Featured Posts

நிலையான முடிவுகள் எடுக்க அழகியதோர் முன்மாதிரி

ஒருவரது வாழ்வில் அவர் எடுக்கும் தீர்மானங்கள் திருப்புமுனைகளாக மாறுவதை யதார்த்த வாழ்வில் அனுபவ ரீதியாக கண்டிருப்போம். நிர்க்கதியான நிலையில் எட்டப்படும் எத்தனையோ முடிவுகள் பலரது மன அமைதிக்கே வேட்டு வைத்து, வாழ்வின் வசந்தத்தை சிதைத்து விடுவதனை காணலாம்.

தான் எடுத்த முடிவுகள் பிழைத்துப் போகின்ற போது அதனையே நினைத்து உள்ளத்தில் சோகத்தையும், கண்களில் ஈரத்தையும் தாங்கியவர்களாய் “இப்படி முடிவெடுத்து விட்டோமே! அதை இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!” என்றெல்லாம் நினைத்து, எடுத்த முடிவால் விரக்தியின் விளிம்புக்குச் சென்று மன நிம்மதியினை அழித்துக் கொள்ளும் பலரை சமூகத்தில் பரவலாய் காணமுடிகிறது. இன்னும் சிலரோ முடிவுகள் பிழைத்துவிட்ட கவலையால் தன் வாழ்வையே மாய்த்துக் கொள்ளும் வங்குரோத்து நிலைக்குக் கூட சென்றுவிடுவதை காணும் போது “முடிவுகள் வாழ்வின் திருப்பு முனைகள்” என்பதை அழுத்தமாய் உணர முடிகிறது.

வாழ்வின் அச்சானியாய் அமையப் போகும் ஒரு விடயத்தில் தீர்க்கமான முடிவெடுத்து, அந்த முடிவின் விளைவால் ஏற்படும் எப்பேர்ப்பட்ட பாதிப்புகளையும், துன்பங்களையும், சவால்களையும் சிரித்த முகத்துடனும், மனநிறைவுடனும் எதிர் கொள்ள வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி “நாம் எடுக்கும் முடிவுகளை மறுமையுடன் ஒப்பிட்டு எடுப்பது ஒன்றே”.

இதற்கான அழகிய முன் உதாரணமாக திருக்குர்ஆன் பிர்அவ்னுடைய மனைவியின் வாழ்வை எம் விழிகளுக்கு முன் விபரித்துக் காட்டுகிறது.

தன் கணவனான பிர்அவ்னுக்கும் தன் வீட்டில் வளர்க்கப்பட்ட மூஸா (அலை) அவர்களுக்குமிடையில் கொள்கை பிரச்சினை துளிர்விடுகிறது. பாசம் மிகுந்த கணவன் “நான் தான் கடவுள்” என்று கொக்கரிக்கிறான். எதிரணியில் நிற்கும் மூஸாவோ “நீ ரப்பு இல்லை. உன்னையும் என்னையும் படைத்தவன் எவனோ அவனே உண்மையான ரப்பு” என்று ஓங்கி முழங்குகிறார்.

வலுக்கும் கொள்கை முரண்பாட்டுக்கு மத்தியில் தான் யாருடைய அணியில் நிற்பது என்று முடிவெடுக்க வேண்டிய நிர்க்கதி நிலைக்கு ஆஸியா அம்மையார் தள்ளப்படுகிறார். கட்டிய கணவனை ஏற்று அவர் கொள்கையின் பால் சார்ந்து நின்றால், பட்டத்து ராணி என்ற பட்டம், அரண்மணை வாழ்வின் சுகபோகங்கள், விரல் அசைவுக்கு பணிவிடை செய்யும் வேலையாட்கள், அதி சொகுசான ஆடம்பர வாழ்க்கை என்று இன்பத்தில் திழைக்க முடியும்.

