– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
ஆசிரியர் பக்கம்
ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும், காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை வளர்க்கும் மரபு நீங்கி, காளை இனத்தை அழிக்கும் சதித்திட்டமாக இதைப் பார்த்தனர். இந்தத் தடைக்குப் பின்னால் வியாபார மாஃபியாக்களின் சதித்திட்டம் இருப்பதாகக் கருதுகின்றனர்.
எனவே, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மெரீனா கடற்கரையில் நூறாய், ஆயிரமாய், இலட்சங்களாய் மாணவர்கள் அணிதிரண்டனர். மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாகப் பரிணமித்தது. மாணவர்களின் போராட்டத்திற்கு மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்தனர். மெரீனா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சிக் கோஷங்களால் கடலே கொந்தளித்தது.
பொதுவாக மாணவர்கள் சமூக அக்கறையற்றவர்களாகக் காட்டப்படுகின்றனர். பெண்கள் பின்னால் சேட்டை செய்து திரிபவர்களாக சித்திரிக்கப்படுகின்றனர். ஆனால், மெரீனா போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள் பற்றிய அத்தனை தப்பெண்ணங்களையும் தவிடுபொடியாக்கியது.
மாணவர்கள் கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்தி வந்தனர் இன, மத பேதமில்லாமல் அவர்களின் குரல் ஒலித்தது.
ஆதிக்க சக்திகளுக்கு இது பிடிக்காது என்பது அனைவரும் அறிந்ததே! மாணவர்கள் எழுச்சி பெற்றுவிட்டால், ஒவ்வொரு சமூகக் கொடுமைக்கும் எதிராக அவர்கள் களம் குதித்தால் தமது தளம் தகர்ந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
எனவே, போராட்ட இளைஞர்களைப் பொறுக்கிகளாக்க முனைந்தனர். போராட்டத்தை ஆபாசமாகச் சித்திரிக்க முற்பட்டனர். முஸ்லிம், ஹிந்து என்ற மத பாகுபாட்டை உருவாக்க முயன்றனர். அத்தனை சதித்திட்டங்களும் சரிந்து போனபோது அவர்கள் கற்று வைத்திருந்த மற்றுமொரு கட்டத்திற்கு மாறினர்.
திட்டமிட்டு பொது மக்கள் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டு மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. காவல்துறையினரே வாகனங்களுக்குத் தீ வைக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடில்லாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டனர். மாணவர்களின் அறப் போராட்டம் தீவிரவாதப் போராட்டமாகச் சித்திரிக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் எமக்கு சில உண்மைகளை உணர்த்துகின்றது.
உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்:
சமூக உணர்வுகளும் மரபுகளும் மதிக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் உணர்வை ஊணப்படுத்தும் விதத்தில் நீதித்துறை நடந்து கொள்ளக் கூடாது. இது எல்லா சமூகத்திற்கும் பொருந்தும். முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நீதித் துறையோ, காவல்துறையோ செயற்படும் போது ஜல்லிக்கட்டுக்காக தமிழர்களின் உணர்வுகள் கொந்தளித்தது போன்றே, முஸ்லிம்களினதும் உணர்வுகளும் கொந்தளிக்கின்றது. இந்தக் கொந்தளிப்பின் நியாயத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது உள்ளது.
விளையாட்டு என்பது அல்ல முக்கியம்:
தடை செய்யப்பட்டது ஒரு விளையாட்டுத்தானே என தமிழ் இன ஆர்வலர்கள் கருதவில்லை. தமது கலாசாரத்தில் கை வைக்கப்படுவதாக அவர்கள் பார்த்தனர். இதே போன்றுதான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று கூறும் போதும், பலதார மணம் தடுக்கப்பட வேண்டும் என்று கூறும் போதும், பொது சிவில் சட்டம் என்று கூறும் போதும் இவற்றை வெறும் சாப்பாட்டுப் பிரச்சினையாகவோ, திருமணப் பிரச்சினையாகவோ முஸ்லிம்கள் பார்க்கவில்லை. இதை மறைமுகமாகத் தமது மார்க்கத்திலும் மத உரிமையிலும், மத உணர்விலும் கைவைக்கப் படுவதாகக் கருதுகின்றனர்.
எனவே, தமது மத உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் கோஷமிடுகின்றனர், போராடுகின்றனர்.
ஜீவகாருண்யம் உண்மைக் காரணம் அல்ல:
ஜல்லிக்கட்டு மூலம் மிருகவதை நடைபெறுவதாக ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் இவர்கள் ஜீவகாருண்யத்தால் இப்படிக் கூறவில்லை. இவர்களின் ஜல்லிக்கட்டு தடைதான் காளை இனத்தை அழிக்கும். இவர்கள் காளை மாட்டின் மீது பாசம் போன்று வேஷம் போட்டு தமது நாசகாரத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இதே போன்றுதான் முஸ்லிம்கள் மாடு அறுப்பதை எதிர்ப்பவர்கள் மாட்டின் மீது பாசத்தில் அதை எதிர்க்கவில்லை. இஸ்லாமிய எதிர்ப்புடனேயே அதை எதிர்க்கின்றனர்.
எனவே, இந்த வேடதாரிகளின் சதிவலையில் விழுந்துவிடாதிருக்கும் விதத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
தீவிரவாதப் பட்டம்:
முஸ்லிம்கள் தொடர்ந்து தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுகின்றனர். நாசகார வேலையைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் போட்டு முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி அவர்களை அழிப்பதைத்தான் இந்த ஆதிக்க சக்திகள் இதுவரை செய்து வருகின்றன.
தமிழக மாணவர் போராட்டத்திற்கு மீடியாக்களின் ஆதரவு இல்லாவிட்டால் மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்கள், வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? என்ற மனநிலைக்கு மக்கள் வந்திருப்பர். மீடியாக்களின் உதவியால் உண்மை உலகுக்குத் தெரிந்தது. காக்கி சட்டையின் காட்டு தர்பார் மக்களுக்குப் புரிந்தது.
ஆனால், முஸ்லிம்கள் விடயத்தில் மீடியாக்களின் உதவி கிடைக்காத போது தொடர்ந்தும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆதிக்க வெறியினர் அறவழிப் போராட்டக்காரர்களைத் தப்பாகச் சித்தரிக்க தாமே அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைப் போராட்டக்காரர்கள் தலையில் போடுகின்றனர் என்ற உண்மை இதன் மூலம் உணர்த்தப்பட்டுவிட்டது.
தமிழ் மக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்து அரசியல் செய்து வருகின்றது ஒரு கூட்டம். தமிழ் பேசும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை மத வெறி கொண்ட அரசியல் சக்திகள் ஒருபோதும் விரும்பவே விரும்பாது.
எனவே, இந்த அடிப்படையைப் புரிந்து இன வெறியையும், மத வெறியையும் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் இனத்தின் மீதும், மதத்தின் மீதும் பற்றுக் கொண்டு இதைச் செய்யவில்லை. தமது சுயநலமிக்க அரசியல் உள்நோக்கங்களுக்காகவே பிரிவினையை விதைக்கின்றனர் என்ற உண்மையையும் இதன் மூலம் உணரலாம்.
ஜல்லிக்கட்டுப் போராட்டமும் அது திசை திருப்பப்பட்ட விதமும், உலக அரசியலின் ஓட்டத்தையும், ஆதிக்க சக்திகளின் அடாவடி அரசியலின் தன்மையையும் தெளிவாகத் தோலுரித்துள்ளது.