அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)
புனிதங்கள் பூத்துக் குலுங்கும் ரமழான் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. வருடா வருடம் இந்த வசந்தம் எங்கள் வாசல் நோக்கி வந்து செல்கின்றது. இந்த வசந்தத்தினால் எமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய முக்கியமான ஒரு வினாவாகும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை எனதும் உங்களதும் உள்ளத்துக்கு உணவாக, உரமாக இங்கே சிதறவிடலாம் என எண்ணுகின்றேன்.
புனித ரமழான் குர்ஆனின் மாதமாகும்:
புனித ரமழான் குர்ஆனின் மாதமாகும். எனவே, குர்ஆனுக்கும் எமக்குமிடையில் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் எற்படுத்தும் விதத்தில் இந்த மாதத்தைக் கழிக்க முற்படுவோம்.
நோன்பு தக்வாவை நோக்கமாகக் கொண்ட அமல்:
நோன்பு தக்வாவை நோக்கமாகக் கொண்ட அமலாகும். எனவே, தக்வா எனும் இறையச்சத்தை வளர்த்துக் கொள்ள முற்படுவோமாக!
நன்மைகள் செய்வதில் ஆர்வம் கொள்வதும் தீமைகளைத் தவிர்ந்து நடப்பதும் தக்வா எனப்படும். தக்வா என்பது ஆடையின் அடையாளம் அல்ல. எனவே, நன்மைகளில் ஆர்வம் காட்டுதல், தீமைகளை விட்டும் ஒதுங்குதல் என்ற பக்குவத்தை நோன்பினூடாக வளர்த்துக் கொள்ள முற்படுவோமாக!
சுயவிசாரணை செய்து கொள்ள நல்ல சந்தர்ப்பம்:
நோன்பும் ரமழானும் நம்மை நாமே சுயவிசாரணை செய்து கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்களாகும்.
எனவே, நம்மை நாமே சுயவிசாரணை செய்து எமது எதிர்காலத்தை சீர் செய்து கொள்ள முற்படுவோமாக!
போதை மற்றும் இன்னோரன்ன கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிடுவதற்கு சிறந்த சந்தர்ப்பம்:
சிகரட், வெற்றிலை, மூக்குத்தூள் போன்ற இன்னோரன்ன தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் தம்மை மாற்றிக் கொள்வதற்கு ரமழான் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். பகலில் 14 மணித்தியாலங்கள் இந்தப் பழக்கத்தை விட்டவர்கள் இரவில் விழித்துக் கொண்டிருக்கும் மீதி சொற்ப நேரத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டால் இது போன்ற இன்னும் பல தீய பழக்கங்களி லிருந்து விடுபட்டு விடலாம்.
செல்வத்தையும், உடல் ஆரோக்கி யத்தையும் கெடுக்கும் இத்தகைய பழக்கங்களி லிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாசப்படுத்திவிடாதீர்கள்!
ரமழானில் ஏற்படும் நல்ல மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க உறுதி கொள்ளல்:
ரமழானில் ஏற்படும் நல்ல மாற்றங்களை ரமழான் முடிந்தவுடன் அவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அடுத்த ரமழானை எதிர்பார்த்து பழைய படி எமது வாழ்க்கையை நாம் மாற்றிக் கொள்ள முற்படாமல்ளூ ரமழான் தந்த நன்மாற்றங்களை எமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உள உறுதியுடன் செயற்பட வேண்டும்.
இம்மாதம் இபாதத், அமலுக்குரியது:
ரமழான் மாதம் என்பது முற்று முழுதாக இபாதத் மற்றும் அமல்களுக்குரிய சிறந்ததொரு மாதமாகும். இம்மாதம் ஓய்வுக்கும், உறக்கத் துக்கும், கேலிக்கைகளுக்கும், சுற்றுப் பிரயா ணங்களுக்கும் ஒதுக்கப்பட்ட மாதமன்று என்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் எமது கடப்பாடாகும்.
