்து அவர்களுக்கு எதிரராக போராடுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

முஸ்லிம்கள் சமாதானமாகவே வாழ வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

கணவன் மனைவி பிரச்சனை…
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் உடனே தலாக் என்ற நிலைக்கு போய்விடக் கூடாது. முடிவுகள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்க கூடாது.

கணவன் மனைவி முறிவுக்கு முன் பல வழிகளை இஸ்லாம் காட்டித் தருகிறது. அதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் இப்படி கூறுகிறான்.

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் – நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (4-35)

இந்த வசனத்தின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு ஒரே அடியாக பிரிவது கிடையாது. பிரச்சனையை முடிந்தளவிற்கு சுமூகமாக பேசி தீர்த்து வைக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.

இரண்டு தரப்பாலும் நேர்மையான இரண்டு சாரார்கள் பேசி சமாதனப்படுத்தி வைக்க வேணடும் எனபதை படைத்தவன் சொல்லித்தருகிறான்.

மேலும் தொடர்ந்து அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்.

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (4-34)

இந்த வசனத்திலும் தீர்வுக்கு முடிவு பிரிதல் கிடையாது, என்பதை அல்லாஹ் நமக்கு அழகாக சொல்லித் தருகிறான். மனைவி தவறு செய்யும் போது முதலாவது சிறந்த உபதேசங்களை செய்ய வேண்டும். அதற்கு மனைவி கட்டுப்படா விட்டால் இரண்டாவதாக படுக்கையிலிருந்து சற்று தள்ளி வையுங்கள் அதற்கும் மனைவி கட்டுப்படாவிட்டால் (காயம் ஏற்படாத அளவிற்கு லேசாக) அடியுங்கள்.அவைகள் அனைத்தும் செய்த பின்பும் சேர்ந்து வாழ முடியாவிட்டால் அழகிய முறையில் பிரிந்து விடுங்கள் என்று இஸ்லாம் நமக்கு வழிக்காட்டுகிறது.

இருந்தாலும் பிரியும் போதும் கூட ஒரே அடியாக பிரிந்து விடக் கூடாது படிப்படியாக தான் தலாக் சொல்ல வேண்டும்.என்று பிரச்சனைக்கு அழகான முறையில் வழிக்காட்டுகிறது. இப்படி சகல விடயத்திற்கும் இஸ்லாம் நமக்கு வழிக்காட்டுகிறது.

அணுகு முறையும் ஆர்ப்பாட்டங்களும்…
அரசியல் ரீதியாகவோ, அல்லது அரசாங்க ரீதியாகவோ, அல்லது தனிப்பட்ட குழுக்கல் மூலமாகவோ சில பிரச்சனைகள் வரும் போது அந்த பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் எடுத்த உடன் ஆர்ப்பாட்டங்கள் என்று களத்தில் குதிப்பதன் மூலம் பல விபரீதங்களை சம்பந்தப்பட்டவர்களும், அந்த சமுதாயமும் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

ஒரு விடயம் எங்களுக்கு பாதகமாக வருகிறது என்றால் முதலில் அந்த விடயத்தை யார், ஏன் கொண்டு வந்துள்ளார்கள் அல்லது ஏன் எங்களுக்கு எதிராக துாண்டுகிறார்கள் என்பதை நிதானமாக சிந்தித்து அதற்கான ஆலோசனைகள் செய்து இறுதி முடிவெடுக்க வேண்டும்.

ஒரு தனி நபரின் பிரச்சனை என்றால் அதை எப்படி அணுகுவது, அல்லது ஒரு குழுவின் பிரச்சனை என்றால அந்த பிரச்சனையை எப்படி அணுகுவது. அல்லது ஒரு அரசியல் சார்பான பிரச்சனை என்றால் அதை எப்படி அணுகுவது என்பதை நிதானமாக சிந்தித்து களத்தில் இறங்க வேண்டும்.

பிரச்சனை ஏற்பட்டவுடன் முதலில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று சகலரும் சேர்ந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

குறிப்பாக நாட்டுக்கு நாடு சட்டங்கள், அதிகாரங்கள் வித்தியாசப்படும் அதை சரியாக கவனித்து சாணக்கியமாக செயல் படவேண்டும்.

இஸ்லாம் நமக்கு அப்படி தான் வழிக்காட்டுகிறது. முதலில் பேச்சுவார்த்தை அந்த பேச்சுவார்த்தை தோல்வியுறும் சந்தர்ப்பத்தில். அடுத்ததாக என்ன செய்யலாம் என்பதை ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதாரங்களை கவனிப்போம்…
சுலைமான் நபி ஆட்சி காலத்தில் ஸபவு நாட்டு அரசியுடன் களத்தில் இறங்கி போர் செய்யும் முன் ஹூத், ஹூத் பறவையின் மூலம் ஒரு கடிதத்தை கொடுத்து தூதாக அனுப்புகிறார்கள். அந்த கடிதத்தில் முதலில் சமாதானமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வரும்படியும், இல்லாவிட்டால் போர் நடக்கும் என்றும் எச்சரிக்கை கலந்த கடிதம் தூதாக செல்கிறது. அழகிய அணுகுமுறையால் அந்த நாட்டு அரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

சுலைமான் நபி எடுத்த எடுப்பிலே யுத்தத்தில் இறங்கவில்லை, எதை எப்படி அணுக வேண்டும் என்று தஃவா களத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

நபியவர்கள் காலத்து ஆதாரங்கள்…
நபி (ஸல்) அவர்கள் பல நாட்டு அரசர்களுக்கு முதலில் இஸ்லாத்தைப் பற்றி கடிதம் அனுப்பினார்கள். பிரச்சனைகள் தலை துாக்கும் போது தனது தோழர்களோடு கலந்தாலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.

பத்ரு யுத்தம் செய்வதற்கு முன் பல தடவைகள் ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்த பிறகு யுத்ததிற்கு இறங்கினார்கள்.

ஹுதைபிய்யா உடன் படிக்கையில் பல விதமான குழப்பத்திற்கு மத்தியிலும் நிதானமான முறையில் முடிவெடுத்து வெற்றி கண்டார்கள். நாங்கள் அதிக பலம் உடையவர்களாக இருக்கிறோம் யுத்தம் செய்வோம் என்று ஸஹாபக்கள் நபியவர்களிடத்தில் வேண்டிய போதும் பிரச்சனையை நபியவர்கள் விரும்பவில்லை. சாணக்கியமாக வெற்றிக் கண்டார்கள்.

எனவே எந்த சமுதாய பிரச்சனையாக இருந்தாலும் அது சம்பந்தமான துறையினர்களோடு சேர்ந்து வெற்றிகான முயற்ச்சி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *