– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (சத்தியக் குரல் ஆசிரியர்)
நபியவர்களின் அன்புக்காக நபியின் மனைவிமார்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை பின் வரும் ஹதீஸில் நாம் அறிந்து கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபியவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னுடன் எனது போர்வைக்குள் படுத்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உள்ளே வந்து), “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியர் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்றே பிற துணைவியரிடமும் அன்பு காட்டி) நீதியுடன் நடந்து கொள்ளும்படி கேட்டு என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்” என்று கூறினார். நான் அமைதியாக இருந்தேன்.
நபி (ஸல்) அவர்கள், “என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னைக் காட்டி) “அப்படியானால், இவரை நேசிப்பாயாக” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் எழுந்து, நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் திரும்பிச் சென்று, தாம் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதையும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலையும் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்களின் துணைவியர், எங்களுக்கு நீங்கள் எந்த நன்மையும் செய்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, “தங்கள் துணைவியார் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் நீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்கிறார்கள்” என்று கூறுமாறு சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக நான் நபியவர்களிடம் ஒருபோதும் பேசமாட்டேன்” என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.
ஆகவே, நபி (ஸல்) அவர்களின் துணைவியர் தங்களில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர் விரைவாகக் கோபப்படக்கூடியவராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.
அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் போர்வைக்குள் என்னுடன் இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம்மிடம் வந்தபோது இருந்த நிலையிலேயே அப்போதும் நபியவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களுக்கு உள்ளேவர அனுமதியளித்தார்கள்.
ஸைனப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய புதல்வி (ஆயிஷா) விஷயத்தில் (அவரிடம் அன்பு காட்டுவதைப் போன்றே தங்களிடமும் அன்புகாட்டி) நீதியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டு என்னைத் தங்களிடம் தங்களுடைய துணைவியர் அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள்.
பிறகு ஸைனப் என்னை எல்லைமீறி ஏசினார். நான் (அவருக்குப் பதில் சொல்ல) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கிறார்களா எனக் காத்திருந்தேன். கண் சாடையாவது செய்கிறார்களா என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஸைனப் அவர்கள் தொடர்ந்து ஏசிக்கொண்டேபோக அவருக்கு நான் பதிலடி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கமாட்டார்கள் என நான் அறிந்து கொண்டேன். நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, அவரை வாயடைக்கச் செய்ய நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தபடியே “இவள் அபூபக்ரின் மகளாயிற்றே” என்று கூறினார்கள்.
-முஸ்லிம் 4829