நோன்பு உணவையும் பானத்தையும் தவிர்ந்திருப்பது மட்டுமன்று!:
நோன்பு என்பது வெறுமனே உணவையும் பாணத்தையும் தவிர்ந்திருப்பது மட்டுமன்றி வீணான செயல்கள், கெட்ட ஆபாசமான பேச்சுக்கள் மற்றும் பார்வைகள், தப்பான நடத்தைகள், துர்க்குணங்கள் போன்றவற்றை விலகியிருப்பதுமாகும். எனவே, இவற்றில் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அளவோடு உண்டு ஆரோக்கியத்தோடு வாழ்வோம்:
நோன்பு காலத்தில் நாம் சுபஹ் முதல் மஃரிப் வரை உண்ணல், பருகல், என்பவற்றைத் தவிர்த்து வருகின்றோம். ஆனால், ஸஹர், இப்தார், அதன் பின்னர் உணவு என வழமையாக உண்பதை விட சற்று அதிகமாக உண்ணுகின்றோம். எமது உணவில் இனிப்பு, எண்ணெய், கொழுப்பு என அனைத்தையுமே வழமையான உணவுகளை விட இந்தக் காலத்தில் அதுவும் இந்நேரங்களில் அதிகமாகவே எடுத்துக் கொள்கின்றோம். இது பலதரப்பட்ட நோய்களை பலதரப்பட்ட காரணங்களால் ஏற்படுத்திவிடுகின்றன.
எனவே, அளவோடும், முறையோடும் உண்டு வழமோடு வாழ நாம் முற்பட வேண்டும்.
உண்ணலாம், பருகலாம் ஆனால், வீண்விரையம் இருக்கக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனம் செலுத்துவதும் எமது தலையாய கடமையாகும்.
ஸஹர் உண்போம்:
ஸஹர் உணவை நபி(ச) அவர்கள் பரக்கத் பொருந்தியது என்று கூறியுள்ளார்கள். ஸஹரை முடிந்தவரைக்கும் தாமதித்தல் நல்லதாகும். உறக்கத்திற்காக ஸஹர் உணவை நல்லிரவில் உண்டுவிட்டு உறங்கிவிடுவது உகந்ததல்ல.
இப்தாரை விரைவுபடுத்துவோம்:
நோன்பு திறப்பதை தாமதிக்கச் செய்வது நல்லநன்று. நோன்பு திறப்பதை தாமதப்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதுமன்று. ஷரீஆவின் கண்டனத்திற்கும் உரியதாகும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
ஈத்தம் பழமும் தண்ணீரும்:
நோன்பு திறப்பதற்கு மிகவும் ஏற்றது ஈத்தம் பழமும் தண்ணீருமாகும். ஈத்தம் பழத்தின் குளுக்கோஸ் மிக விரைவாக உடலில் தாக்கம் செலுத்தும். அதனால் பசியையும் போக்கும். தண்ணீரானது தாகத்தைத் தீர்க்கும். ஆதலால் நோன்பு திறப்பதற்கு மிகவும் ஏற்றது ஈத்தம் பழமும் தண்ணீருமாகும். மேலும், ஈத்தம் பழத்தை ஒற்றைப்படையாக உண்பதும் சுன்னாவாகும்.
அதான் சொல்லப்பட்டதும் ஈத்தம் பழம், தண்ணீர் கொண்டு நோன்பு திறந்துவிட்டு தொழுகை முடிந்த பின்னர் ஏனைய உணவுகளை உண்பது சிறந்ததாகும். வெறும் வயிற்றில் ஒரேயடியாக உணவுகளை உட்கொள் வது சோம்பலையும், களைப்பையும், மந்த நிலையையும் ஏற்படுத்தும். சிறிய வயதிலிருந்தே இப்படிப் பழக்கப்பட்டுவிட்டோம். இதைத் தவிர்ப்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் இரவு வணக்கத்திற்கும் உகந்ததாகும்.
தேவையான அளவு நீர் அருந்துதல்:
நோன்பின் காரணமாக உடலில் தேவையான நீர்த்தன்மை குறையலாம். எனவே, தேவையான அளவு நீரருந்துதல் முக்கியமாகும். பணத்தைக் கொடுத்து பக்கட்டுக்களிலும், டின்களிலும் அடைக்கப்பட்ட பானங்களை வெறுமையாகவும் குளிரூட்டியும் அருந்தி உடல் நல ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதை விட வெறும் தண்ணீர் அருந்துவதே ஏற்றமானதாகும். அத்துடன் நோன்பு திறந்ததும் அதிகம் குளிர்ந்த நீர் (குளிரூட்டியில் வைக்கப்பட்டது) அருந்துவதைத் தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு ஏற்றமானது.
எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் இணிப்புக்கள்:
நோன்பு திறப்பதென்றால் ஏதோ ஒரு வகையில் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளும் பல்சுவை தரும் இனிப்புக்களும் நம் ஒவ்வொருவரது வீட்டிலும் இருப்பது இப்போது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது எனலாம்.
