– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்)
“இன்னும் “மூஸாவே! அல்லாஹ்வைக் கண்கூடாக நாங்கள் காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை இடியோசை பிடித்துக் கொண்டதை (எண்ணிப்பாருங்கள்.)” (2:55)
அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நாம் நம்பமாட்டோம் என இஸ்ரவேல் சமூகம் கேட்ட போது அவர்கள் இடி முழக்கத்தால் தாக்கப்பட்டார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. இது இஸ்ரவேல் சமூகத்தின் ஆணவத்திற்கும், அவநம்பிக் கைக்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும்.
அவர்களது இந்த வேண்டுதல் மிக மோசமானது என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது.
“அவர்களிடம் உடன்படிக்கை எடுப்பதற்காக “தூர்” மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். நாம் அவர்களுக்கு, “பணிந்தவர்களாக இவ்வாயிலால் நுழையுங்கள்” என்றும், “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்குக் கூறினோம். இன்னும் நாம் அவர்களிடம் உறுதி யான உடன்படிக்கையும் எடுத்தோம்.” (4:154)
ஆனால் இஸ்ரவேல் சமூகத்தினரில் நம்பிக்கை கொண்டோர்தான் இந்தக் கேள்வியைக் கேட்டு தமது அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர். இதனால் அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
அல்லாஹ்வைக் காண வேண்டும் என்ற ஆசை உண்மையான இறை பக்தியுள்ளவர் களுக்கும் ஏற்படலாம். ஆனால், இவ்வுலகில் கடவுளை யாரும் காண முடியாது என்பதே இஸ்லாத்தின் கொள்கையாகும். மூஸா(ர) அவர்களுடன் அல்லாஹ் நேரடியாக உறவாடியுள்ளான். அவர்கள் தனது சமூகத்தின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் அந்த வேண்டுதலை அல்லாஹ்விடம் முன்வைத்த போது என்ன நடந்தது என்பதைப் பின்வரும் வசனம் இப்படிக் கூறுகின்றது.
“நாம் (குறிப்பிட்ட இடத்தில்) குறித்த நேரத்திற்கு மூஸா வந்து, அவரது இரட்சகன் அவருடன் பேசிய போது அவர், “என் இரட்சகனே! நான் உன்னைப் பார்ப்பதற்காக எனக்கு (உன்னை) காண்பிப்பாயாக” எனக் கேட்டார். அ(தற்க)வன், “நிச்சயமாக உம்மால் (இம்மையில்) என்னைக் காணமுடியாது. எனினும், இந்த மலையைப் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம்” எனக் கூறினான். அவரது இரட்சகன் அம்மலைக்குத் தோற்றமளித்த போது அதை அவன் துகள் துகள்களாக ஆக்கினான். மூஸா மயக்க முற்று விழுந்தார். அவர் மயக்கம் தெளிந்த போது, “நீயே தூய்மையானவன், உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் நம்பிக்கையாளர்களில் முதலாமவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.” (7:143)
பூமியில் வாழும் போது அல்லாஹ்வைக் காணும் ஆற்றல் நபிமாருக்கும் கிடையாது என இந்த வசனம் கூறுகின்றது.
நபி(ச) அவர்கள் மிஃராஜ் பயணம் சென்றுள்ளார்கள். சுவனத்தை, நரகத்தைப் பார்த்துள்ளார்கள். ஆனால், அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை.
“நீங்கள் உங்கள்இரட்சகனைப் பார்த்த துண்டா என அவர்களிடம் வினவப்பட்ட போது அவனோ ஒளிமயமானவன், நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என நபி(ச) அவர்கள் பதிலளித்தார்கள்.” (முஸ்லிம் – 261)
நபி(ச) அவர்கள் கூட அல்லாஹ்வைக் காணவில்லை எனும் போது கடவுளை யாராலும் காண முடியாது என்பது உறுதியாகின்றது. இதனை அல்குர்ஆன் திட்டவட்டமாகப் பின்வருமாறு கூறுகின்றது.
“பார்வைகள் அவனை அடையாது. அவனோ பார்வைகளை அடைந்து கொள் கின்றான். இன்னும் அவனே நுட்பமானவன்ளூ நன்கறிந்தவன்.” (6:103)
மறுமையில் காணலாம்:
மறுமை நாளைப் பொருத்தவரை நல்லவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய ஆனந்தம் அல்லாஹ்வின் தரிசனமாகும்.
“அந்நாளில் சில முகங்கள் தமது இரட்சகனைப் பார்த்து மலர்ச்சியுற்றிருக்கும்.” (75:22-23)
மறுமையில் அல்லாஹ்வை சில முகங்கள் பார்க்கும் என இந்த வசனம் கூறுகின்றது.
“பௌர்ணமி தின சந்திரனை எப்படி உங்களால் சிரமமின்றிப் பார்க்க முடிகின்றதோ அது போல்தான் உங்கள் இறைவனை (மறுமையில்) பார்ப்பீர்கள் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஜாபிர் அப்னு அப்துல்லாஹ்(வ)
ஆதாரம்: புஹாரி- 554, 4891, 7434)
இவ்வுலகில் கடவுளை யாரும் காண முடியாது. மறுமையில் நல்லவர்கள் அவனைப் பார்ப்பார்கள் என்பதே இஸ்லாத்தின் கொள்கையாகும். இன்று சில ஆன்மீக வியாபாரிகள் கடவுள் எனக்குக் காட்சி தந்தார்; அவர் அப்படிச் சொன்னார்; இப்படிச் சொன்னார் என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். கடவுளைக் கண்டவர் என்று மக்கள் இத்தகையவர்களை வணங்கவும் ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த ஆன்மீக ஊழலை இஸ்லாம் அடியோடு அழித்து விடுகின்றது.
சில நாஸ்திகவாதிகள் கடவுள் இருக்கிறாரா? காட்டுங்கள் பார்க்கலாம்? என்று கேள்வி எழுப்புகின்றனர். கடவுள் இருக்கின்றார். ஆனால், அவனைக் காணும் சக்தி மனிதனுக்கு இல்லை. கடவுளின் படைப்புக்களைப் பார்த்து கடவுள் இருப்பதை அறிந்துகொள்! என்று கூறி இந்தக் கேள்வியே தவறானது என்பதால் கேள்வியின் வாயிலை இஸ்லாம் அடைத்து விடுகின்றது.
உயர்த்தப்பட்ட தூர் மலை
“(பனூ இஸ்ரவேலர்களே!) நாம் உங்களுக்கு வழங்கிய (வேதத்)தை உறுதியுடன் கடைப்பிடியுங்கள். அதிலுள்ளவற்றை சிந்தியுங்கள். நீங்கள் பயபக்தியுடையோ ராகலாம்!” என்று “தூர்” மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி, உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கியதை (எண்ணிப் பாருங்கள்.)” (2:63)
தூர் மலையை அல்லாஹ் இஸ்ரவேல் சமூகத்துக்கு மேலால் உயர்த்தியதாகவும் அவர்களுடன் சில உடன்படிக்கைகளைச் செய்ததாகவும் இந்த வசனம் கூறுகின்றது. அவர்கள் அந்த உடன்படிக்கையை மீறியதாக அடுத்த வசனம் கூறுகின்றது.
“தூர்” மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்;ளூ செவிசாயுங்கள்” என உங்களிடம் நாம் உறுதி மொழி எடுத்ததை (எண்ணிப்பாருங்கள்.) அ(தற்க)வர்கள், “செவிசாய்த்தோம்ளூ மாறு செய்தோம்” என்று கூறினர்.” (2:93)
தூர் மலையை உயர்த்தி வைத்து, வேதத்தில் கூறியது போல் இருக்கும் படியும், செவிதாழ்த்திக் கட்டுப்படும் படியும் அச்சமூகத்தினர் பணிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் “கேட்டோம்; மாறு செய்தோம்;” என்று கூறியதாக (2:93) ஆம் வசனம் கூறுகின்றது. சனிக்கிழமை தினத்தில் வரம்பு மீறக் கூடாது என்று அவர்களிடம் உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதை 4:154 ஆம் வசனம் கூறுகின்றது. இந்த உடன்படிக்கை யையும் அவர்கள் மீறினார்கள்; அதனால் தண்டிக்கப் பட்டார்கள்.
தூர்மலையை உயர்த்தினோம் என்று கூறப்படுவது உண்மையில் மலை உயர்த்தப் பட்டதைத்தான் குறிப்பிடுகின்றது. இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் அறியலாம்.
“அவர்களுக்கு மேலால் மேகத்தைப் போல் மலையை உயர்த்தி, அது தம்மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் எண்ணிய போது, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு நாம் உங்களுக்கு வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்து, அதிலுள்ளதை நீங்கள் சிந்தியுங்கள்” (என்று நாம் கூறினோம்.)” (7:171)
தூர் மலையைப் பிடுங்கினோம். அது அவர்களுக்கு மேலால் நிழல் போல் நின்றது. மலை தம்மீது விழுந்துவிடுமோ என அவர்கள் பயந்தார்கள் என்ற தகவல்கள் உண்மையிலேயே மலை பிடுங்கப்பட்டு, அவர்களுக்கு மேல் நிறுத்தப்பட்டு அவர்களிடம் சில உடன்படிக்கைகள் எடுக்கப்பட்டதையே தெளிவுபடுத்துகின்றது. இந்த உடன்படிக்கை களை மீறும் போது அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
சனிக்கிழமையில் வரம்பு மீறியோர்:
“உங்களில் சனிக்கிழமையில் (மீன் பிடிக்கச் சென்று) வரம்பு மீறியோர் பற்றியும் அதனால், “சிறுமையடைந்த குரங்குகளாக நீங்கள் மாறிவிடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறியதையும் நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்.” (2:65)
சனிக்கிழமை வரம்பு மீறியோர் குரங்குகளாக மாற்றப்பட்டதாக இந்த வசனம் கூறுகின்றது. சனிக்கிழமைக்கு “ஸப்த்” ஓய்வு நாள் என்று கூறப்படும். நபியவர்களது உம்மத்துக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆவுடைய நேரம் போன்று அவர்களுக்கு சனிக்கிழமை எதுவும் செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தது. அவர்கள் அல்லாஹ் ஆறு நாட்களில் உலகைப் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தான். அது போன்று நாமும் ஓய்வெடுக்க வேண்டும் என்று இச்சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டனர். சனிக்கிழமையில் வரம்பு மீறியோர் என்று இங்கே கூறப்படுகின்றது. எப்படி வரம்பு மீறினார்கள் என்று பின்வரும் வசனத்தில் கூறப்படுகின்றது.
“(நபியே!) கடலோரத்தில் இருந்த கிராமத்தைப் பற்றி நீர் அவர்களிடம் கேட்பீராக! (மீன் பிடிக்கத் தடைசெய்யப்பட்ட) சனிக்கிழமையில் அவர்கள் வரம்பு மீறியதை (எண்ணிப்பாருங்கள்) ஏனெனில், அவர்களது சனிக்கிழமை தினத்தில் மீன்கள் உயர்ந்து அவர்களிடம் வரும். சனிக்கிழமை அல்லாத நாளில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் நாம் அவர்களை இவ்வாறு சோதித்தோம்.”
“அல்லாஹ் எவர்களை அழிக்கவும் அல்லது கடுமையாக வேதனை செய்யவும் இருக்கிறானோ அச்சமூகத்திற்கு நீங்கள் ஏன் உபதேசிக்கின்றீர்கள் என்று அவர்களில் ஒரு குழுவினர் கூறியதை (எண்ணிப் பாருங்கள்). அ(தற்க)வர்கள், “உங்கள் இரட்சகனிடம் தப்பித்துக் கொள்வதற்காகவும், இவர்கள் அஞ்சி நடப்பதற்காகவுமே (உபதேசிக்கின்றோம்) என்று கூறினர்.”
அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்த போது, தீய செயலை விட்டும் தடுத்தோரை நாம் பாதுகாத்தோம். அநியாயம் செய்தோரை அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் கடுமையான வேதனை மூலம் பிடித்தோம்.”
“அவர்கள் தமக்குத் தடுக்கப்பட்டதை விட்டும் எல்லை மீறிச் சென்ற போது, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.” (7:163 – 166)
சனிக்கிழமை தினத்தில் மீன்கள் அதிகமாக வெளியில் வந்தன. இது சோதனை. ஆசைப்பட்டவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்கள். நல்லவர்கள் எடுத்துச் சொன்ன போது கூட தமது தவறை விடவில்லை. இதனால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.
தூர் மலையை உயர்த்திப் பிடித்து எடுக்கப்பட்ட உடன்படிக்கையை இவர்கள் அப்பட்டமாக மீறியதால் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அத்தோடு இத்தண்டனையைப் பின்வரும் சந்ததி யினருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஆக்கினான்.
“ஆகவே, அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினை (தரும் தண்டனை)யாகவும் பயபக்தியாளர்களுக்கு நல்லுபதேசமாகவும் இதனை நாம் ஆக்கினோம்.” (2:66)
இவ்வாறு குரங்குகளாக மாற்றப்பட்ட இவர்களுக்கு அல்லாஹ் சந்ததிப் பெருக்கத்தைக் கொடுக்கவில்லை என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதி செய்யப் படுகின்றது. எனவே, குரங்குகளாக மாற்றப்பட்ட மனிதர்களின் சந்ததிகள் எவரும் இல்லை. இன்றைய குரங்குகளுக்கும் மனிதர்களாக மாற்றப்பட்ட குரங்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்.
அளவுக்கு மீறிய கேள்வி:
“இன்னும், “ஒரு மாட்டை அறுக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்று மூஸா தன் சமூகத்தாரிடம் கூறியபோது, அவர்கள், “பரிகாசத்திற் குரியவர்களாக எம்மை நீர் எடுத்துக் கொள்கின்றீரா?” என்றனர். அ(தற்க)வர், “நான் அறிவீனர்களில் ஆகிவிடுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார்.” (2:67)
அல்லாஹுதஆலா ஒரு மாட்டை அறுக்குமாறு கட்டளையிட்டான். மாட்டை அறுத்துவிட்டால் கடமை முடிந்துவிடும். ஆனால், தமது நபிக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்பாத அந்த சமூகம், கேள்வி மேல் கேள்வி எழுப்பியது. மாட்டின் நிறம் என்ன? வயது என்ன?… என்று கேள்வி கேட்டு தம்மீது தேவையற்ற சுமையைச் சுமத்திக் கொண்டது. பின்னர் சிரமப்பட்டு குறித்த மாட்டை அவர்கள் அறுக்க நேர்ந்தது. இச்சம்பவம் மிகத் தெளிவாக இரண்டாவது அத்தியாயத்தில் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளமையினால்தான், அவ்வத்தி யாயத்திற்கு “அல் பகறா” – அந்த மாடு என அழைக்கப் படுகின்றது. மூஸா நபியின் சமூகத்தினர் கேட்ட கேள்விகளும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் பின்வரும் வசனங்களில் இடம்பெற்றுள்ளன.
“இன்னும், “ஒரு மாட்டை அறுக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்று மூஸா தன் சமூகத்தாரிடம் கூறியபோது, அவர்கள், “பரிகாசத்திற் குரியவர்களாக எம்மை நீர் எடுத்துக் கொள்கின்றீரா?” என்றனர். அ(தற்க)வர், “நான் அறிவீனர்களில் ஆகிவிடுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார்.”
“(மூஸாவே!) அது எத்தகையது என்பதை எமக்குத் தெளிவுபடுத்துமாறு உமது இரட்ச கனிடம் எமக்காக வேண்டுவீராக! எனக் கூறினர். “நிச்சயமாக அது கிழடுமல்லாத, கன்றுமல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு மாடு என்று அவன் கூறுகின்றான்.” எனவே, உங்களுக்குக் கட்டளையிடப் பட்டதை நிறைவேற்றுங்கள் என்று அவர் கூறினார்.”
“அதன் நிறம் என்ன? என தெளிவு படுத்துமாறு உமது இரட்சகனிடம் எமக் காக வேண்டுவீராக! என்று கூறினர். (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பார்ப்பவர்களை மகிழ்விக்கக்கூடிய, கருமஞ்சள் நிறமுடைய மாடு என அவன் கூறுகின்றான்” எனக் கூறினார்.”
“அது எப்படிப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துமாறு உமது இரட்சகனிடம் எமக்காக வேண்டுவீராக! (ஏனெனில்) எங்களுக்கு மாடுகள் எல்லாம் ஒன்று போன்றே தோன்றுகின்றன. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று கூறினர்.”
“அ(தற்க)வர், “நிச்சயமாக அது பூமியை உழவுவதற்கோ, விவசாயத்திற்கு நீர் இறைப்பதற்கோ பயிற்றப்படாத, குறைகளோ கலப்பு நிறமோ அற்ற மாடு” என்று அவன் கூறுகின்றான் என்றார். அ(தற்க)வர்கள், “இப்பொழுது தான் உண்மையைக் கொண்டு வந்தீர்” என்று கூறினர். அவர்கள் அறுக்க மனமின்றி அதை அறுத்தனர்.” (2:67-71)
கொலையாளியைக் காட்டிக் கொடுத்த கொலையுண்டவன்:
“நீங்கள் ஒருவனைக் கொன்று அதுபற்றி தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள் (என்பதை எண்ணிப்பாருங்கள்.) நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.”
“(அம்மாட்டின்) ஒரு பகுதியால் அ(ச் சடலத்)தில் அடியுங்கள் என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்பிக்கின்றான். நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான்.” (2:72-73)
சொத்தாசை கொண்ட ஒருவன் தனது உறவுக்காரனைக் கொலை செய்துவிட்டு சடலத்தை மற்றொரு குழு வாழும் இடத்தில் போட்டுவிடுகின்றான். இதனால் தேவையற்ற பகை வளர்கின்றது. உண்மையான கொலையாளியை இனம் காட்ட இறந்தவரது சடலத்தின் மீது அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியால் அடிக்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். அப்படி அடித்ததும் இறந்தவன் எழுந்து, “என்னை இவன்தான் கொன்றான்” என்று கொலைகாரக்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் இறந்துவிடுகின்றான். இதையே இந்த வசனம் கூறுகின்றது.
இதன் மூலமாக கொலைக்காரன் கண்டு பிடிக்கப்படுகின்றான். தேவையற்ற பதட்டம் நீங்குகின்றது. மாபெரும் அற்புதம் நிகழ்த்திக் காட்டப்பட்டு அதன் மூலம் அல்லாஹ்வின் ஆற்றலும் மூஸா நபியின் நபித்துவமும் உறுதி செய்யப்படுகின்றது. ஒரு உயிரை மீண்டும் எழுப்பிய அல்லாஹ்வுக்கு எல்லா உயிர்களையும் எழுப்புவது சிரமம் அல்லவே!
கொலை செய்யப்பட்ட ஒருவரை போஸ்மாட்டம் செய்வதன் மூலம் கொலை பற்றிய தகவலை அறிய முடியுமாக இருந்தால் போஸ்மாட்டம் செய்வதற்கு அனுமதி இருப்பதையும் இச்சம்பவம் மூலம் அறிய முடிகின்றது. போஸ்மாட்டத்தின் போது மையித்துக்கு வேதனை ஏற்படும் எனக் காரணம் காட்டி அதைத் தவிர்க்க வேண்டியதில்லை. அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியால் சடலத்திற்கு அடிக்குமாறு அல்லாஹ் இங்கே கூறியுள்ளான். இது கூட மையித்தை வேதனை செய்வதாக அல்லது கேவலப்படுத்துவது போல் தோன்றலாம். ஆனால், கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காக அல்லாஹ் அடிக்குமாறு ஏவினான் என்றால் மரணத்தில் உள்ள மர்மத்தைத் தவிர்ப்பதற்காக, கொலையாளி யைக் கண்டு பிடிப்பதற்காக போஸ்மாட்டம் செய்வது குற்றமில்லை என்பதை அறியலாம்.