அதே சமயம், மூஸாவுடைய ஏகத்துவ கொள்கையினை ஏற்று அவர் அணியில் இணைந்து விட்டால் ஆடம்பரத்தை, சொகுசை, ராணி என்கிற பட்டத்தை ஏன் உயிரையே கூட இழக்க நேரிடும்.

இந்நிலையில் ஆஸியா அம்மையார் எடுத்த முடிவு எப்பேர்ப்பட்டது என்பதனையும், எதையொட்டி அம்முடிவு எடுக்கப்பட்டது என்பதனையும் அல்லாஹ் இப்படி சிலாகித்துச் சொல்கிறான்.

“என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.” (66:11)

அழிந்து போகும் உலகத்தின் உறவுகளா? சொத்துக்களா? சொகுசான வாழ்வா? அல்லது அழிவேயில்லாத மறுமையில் கிடைக்கவிருக்கும் சுவனம் என்கிற நிலையான பேரின்ப வாழ்வா? என்பதனை ஆஸியா அம்மையார் உரசிப்பார்க்கிறார். வாழ்வா சாவா என்பதனை தீர்மானிக்கவுள்ள அதி முக்கிய முடிவினை மறுமையுடன் ஒப்பிட்டு, அல்லாஹ்வின் திருப்தியுடன் ஒப்பிட்டு உரசிப்பார்த்து எடுக்கிறார். உலகத்தின் இன்பங்களை விட மறுமை இன்பமே முக்கியம் என்ற அளவுகோளை வைத்து முடிவை எட்டுகிறார். அம்முடிவால் அவருக்கு ஏற்பட்ட விளைவுகளை இன்முகத்துடன் களத்தில் ஒரு தனித்த பெண்ணாக இருந்து எதிர்கொள்கிறார்.

சோதனைகளும் வேதனைகளும், மிரட்டல்களும், வசைபாடல்களும் என்று அந்த சமூகம் அவருக்கு இழைத்த அத்துனை இடர்களையும் மனநிறைவுடன் சந்தித்து எடுத்த முடிவில் நிலைகுழையாமல் நிற்கிறார் அந்த ஆஸியா எனும் முன்மாதிரிப் பெண்.

இவருடன் ஒப்பிடுகையில் எமது வாழ்வின் முடிவுகள் எதை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகின்றன என்பதனை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். கொள்கை, திருமணம், ஜனாஸா, கொடுக்கல் வாங்கள், அரசியல், சமூக உறவுகள் என்று அத்துனை துறைகளிலும் நாம் எப்படி முடிவெடுக்கின்றோம்?

உறவுகளை பார்க்கிறோம். ஊரைப்பார்க்கிறோம். இத்தனை நாள் பழகியவர்களல்லவா என்கிற நட்பைப் பார்க்கிறோம். அவர்களை திருப்தி படுத்துவதற்காக அல்லாஹ்வை பகைத்துக் கொண்டு மறுமையை மறந்தவர்களாய் முடிவுகளை எடுக்கின்றோம். ஈற்றில், முடிவுகள் பிழைத்துவிடுகின்ற போது எடுத்த முடிவில் விரக்தியடைந்து முடங்கிப்போய் மன நிம்மதியினை இழந்து தவிக்கின்றோம்.

அன்பர்களே! வாழ்வில் எப்பேர்ப்பட்ட கட்டத்தில் ஒரு முடிவினை எடுப்பதாயினும் அதனை மறுமையுடன் ஒப்பிட்டு எடுக்க முனைவோம். இதை செய்தால் மறுமையில் என்ன கிடைக்கும்? அல்லாஹ் இதனை பொருந்திக் கொள்வானா? என்பதனை மட்டுமே அளவு கோளாகக் கொள்வோம்.

வீறுகொண்டு வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புண்முறுவலுடன் நிற்க அதுவே துணை செய்யும்!

✍ -பர்ஸான் நளீமீ
➖➖➖➖➖➖➖➖
SLTJ யின் முன்னால் தேசிய தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *