இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு)
வழங்கும்
சிறப்பு கல்வி வகுப்பு
பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள்
அரபி மூலம்
தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான்
பகுதி-2: ஹதீஸ் 06 முதல் 10 வரை
விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்:
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
அல்-கோபர், சவூதி அரபியா
நாள்: 19-08-2017 (சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை)
இடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட்
நிகழ்ச்சி ஏற்பாடு:
Indian Islahi Center (Tamil Wing) Muscat
அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்
மேலதிக தொடர்புக்கு: 00968 97608092
6-3893. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.
7-6882. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
8-2564. அம்ரா பின்த்து அப்திர் ரஹ்மான் கூறியதாவது. பரீரா (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தன் விடுதலைப் பத்திரத் தொகையைச் செலுத்தும் விஷயத்தில்) உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், உன் எஜமானர்கள், நான் அவர்களுக்கு ஒரே தடவையில் உன் விலையைக் கொடுத்து, உன்னை விடுதலை செய்து விடுவதை (ஏற்றுக் கொண்டு) சம்மதித்தால் நான் அவ்வாறே (முழுத் தொகையையும்) ஒரே தடவையில் செலுத்தி விடுகின்றேன் என்று கூறினார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விருப்பத்தை பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், (உனது) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருந்தாலே தவிர, நாங்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், நீ அவளை வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.
9-1741. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?’ என்றனர். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘இது எந்த மாதம்?’ என அவர்கள் கேட்டதும் நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு, ‘இது துல்ஹஜ் மாதம் அல்லவா?’ என அவர்கள் கேட்க, நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு ‘இது புனிதமிக்க நகரமல்லவா?’ எனக் கேட்க, நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘உங்களுடைய (புனிதமான) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள்வரை புனிதமானவையாகும்!’ என்று கூறிவிட்டு, ‘நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?’ எனக் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்!’ என்றனர். பிறகு அவர்கள் ‘இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாம் விடவேண்டாம்!’ எனக் கூறினார்கள்.
10-2449. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.