வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர் எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை.
தவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். எனவே இவர்கள் ஒருபக்கம் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை மொழிந்துகொண்டும் இன்னொரு பக்கம் இணைவைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.
இன்னொரு சாரார் இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இவர்கள் இணைவைக்கும் மக்களை இணைவைப்பாளர்கள் என்றொ அவர்கள் செய்யும் செயலை இணைவைப்பு என்றோ கூறமாட்டார்கள். அவ்வாறு கூறக்கூடாது என்ற தவறான கொள்கையில் இருப்பார்கள். இதில் மென்மைப்போக்கை கடைபிடிப்பார்கள்.
இவர்களும் இணைவைப்பைப் பற்றி சரியாக அறியாதவர்கள் ஆவர். இந்நிலையில் உள்ளவர்கள் தற்போது இணைவைக்காவிட்டாலும் காலப்போக்கில் இணைவைப்பில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஓரிறைக் கலிமாவை மொழிந்த நாம் எக்காலத்திலும் இணைவைப்பில் விழாமல் இருக்க வேண்டும். இதற்கு இப்புத்தகத்தில் கூறப்படும் நான்கு அடிப்படைகள் மிக உதவியாக இருக்கும். ஆண் பெண் பெரியவர் சிறுவர் என அனைவரும் இந்த நான்கு அடிப்படைகளை மனனம் செய்வது அவசியமாகும்.
இவற்றை தெளிவாக அறிந்து மனதில் பதியவைத்தால் ஓரிறைக்கொள்கை ஆழப்பதிந்துவிடும். மறுபடியும் இணைவைப்பில் விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை அல்லாஹ் நாடினால்!
ஷிர்க்கிலிருந்து நாம் முழுமையாக விலகுவதற்கு இரண்டு விசயங்களை அறிய வேண்டும்.
1. நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்க அறிவு இருந்தால் இணைவைப்பில் விழாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள இயலும்.
2. இத்துடன் நபி(ஸல்) அவர்கள் யாருக்கு அழைப்புப்பணிச் செய்தார்களோ அந்த இணைவைப்பாளர்களின் நம்பிக்கை செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டாலும்
இணைவைப்பிலிருந்து தப்பிக்கலாம். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இணைவைப்பாளர்கள் பற்றி தெளிவுபடுத்துவதே இந்த நூலின் சாராம்சம். இது நான்கு அடிப்படைகளைக் கொண்டது.
இந்நூலை மொழிபெயர்க்கும் ஆவல் எனக்குள் இருந்தது. சமீபத்தில் சவூதியின் மூத்த மார்க்க அறிஞர்களில் ஒருவரும் மக்கா மற்றும் மதீனா அகிய இரு ஹரம்களில் இஸ்லாமிய கல்வியை போதிக்கும் ஆசிரியருமான ஷைக். ஸாலிஹ் இப்னு அப்தில்லாஹ் அல்உஸைமீ (ரஹ்) அவர்கள் அல்கோபரில் பள்ளிவாசல் ஒன்றில் இந்நூலை முழுமையாக மக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். அந்த வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கினான். இந்நூலுக்கு அவர்கள் அளித்த விளக்கங்கள் மிகப் பலனுள்ளவை.
எனவே இந்நூலை மொழிபெயர்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதற்குரிய விளக்கங்களையும் சேர்த்துக் கொடுத்தால் இது சமூகத்திற்கு அதிக பலனை அளிக்கும். எனவே இந்நூலை படிப்பவர்கள் தானும் கற்று பிறருக்கும் எடுத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு
S. அப்பாஸ் அலீ Misc
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்
சவூதி அரேபியா
06-042017 (09-07-1438)