அந்த வகையில் பெடிஸ், ரோல்ஸ், கட்லட், வடை,.. என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால், இவற்றை விட இயற்கையான பழங்கள் மிக மிக ஏற்றமானவை யாகும். எமது உணவு முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் ரமழான் உள்ளத்திற்கும் உடலுக்கும் சிறந்த ஆரோக்கியமளிப்பதாக அமையும்.
ஸஹர் மற்றும் இப்தாரின் பின்னர் உறங்குவது கேடு தரும்:
நம்மில் பலர் ஸஹர் உண்டதும் உறங்கிவிடுகின்றோம். இன்னும் சிலர் இப்தாரின் பின்னர் களைப்பு என்ற போர்வையில் உறங்கிவிடுகின்றனர். இவை இரண்டுமே உகந்ததல்ல. தேகாரோக்கியம், உற்சாகம் இரண்டையும் இழக்கச் செய்து விடும். மென்மையான உணவுகளை இவ்விரு நேரங்களிலும் தயார் செய்து அளவோடு உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்போமாயின் மேற்படி நிலைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
கோபத்தைக் குறைத்துக் கொள்வோம்:
பொதுவாக பசியோடு இருக்கும் போது அதிகமாகக் கோபம் வருவது இயல்பானது. இப்படியிருக்கும் போது கோபம் கொள்வது சுகர், கொலட்ஸ்ரோல் நோயாளிகளிடம் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். எனவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ரமழான் ‘ஸப்ர்’ – பொறுமையின் மாதமல்லவா அதனால் இந்தக் காலகட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்ளல்:
அதிகமான ஹதீஸ் மஜ்லிஸ்கள், பயான் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள். பயான்கள் ஈமானை மெருகூட்டும். அறிவை அதிகரிக்கச் செய்யும். பக்குவத்தைத் தரும் பண்பாட்டை உருவாக்கும்.
அதிகமாக இஸ்திஃபார் செய்வோம்!:
ரமழான் தவ்பாவின் மாதம் என்பதால் அதிகமாக ‘இஸ்திஃபார்’ – தவ்பா செய்வது நம்மை நாம் மாற்றிக் கொள்ளவும் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்திக் கொள்ளவும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எனவே, இதை நாம் அதற்காக சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நல்ல வாசிப்புப் பழக்கத்திற்கு வழிவகுத்துக் கொள்ளலாம்:
முடிந்தவரை நல்ல நூற்களை வாசிக்க முயற்சிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கம் இப்போது மங்கி மறைந்து வருகின்றது. வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் என்று கூறுவார்கள். எமது முன்னோர்கள் வாசிப்பை சுவாசிப்பது போல் முக்கித்துவமிக்கதாக நோக்கியுள்ளனர். எனவே, நாமும் வாசிக்க வேண்டும்.
இப்தாரின் முழுமையான பயன் பெற முயல வேண்டும்:
பொதுவாக ரமழான் காலங்களில் இப்தார் பயான் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலானோர் இந்நிகழ்ச்சிகளின் இறுதி நேரத்தில் நோன்பு திறப்பதற்காக மாத்திரம் கலந்து கொள்வர். இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் இப்தாருக்காக போய் சேராமல் ஆரம்பத்திலேயே சென்று கலந்து கொண்டு பயன்பெற முயல வேண்டும். எமது சிறுவர்களையும் இது விடயத்தில் உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
நோன்பு நோற்கப் பயிற்சியளிக்க வேண்டும்:
எமது கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர்களை நாம் நோன்பு நோற்கப் பயிற்சியளிக்க வேண்டும். அவர்களுக்கு நோன்பு மிகவும் சிரமத்தைக் கொடுப்பதாக இருந்தால் அவர்களுக்கு நோன்பை விட சலுகையளிக்கலாம்.
நபித்தோழர்கள் சிறுவர்களை நோன்பு நோற்கச் செய்வார்கள். அவர்கள் பசியின் கோரத்தை உணராமலிருக்க அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அவர்களைப் பசி உணர்வை விட்டும் பராக்காக்குவார்கள். இந்த வழிமுறையை நாமும் கைக் கொள்ளலாம்.
ஆகவே, முடிந்தவரை இந்த ரமழானை முன் சென்ற ரமழானை விட பயனுள்ளதாகக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த ரமழான் எம்மில் மாற்ற முடியாது குடிகொண்டுள்ள, அல்லாஹ்வும் அவனது தூதரும் வெறுக்கும் விடயங்களை விரட்டியடிக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்காக நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!