Featured Posts

நடுநிலை தவறி நாறிப்போவதேன்! (சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலா?)

நடுநிலை தவறி நாறிப்போவதேன்!
(சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலா?)

இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். எதையும் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலை தவறாமல் நோக்குவதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய உம்மத்தை அல் குர்ஆன் ‘உம்மதன் வஸதா” நடுநிலை சமுதாயம் என்றே அடையாளப்படுத்துகின்றது.

‘(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத்தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். ” (2:143)

ஆனால், கொள்கை வெறியுடன் கலந்த இயக்க வெறி இந்த இஸ்லாமிய பண்பை அழித்து விட்டது. எதையும் இயக்கக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதையும் நோக்குவதையும் வழக்கமாக மாற்றியுள்ளது.

அண்மையில் ஏற்பட்டுள்ள சவூதி-கட்டார் முறுகல் நிலை குறித்து சில அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றேன். சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலையும் விரிசலையும் ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கை சமூக வலைத்தளங்களில் இருபக்கமும் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த விமர்சனங்களால் இலங்கை வாழ் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படப் போகின்றதா? என இருபக்கத்தில் உள்ளவர்களும் யோசிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த விமர்சனத்தை சவூதி அலர்ஜி அறிஞர்கள்தான் ஆரம்பித்து வைத்தனர். நிதானமாக நடுநிலையாக சிந்தித்துப் பார்த்தால் முஸ்லிம் உம்மத்திற்கு நலன் பயக்கும் நாடுகளில் சவூதி முன்னணியில் இருப்பது தெரியவரும். இருப்பினும் சில இஹ்வானிய அறிஞர்கள் சவூதி என்றாலே வெறுப்போடு நோக்கும் மனநிலைக்கு வந்துள்ளனர்.

சவூதி-கட்டார் இரண்டு நாடுகளுமே தமது அரசியல் நலனையும் இஸ்தீரத் தன்மையையும் இலக்காகக் கொண்டுதான் இயங்குகின்றன. ஆனால், மார்க்கரீதியாக ஒப்பிட்டுப் பார்த்தால் சவூதியின் நிலை கட்டாரின் நிலையை விட போற்றத்தக்கது என்ற உண்மையை நடுநிலையாக நோக்கினால் உணரலாம்.

மன்னராட்சி:
சவூதியில் மன்னராட்சி நடப்பதால் அதை சிலர் வெறுப்போடு பார்க்கின்றனர். சவூதி-கட்டார் இரண்டிலுமே மன்னராட்சிதான் நடை பெறுகின்றது. இதே வேளை, இஸ்லாத்தில் மன்னராட்சி தடுக்கப் பட்டதன்று. தாவூத் நபிக்குப் பின்னால் அவரது மகன் சுலைமான் நபி வாரிசு அடிப்படையில் மன்னராக வந்துள்ளார்.

‘சுலைமான், தாவூதுக்கு வாரிசானார்.” (27:16)

தந்தைக்குப் பின் தனயன் அல்லது முதல் தலைவரால் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்படுவதுதான் மன்னராட்சியின் அடிப்படையாகும். உமர்(ர) அவர்களுக்குப் பின் அவரது மகன் தலைவராக வேண்டும். என்று சிலர் எதிர்பார்த்துள்ளனர். அலி(ர) அவர்கள் மரணித்த பின்னர் அவரது மகன் ஹஸன்(ர) அவர்களை நபித்தோழர்கள் தலைவராகத் தெரிவு செய்துள்ளனர். இவையெல்லாம் ‘மன்னராட்சி” பிழையானதன்று என்பதையே உணர்த்துகின்றது.

உமையா ஆட்சி, அப்பாஸிய ஆட்சி, உஸ்மானிய கிலாபத் அனைத்துமே மன்னராட்சி முறையில்தான் நடந்தது. எனவே, மன்னராட்சி முறையே முற்றாகத் தடை செய்யப்பட்டது போன்று சித்திரிப்பது தவறானதாகும்.

அமெரிக்கா ஆதரவு:
இஸ்லாமிய நாடுகளில் பலவும் அமெரிக்கா ஆதரவு கொள்கையைக் கொண்டுள்ளன. சவூதியும் அமெரிக்கா ஆதரவு நாடாகும். இதை வைத்தும் சவூதி விமர்சிக்கப் படுகின்றது.

சவூதி-அமெரிக்க ஆதரவு நாடு என்றால் கட்டாரின் நிலையும் இதுதான். அமெரிக்காவுடன் முறுகல் போன்று ‘சீன்” போட்டுக் கொண்டிருந்த ஈரானும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் உண்மையான நட்பு நாடாகும். இந்த அடிப்படையில் சவூதி-கட்டார் இரண்டுமே ஒன்றுதான்.

எனவே, இந்தக் குற்றச் சாட்டைச் சொல்லி எந்தத் தரப்பும் அடுத்த தரப்பை விமர்சிக்க முடியாது. சவூதி-கட்டார் இரு தரப்பு சார்பானவர்களின் தனிப்பட்ட சில நடவடிக்கைகளை வைத்தும் இரு தரப்பு விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி சவூதி வந்த போது, மன்னர் சல்மான் பெண்ணுடன் கைலாகு கொடுத்தார். இது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போது, யூசுப் கர்ழாவி, அர்தூகான், முர்ஸி, தவக்குல் கர்மானி போன்றோரின் கைலாகு கொடுக்கும் போட்டாக்களைப் போட்டு எதிர்த்தரப்பு விமர்சனம் நடைபெறுகின்றது. ஆணும், பெண்ணும் கைகொடுப்பது மார்க்க ரீதியில் தவறானதாகும். இதை யார் செய்தாலும் தவறைத் தவறு என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். இதை சமூக வலைத்தளங்ளில் போட்டு விமர்சிப்பதால் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்கின்றோம். இதைப் பார்க்கும் அந்நிய மக்கள் இவர்கள் எல்லாம் கை கொடுக்கின்றனர். இலங்கை முஸ்லிம்கள்தான் கை கொடுக்கவும் மாட்டார்கள், கையெடுத்துக் கும்பிடவும் மாட்டார்கள். இவர்கள் அடிப்படைவாதிகள் என்று எம்மை எமது நாட்டு மக்கள் பிழையாகப் பார்க்கும் நிலையைத்தான் இது ஏற்படுத்தும்.

பொதுவாக தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விமர்சன ஜமாஅத்தாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், இஹ்வான்கள் தூரநோக்கும், ஆழமான ஆய்வும், பார்வையும் கொண்டவர்கள் எதையும் சமூக நலன் நாடிப் பார்ப்பார்கள். ‘உம்மா”வின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். ஒற்றுமைக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றெல்லாம் அவர்களாலேயே அவர்கள் ஏற்றிப் போற்றப்படுகின்றார்கள். இப்படி இருக்க, இஹ்வானிய சிந்தனை சார்ந்த அறிஞர்கள் சவூதி-கட்டார் பிரச்சினையை இலங்கை ஸலபி-இஹ்வானிய பிரச்சினையாக மாற்றும் அளவுக்கு கடுமையான விமர்சனமாக ஏன் மாற்றினார்கள்? இது நியாயமானதா?

இஹ்வான்கள் ஒற்றுமைக்காக ஷிர்க்கைக் கூட எதிர்க்காமல் விடுவோம் என்று கூறுபவர்கள், ஏதோ முஸ்லிம் நாடுகள் சில ஒன்றிணைந்துள்ளன. அந்தக் கூட்டமைப்பை முறித்துக் கொண்டு கட்டார் தனி வழி நடப்பதை ஏன் கண்டு கொள்ளவில்லை?

சவூதியா? ஈரானா? என்றால் கொள்கை நடைமுறை அனைத்திலுமே சவூதி உயர்ந்திருக்கும் போது ஈரானுடன் நெருக்கத்தை ஏற்படுத்தத் துடிக்கும் கட்டாரின் போக்கை அவர்கள் கண்டிக்கவில்லை.

தேசியவாத உணர்வு அரபி-துருக்கி முரண்பாடுகள்தான் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பிரச்சினையுடன் பிரச்சினையாகத் துருக்கியைத் தூக்கிப் பிடித்து சவூதிக்கு எதிராகத் துருக்கியை முற்படுத்த நினைப்பது ஏன்? துருக்கிய தலைவரை சுல்தானுல் அழீம், சுல்தானுல் உம்மா என்றும் இஸ்தான்புலை முஸ்லிம் கிலாபத்தின் முன்னாள், இந்நாள் எதிர்காலத் தலைமையகமாக இஹ்வான்கள் சித்தரிப்பது நியாயமா?

இப்படி இந்தப் பிரச்சினையில் ஏராளமான நடுநிலைத் தவறுகள் இரு தரப்பிலும் நடந்தேறியுள்ளன. இன்றைய இஸ்லாமியத் தலைமைகளில் ஸல்மான் – அர்தூகான் இருவரும் முக்கியமானவர்கள். இஸ்லாமிய உம்மத்தை விழிக்க வைக்கக் கூடிய முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இவர்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படுவதே எதிர்கால இஸ்லாமிய உலகுக்கு ஏற்றதாக இருக்கும்.

இதுவரை உலக முஸ்லிம் அரசியல் தலைமைகள், ஷீயா-சுன்னா என்கின்ற இரு கோணத்தில்தான் இருந்தன. சவூதி – கட்டார் முறுகளுடன் ஸலபி அரசு-இஹ்வானிய அரசு என்ற இன்னொரு முரண்பட்ட நிலை தோன்றுவது இஸ்லாமிய உலகுக்கு ஆரோக்கியமானதன்று.

கட்டார்-சவூதி முரண்பாடு சுமூக நிலைக்கு வரவேண்டும். முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில் நல்லுறவு மலர வேண்டும். இதற்காக இரு தரப்பும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

அப்படியும் நல்லுறவு ஏற்படாவிட்டால் இது அவர்களது அரசியல் நலன் நாடியது. நாம் நமது நாட்டு சூழலைக் கவனத்தில் கொண்டு சவூதி – கட்டார் பிரச்சினையை இலங்கை தமிழ் பேசும் மக்களிடமும் கொண்டு வராமல் நடந்து கொள்வதுதான் ஆரோக்கியமானதாகும். இதில் ஒரு தரப்பு விமர்சனங்களைச் செய்யும் போது அடுத்த தரப்பு மௌனம் காப்பது கஷ்டமான நிலையாகும். அதைக் கவனத்தில் கொண்டு இருதரப்பும் அமைதிகாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

One comment

  1. Masha Allah a very clear view point. We should not criticize each other beyond the limit. We should maintain the dignity and respect of others when we criticize them. May Allah bless this Ummah!

    May Allah bless Sheik Ismail Salafi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *