அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)
இஸ்லாமிய சட்டத்துறையில் ‘ஸத்துத் தரீஆ’ என்பது முக்கியமான ஒரு பகுதியாகும். ஒரு ஆகுமான, நல்ல விடயத்தைச் செய்தால் தீய விளைவு ஏற்படும் என்றிருந்தால் அந்தத் தீய விளைவைத் தவிர்ப்பதற்காக அந்த நல்ல, ஆகுமான விடயத்தைத் தவிர்ப்பதையே ‘ஸத்துத் தரீஆ’ என்பார்கள்.
தீய விளைவு ஏற்படும் என்றால் நல்லதை விட்டு விடலாம் என்ற கருத்தைத் தரும் இந்த காயிதா அடிப்படை விதியை மையமாக வைத்து, இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் சத்தியத்தைச் சொன்னால் சண்டை வரும், பிரச்சினை வரும், பிளவுகள் வரும் எனவே, பிரச்சினை களைத் தவிர்ப்பதற்காக சத்தியத்தைச் செய்யாமல் விடலாம் என தவறாகப் பயன்படுத்தினர். இதனால் சத்தியத்தைச் சொல்ல வேண்டியவர்கள் சத்தியத்தை பிறர் சொல்லும் போது அதை எதிர்த்தனர். சத்தியத்தைச் சொல்லும் போது சண்டை வராவிட்டால் தாம் சொன்ன எதிர்வு கூறல் தவறாய்ப் போய்விடும் என்பதற்காக தாமே சத்தியத்தை மூட்டிவிட்டனர் அல்லது தாமே முன்னின்று சண்டை பிடித்தனர். இவ்வாறு பல வழிகளிலும் சண்டையை சவாலாக மாற்றினர்.
இச்சந்தர்ப்பத்தில் சத்தியத்தைச் சொல்ல வேண்டும். சத்தியத்தை மறைக்கக் கூடாது. எல்லோரும் சத்தியத்தைச் சொன்னால் மக்கள் மறுக்கமாட்டார்கள். ஒரு தரப்பு சொல்லும் போது மறுதரப்பு மறுப்பதால்தான் மக்கள் குழம்பிப் போகின்றனர். எனவே, விளைவுகள் பற்றி கவனிக்காது சத்தியத்தைச் சொல்ல வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்யும் நிலை உருவானது.
இது கொஞ்சம் ஓவராகப் போய் சத்தியத்தைப் போட்டு உடைக்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. என்ன வந்தாலும் பரவாயில்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் விளைவாக எதிர் விளைவுகள் பற்றி கொஞ்சம் கூட கவனம் செலுத்தாமல் தஃவா செய்வதுதான் சரியான தஃவா வழிமுறை என்ற தப்பான எண்ணப் பதிவு ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர் விளைவுகள் பற்றியும் சிந்திக்கும் கடமை உண்டு என்பதை எம்மவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தேவை உண்டாகியுள்ளது. அதற்கமையவே இங்கு இது குறித்து அலசப்படுகின்றது.
கஃபாவின் அடித்தளம்:
நபித்துவத்திற்கு முன்னர் காபிர்கள் கஃபாவைப் புணர்நிர்மானம் செய்யும் போது சில குறைகளை விட்டனர். ஹலாலான பணம் இல்லாத காரணத்தினால் ஹிஜ்ர் இஸ்மாயில் பகுதியைக் கட்டாமல் விட்டனர். இப்றாஹீம் நபி கட்டிய அடிப்படையில் கஃபாவைக் கட்ட நபியவர்கள் விரும்பினார்கள். பத்ஹு மக்காவின் பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களுக்கு கஃபா மீது மிகுந்த மரியாதை இருந்தது. கஃபாவை உடைத்து அவர்கள் பார்த்து வந்த அமைப்புக்கு மாற்றமாகக் கட்டினால் மக்கள் குழப்பம் அடைவார்கள் என்பதற்காக அந்த எண்ணத்தை நபியவர்கள் விட்டுவிட்டார்கள்.
‘உனது சமூகம் குப்ரில் இருந்து புதிதாக வந்தவர்கள் என்றில்லாவிட்டால் கஃபாவை உடைத்து இப்றாஹீம் நபியின் அத்திவாரத்தில் நான் கட்டியிருப்பேன். குறைஷிகள் கஃபாவை புணர்நிர்மானம் செய்யும் போது குறை விட்டுவிட்டனர் என நபி(ச) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என ஆயிஷா(ர) அவர்கள் கூறினார்கள்.’
நூல்: முஸ்லிம்- 398-1333, தாரமி- 1910, பார்க்க- புகாரி 126
குறைஷிகள் குழப்பமடைவார்கள் என்பதற்காக நபி(ச) அவர்கள் தான் விரும்பிய ஒரு நலவை விட்டிருப்பதை அவதானிக்கலாம். இச்சம்பவம் விளைவுகள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதே வேளை, கஃபாவில் இருந்த சிலைகளை மக்கா வெற்றியின் போது உடைக்கும் விடயத்தில் நபி(ச) அவர்கள் விளைவுகள் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதிகாரம் வந்ததும் அடித்து நொருக்கினார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
விட்டுவைக்கப்பட்ட முனாபிக்குகள்:
நபி(ச) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது சிலர் ஏற்றனர்ளூ சிலர் மறுத்தனர். மூன்றாவது ஒரு கூட்டம் வெளிப்படையாக ஏற்றுவிட்டு அந்தரங்கமாக எதிர்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ‘முனாபிக் -நயவஞ்சகர்-கள் என அழைக்கப்பட்டனர். இவர்களால் இஸ்லாமிய உலகு நிறையவே பிரச்சினைகளைச் சந்தித்தது. உள்ளே இருந்து கொண்டு தொல்லை கொடுத்து வந்தனர். இவர்களில் அதிகமானவர்களை நபியவர்களும் நபித்தோழர்களும் அடையாளம் கண்டே இருந்தனர். இருப்பினும் இவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை. பின்விளைவுகள் கவனத்திற் கொள்ளப்பட்டன. இந்த முனாபிக்களுக்கு அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் தலைவனாக இருந்தான். அவனைக் கொல்வதற்காக உமர்(ர) அவர்கள் அனுமதி கேட்ட போது,
‘வேண்டாம், அவனை விட்டு விடுங்கள் முஹம்மத் தன் தோழர்களையே கொலை செய்கின்றார் என மக்கள் பேசிக் கொள்ளக் கூடாது’ என நபியவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 4907, 4905)
அவன் முனாபிக் என்பது முஸ்லிம்களுக்குத் தெரியும். அதுவும் அனைவருக்கும் தெரியாது. அவனைக் கொலை செய்தால் வெளியில் உள்ளவர்கள் முஹம்மத் தனது தோழர்களைக் கொலை செய்கின்றார் என்ற செய்தி பரவும். இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நபியவர்கள் முனாபிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தார்கள். தஃவா பணியில் எதிர்விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது பலமாக உணர்த்துகின்றது.
பிற கடவுள்களைத் திட்டாதீர்கள்:
அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக் கூடிய போலி கடவுள்களைத் திட்டக் கூடாது என குர்ஆன் கட்டளையிடுகின்றது. இந்தக் கட்டளையை இடும் போது ஒரு எதிர்விளைவு பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. நீங்கள் போலி தெய்வங்களைத் திட்டும் போது அவர்கள் அறியாமை காரணமாக அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தவர்க்கும் அவர்கள் செய்வது அலங்காரமாகக் காட்டப்பட்டுள்ளது. அதை குறை கூறும் போது அவர்கள் அதற்கு எதிர்நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்ற எதிர் விளைவு பற்றி குர்ஆன் கூறுகின்றது.
‘அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் அறியாமையினால் வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செயல்களை நாம் அலங்கரித்துக் காட்டி யுள்ளோம். பின்னர் அவர்களது இரட்சக னிடமே அவர்களது மீளுதல் உள்ளது. அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.’ (6:108)
இந்த அறிவில்லாத சில இளைஞர்கள் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அடுத்தவர் குறை கூறக் காரணமாக அமைந்து விடுகின்றனர். ‘திருப்பதிக்குச் சென்ற பக்தர்கள் விபத்தில் மரணம்’ என்ற செய்தி வந்ததும் அந்த பக்தர்களை உங்கள் கடவுளால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதா? என முகப் புத்தகத்தில் போஸ்ட் போடுகின்றனர். இதைப் பார்க்கும் அவர்கள் ‘ஹஜ்ஜில் விபத்து’ போன்ற செய்திகளை எடுத்துப் போட்டு உங்கள் அல்லாஹ் என்ன செய்து கொண்டிருந்தான்? அவனால் இந்த விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியவில்லையா? என எதிர் போஸ்ட் போடுகின்றனர்.
இஸ்லாம் சம்பந்தமான அறிவில்லாமல் திருப்பதி விபத்து பற்றி போஸ்ட் போடும் முஸ்லிம் இளைஞர்கள் உண்மையில் இஸ்லாத்திற்கு எந்த சேவையும் செய்யவில்லை. மாறாக இஸ்லாத்திற்கு பாதகத்தையே ஏற்படுத்துகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சந்தேகத்தை விட்டுவிடுதல்:
ஹராத்தைத்தான் ஒரு முஸ்லிம் விட்டு விட வேண்டும். ஆனால், நபி(ச) அவர்கள் சந்தேகமானதை விட்டு விடுவது மார்க்கத்தைப் பாதுகாக்க உதவும் என்று கூறுகின்றார்கள். இந்த சட்டம் எதிர் விளைவைக் கவனத்திற் கொண்டே சொல்லப்படுகின்றது.
யார் சந்தேகமானதை விட்டு விடுகின்றாரோ அவர் தனது மார்க்கத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வார். யார் சந்தேகத்தில் விழுகின்றாரோ அவர் ஹராத்தில் விழுந்துவிடுவார் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்
நூல்: முஸ்லிம் 4178
சந்தேகத்தைச் செய்யும் போது தவறுதலாக ஹராத்தைச் செய்யும் நிலை ஏற்படலாம். அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சந்தேகமானதை தவிர்ந்து கொள்ளுமாறு இங்கே கூறப்படுகின்றது.
இஸ்லாமிய சட்டங்கள், ஒழுக்கங்கள் பலதும் இந்த விதியின் அடிப்படையில் பேசப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். எனவே, அல்லாஹ்வும் அவனது தூதரும் எதிர்விளைவுகள் பற்றி கவனம் செலுத்தியிருக்கும் போது, எதிர் விளைவுகள் என்ன வந்தாலும் பரவாயில்லை அவற்றைக் கவனத்திற் கொள்ளவே கூடாது என்பது இஸ்லாத்தின் அணுகுமுறையாக இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளமை காலத்தின் கட்டாயமாகும்.
எதிர் விளைவுகள் பற்றி சரியாகப் புரிந்து கொண்டால் இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றின் மீது இன்னொன்று பொய்க் குற்றச் சாட்டுக்களைக் கூறி காவல் துறையில் முறைப்பாடு செய்தல், விசிட் விசாவில் வந்து மார்க்கப் போதனைகள் செய்வதாகப் போட்டுக் கொடுத்தல், பாங்கு சொல்ல ஒலிபெருக்கியைப் போடுவதால் நோயாளிகள் சிரமப்படுவதாய் முறைப்பாடு செய்தல், அனுமதியில்லாமல் பள்ளி கட்டியிருப்பதாக போட்டுக் கொடுத்தல், வெளிநாட்டில் இருந்து இவர்களுக்குப் பணம் வருவதாக மூட்டிவிடுதல் போன்ற இன்னோரன்ன அசிங்கங்கள் இந்த நாட்டில் அரங்கேறியிருக்காது. ஒருவர் மற்றவரைப் பற்றி போட்டுக் கொடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கெட்டவர்களாக்கியுள்ளனர்.
இவை இனவெறிக்குத் தூபம் போட்டுள்ளது. முஸ்லிம்கள் பற்றிய தப்பெண்ணத்தை வளர்த்துள்ளது. முஸ்லிம்கள் தமக்குள்ளேயே சுளிந்து நெளிந்து போயுள்ளனர் என்பதை அடுத்த சமூகம் புரிந்து கொண்டுள்ளது. எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை அழித்துள்ளது.
முஸ்லிம்களை இலேசாக அழித்து விடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. எமது செல்வம், காலம், சக்தி என்பன வீணாக விரயமாகியுள்ளன.
எனவே, இஸ்லாமிய வரையறைக்குள் அனைவரும் எதிர்விளைவுகள் பற்றிய தூர நோக்குடனும் பொதுவான முஸ்லிம் உம்மாவின் நலனையும் கருத்திற் கொண்டு கடமையாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.