Featured Posts

விளக்கு ஏற்றுவது இணைவைப்பா?

அந்நியர்கள் ஒரு விசேசமான நிகழ்ச்சியை செய்யும் போது, அந்த நிகழ்ச்சி சிறந்ததாக அமைய வேண்டும் என்றடிப்படையில் மங்கள விளக்கு என்று சொல்லக் கூடிய குத்து விளக்கை ஏற்றுவார்கள். அப்படியான குத்து விளக்கு ஏற்றும் வைபவத்தில் ஒரு சில முஸ்லிம்களும் கலந்து, அவர்களுடன் சேர்ந்து குத்து விளக்கை பற்ற வைக்கலாமா என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விடை காண்போம்.

ஜாஹிலிய்யா காலம் என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பல நூறு கடவுள்களை குல தெய்வங்களாக மக்கள் வணங்கி வந்தார்கள். அவர்களால் வணங்கப்பட்டவர்கள் கற்பனையாக வடிக்கப்பட்ட சிலைகள் கிடையாது. நபிமார்கள், நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலமாக மாற்றி காலப் போக்கில் அவர்களின் உருவங்களை செதுக்கி அவர்களுக்கு தெய்வீக தன்மையை கொடுத்து, கடவுள்களாக வணங்கி வந்தார்கள். எனவே அப்படியான வணக்கத்தை தான் அல்லாஹ் தனக்கு நிகராக இணை வைத்தல், அது மன்னிக்கபட முடியாத பாவமாகும். அதற்கு நிரந்தர நரகம் என்று கடுமையான முறையில் எச்சரிக்கிறான்.

அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஏதாவதொரு படைப்பிற்கு இறை அந்தஸ்து (புனிதத்தை) கொடுப்பதை, அது நேரடியான இணை வைத்தல் என்பதை தான் அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு இன்ன நட்சத்திரத்தால் தான் மழை பொழிந்தது என்று சொன்னால் அவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாக ஆகிவிட்டான் என்று பின் வரும் ஹதீஸ் எச்சரிக்கிறது.

“ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்’ என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள். (புகாரி 1038)

இந்த ஹதீஸின் மூலம் எது நடந்தாலும் அது இறைவன் மூலம் தான் நடக்கிறது என்பதை உறுதி படுத்துவதை காணலாம். அதே நேரம் இஸ்லாமிய அடிப்படை வழி முறைகளை மீறி நடக்க கூடியவர்கள் இறை நிராகரிப்பில் உள்ளனர் என்பதை தான் மேற்ச் சென்ற ஹதீஸ் எச்சரிக்கிறது.
ஒரு நபித் தோழர் புவானா என்ற இடத்தில் தனது ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதாக நேர்ச்சை செய்திருந்தார். அதை அங்கு நிறைவேற்றலாமா என்று நபியவர்களிடம் கேட்ட போது, அதற்கு நபியவர்கள் அங்கு ஜாஹிலியத்து காலத்தில் வணங்கப்பட்டு வந்த சிலைகள் உள்ளனவா என்று கேட்டார்கள். இல்லை என்று அந்த நபித் தோழர் கூறினார்.மீண்டும் அந்த இடத்தில் ஜாஹிலிய்யா கால விழாக்கள் ஏதாவது கொண்டாடப் படுகிறதா என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று அந்த நபித் தோழர் கூறினார். அப்படி என்றால் உன் நேர்ச்சையை நிறைவேற்று என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிமை பொருத்தவரை சகல வணக்க விசயங்களிலும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை தான் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. சாதாரண ஷிர்க்கின் பக்கம் கூட நாம் நெருங்கி விடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக உள்ளது.

அந்த வரிசையில் இந்த குத்து விளக்கு என்று சொல்லக் கூடிய மங்கள விளக்கை பொருத்தவரை அந்நியர்கள் புனிதமாக கருதக் கூடியதாகும். பொதுவாக நெருப்பை கடவுளாக அவர்கள் வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் கடையை திறக்கும் போது சின்ன பாத்திரத்தில் நெருப்பை பற்ற வைத்து அந்த நெருப்பை தன் கடைகளில் தொங்க போட்டிருக்கும் சாமி படங்களுக்கு ஆராத்தி எடுப்பதை போல காட்டி விட்டு தான் அவர்களது தொழிலை ஆரம்பிப்பார்கள். அந்நியர்களின் திருவிழாக்களின் போது நெருப்பு சட்டிகளை தூக்கி கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். கோவில்களில் கடவுளுக்கு அர்ச்சனை செய்து, பிறகு கோவிலில் உள்ள சாமியார், நெருப்பை கடவுளிடம் காட்டி விட்டு, வரிசையாக இருக்கும் மக்களிடம் காட்டுவார் வரிசையாக நிற்கும் மக்கள் அந்த நெருப்பை கை கூப்பி வணங்குவார்கள். இடத்தை பொருத்து நெருப்பை கடவுளாகவே வணங்குவார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடை பெறும் போது அந்த குத்து விளக்கிற்கு முதலிடம் கொடுத்து நெருப்பால் (மெழுகு திரியால்) குத்து விளக்கை பற்ற வைப்பார்கள். அந்நியர்கள் அதை ஒரு வணக்கமாக செய்து வருகிறார்கள் நெருப்பை வணங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்கம் கிடையாது.

நெருப்பு வணங்கிகளாக ஒரு கூட்டம் இருக்கிறார்கள் என்பதை நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஜனாஸாவை தூக்கும் போதும் சப்தத்தைக் கொண்டோ, நெருப்பைக் கொண்டோ தூக்க வேண்டாம் என்று நபியவர்கள் எச்சரித்தார்கள். இவைகள் எல்லாம் அந்நியர்களின் காலசாரமாகும்.
எனவே தனது பதவிக்கு பிரச்சினை வந்து விடுமோ என்ற பயத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், இன்னும் சில முஸ்லிம் முக்கியஸ்தர்களும் சர்வ சாதாரணமாக குத்து விளக்கை பற்ற வைக்கிறாரக்ள. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே இது ஒரு தெளிவான இணை வைத்தலாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சின்ன விசயம் தானே…
இதை சிலர், இது ஒரு சின்ன விசயம் தானே, இதற்கு வாதப்பிரதி வாதங்கள் தேவையா என்று கேட்க கூடிய அளவிற்கு அந்த செயலை சரிகாணும் நிலையை காண்கிறோம். சில நேரங்களில் சில விசயங்கள் எங்கள் அறிவுக்கு சின்ன விசயமாக தான் இருக்கும். ஆனால் நபியவர்கள் இப்படி தான் என்று தெளிவு படுத்தி விட்டால் அது சின்ன விசயமோ, பெரிய விசயமோ கட்டாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு “கரண்டை காலுக்கு கீழாக ஆடை அணிந்தால் அவன் நரகவாதி என்றார்கள். என்னடா இந்த சின்ன விசயத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று கேட்க கூடாது. யாருடைய உள்ளத்தில் கடகளவு பெருமை உள்ளதோ அவர் நரகவாதியாவார். இப்படி பல செய்திகளை பட்டியல் போடலாம். எனவே சிறியது. பெறியது என்பதெல்லாம் மார்க்த்தின் முடிவை தீர்மானிக்கும் அளவு கிடையாது.

அந்நியர்களும் முஸ்லிம்களும்…
இன்னும் சிலர் அப்படியானால் அவர்களும் செங்களால் வீடு கட்டுகிறார்கள், கோவில் கட்டுகிறார்கள், அதே போன்ற கல்லால் நாமும் வீடு கட்டுகிறோம். பள்ளிகளை கட்டுகிறோம் இது ஷிர்க் கிடையாதா ? என்று தவறான வாதத்தை முன் வைக்கிறார்கள். அந்நியர்களின் மார்க்க ரீதியான செயல் பாடுகள் தான் கூடாதே தவிர உலக ரீதியான மேற்ச் சுட்டிக் காட்டிய விடயங்கள் அதற்குள் வராது. நபியவர்கள் அதற்கு தாராளமாக அனுமதி தருகிறார்கள்.

“அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியைத் (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பவர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழவிடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை (முடி)களைக் (தம் நெற்றிகளின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். எந்த விஷயங்களில் (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக் காரர்களுடன் ஒத்துப் போவதை நபி(ஸல்) அவர்கள் விரும்பி வந்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரண்டு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள். (புகாரி 3944)

எனவே அவர்கள் கோட், சூட் போட்டுள்ளார்கள், அவர்கள் வேஷ்டி அணிந்துள்ளார்கள், அவர்கள் சேலை அணிந்துள்ளார்கள். என்று மார்க்கம் இல்லாத விசயத்தை சுட்டி காட்டுவதை தவிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வணக்க வழிபாடு விசயத்தை போன்று நாமும் செய்தால் அப்போது தான் அவர்களுக்கு நாம் ஒப்பாகுவோம் என்பதை புரிந்து கொள்வோம்.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்…
இன்னும் சிலர் அந்த நாட்டவர் செய்து விட்டார் இந்த நாட்டவர் செய்து விட்டார் இப்போது அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள், இவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள், என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்தான், மகள் பாதிமா திருடினாலும் கை வெட்டப்படும் என்று சொன்ன மார்க்கத்தில் இருக்கிறோம். அரபிகளுக்கு ஒரு சட்டம், அஜமிகளுக்கு ஒரு சட்டம், மௌலவிமார்களுக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்பெதல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. அது அரசியல் ரீதியாக செய்யப்பட்டாலும் சரி, ராஜதந்திர ரீதியாக செய்யப்பட்டாலும் சரி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பாவத்திற்கு முன் அனைவரும் சமமாகும்.

எனவே ஜமாஅத்துகள், அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர் மோகம் என்பதை எல்லாம் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு மார்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதில் தான் ஈருலக வெற்றியுள்ளது.

அல்லாஹ் போதுமானவன்.

One comment

  1. குத்து விளக்கை போன்றதே தாலியும் , [ இது மாதரி வசிக்கும் விதமாகவும் பதிவுகள் வரவேண்டும்] நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *