Featured Posts
Strong Fire effect in the living world.

நரகத்தில் சில காட்சிகள்… (1)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்

நரகம் என்பது மிகவும் கொடியது, யாரினாலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் பண்ணி வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும், நபியவர்களும் கடுமையாக எச்சரித்த பல செய்திகளை தொடராக உங்கள் சிந்தனைகளுக்கு முன் வைக்க உள்ளேன்.

அல்லாஹ் நரகத்தைப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறான்

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” -66:06

மேலும் மற்றொரு இடத்தில்

“(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது  மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது” -2:24

மேலும்

“நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்)” -21:98

மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் முதலாவது நமது குடும்பத்தை நரகத்தை விட்டு்ம் பாதுகாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட வேண்டும். நானும், எனது மனைவியும், எனது பிள்ளைகளும் குடும்பத்தோடு சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இறை கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தின் எரி கொல்லிகளாக பாவிகளையும்,கற்களையும் தான் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். என்பதை பயந்து கொள்ள வேண்டும்.

மேலும் பாவிகள் மறுமை நாளில் எழுப்பப் படும் நிலையைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் கூறுகிறான்.

“அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்” -17:97

பாவிகள் மறுமை நாளில் முகம் குப்பற எழுப்பப்படுவார்கள் என்ற செய்தியை ஸஹாபாக்கள் கேட்டவுடன் யா ரஸூலுல்லாஹ் முகத்தினால் எப்படி நடக்க முடியும் என்று கேட்ட போது கால்களினால் நடக்க வைத்த அல்லாஹ் அவர்களை முகத்தினால் நடக்க வைப்பது இலகுவான காரியமாகும் என்று கூறினார்கள்.

நரகத்தின் பெயர்கள்…

பாவிகளை எரிப்பதற்காக தயார் செய்துள்ள நரகத்தை பல பெயர்களில் அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.

அந்நார்:

“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் (நாரில்) புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. -4:14

ஜஹன்னம்:

“(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் (ஜஹன்னமில்)ஒன்றாகச் சேர்த்துவிடுவான். -4:140

ஜஹீம்:

“எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரக(ஜஹீம்)வாசிகள் ஆவார்கள்” -5:10

அஸ்ஸயீர்:

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பை (ஸயீரை)சித்தம் செய்திருக்கின்றான்” -33:64

ஸகர்:

“அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (ஸகர்)“நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்) -54:48

அல்ஹூதமா:

“அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் (நரகில்)எறியப்படுவான்” -104:4

ளலா:

“அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும்(ளலா) நெருப்பாகும்” -70:15

தாருல்பவார்:

“அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில்(தாருல் பவாரில்) நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?”-14:28

“(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் – இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்” -14:29

அல்லாஹ்விற்கு கட்டுப்படாதவர்களை நரகத்தின் பல பெயர்களை சுட்டிக் காட்டிஎச்சரிக்கிறான்.

நரக நெருப்பின் தன்மை…

நரக நெருப்பின் தாக்கம் எப்படி இருக்கும். பாவிகள் இந்த உலகில் வாழும் போதே அதை விளங்கிக் கொள்ள வேண்டும். என்பதை பின் வரும் நபி மொழி மூலம் நபியவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’ என்றார்கள்.  -புகாரி 3265 

அல்லாஹ் நரக நெருப்பை எழுபது பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதியை தான் உலகில் தந்துள்ளான் என்றால் பாவிகளை சுட்டெரிக்கும் நெருப்பின் தாக்கம் (வீரியம் ) எப்படி இருக்கும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த செய்தியை நபியவர்கள் கூறினார்கள்.

நரகத்தின் ஆழம்…

நரகத்தின் ஆழத்தைப் பற்றி நாம் அறிவதற்காக வேண்டி பின்வரும் நபிமொழியை நபியவர்கள் கூறுவதை காணலாம்.

“ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பயங்கரமான ஒரு சப்தத்தை கேட்டு தோழர்கள் திரும்பி பார்த்தார்கள் அப்போது நபியவர்கள் அந்த சப்தத்தை கேட்டீர்களா ? என்று தன் தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம் என்று தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ் எழுபது ஆண்டுகளுக்கு முன் நரகத்திற்கு மேலாக ஒரு பெரிய கல்லை போட்டான் அது இப்போது தான் அடி தட்டை சேர்ந்துள்ளது என்று பதில் கூறினார்கள்”. -முஸ்லிம்

மேலே இருந்து ஒரு கல்லை போட்டால் அது வேகமாக வரும், அதுவும் நரகத்தின் அடிதட்டை சேருவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளது என்றால் நரகத்தின் ஆழத்தை இவ்வளவு தான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது.

நரகத்திற்கு ஏழு வாசல்கள்…

சுவர்கத்திற்கு எட்டு வாசல்கள் இருப்பதைப் போல நரகத்திற்கு ஏழு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்” -15:43

“அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” -15:44 

இணை வைத்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது…

பொதுவாக மனிதன் பாவங்களுக்கு மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை இஸ்லாம் காட்டுகிறது.முதலாவது நாம் செய்யும் அமல்கள் மூலம் பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டாவது செய்த பாவத்தை அல்லாஹ்விடம் சொல்லி அதற்கான பாவமன்னிப்பை வேண்டுவதாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களை பயன் படுத்தாதவர்கள் மறுமையில் நஷ்டவாளிகளாகும். குறிப்பாக அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் பாவமன்னிப்பு கேட்காமல் மரணித்துவிட்டால் அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது.

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” -4:48

எனவே உலகத்தில் பாவம் செய்பவர்கள் அவரவர்களின் பாவங்களுக்கு ஏற்ப என்ன, என்ன, தண்டனைகள் வழங்கப்படவுள்ளனர் என்பதை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் அடுத்த இதழில் கவனிப்போம்.

One comment

  1. Alahandulillah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *