உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் எப்படி உறுதி செய்வது என்பன முக்கிய சவாலாகத் திகழ்கின்றன.
இன முரண்பாடுகள்:
பல்லின மக்கள் ஒன்றாக வாழும் போது சில முரண்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் நால்வரும் நாலுவிதமாக இருப்பர். ஒரு தாய் மக்களுக்கு மத்தியிலேயே முரண்பாடுகள் இருக்கும் போது சமூகங்களுக்கு மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்கும் என்பது சாத்தியமற்றதாகும். எனவே, எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். சில பிரச்சினைகளைச் சகித்துக் கொண்டு சக வாழ்வுடன் பயணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒற்றுமையே பலம்:
சிறுபான்மை சமூகங்களுக்கு அவற்றின் ஒற்றுமைதான் பலமாகும். அல்லாஹ்வின் படைப்பில் எறும்பு, தேன் போன்றவை மிக பலவீனமானவையாகும். இருப்பினும் அவை தமக்கிடையில் உள்ள ஒற்றுமை மூலம் வாழ்ந்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமைதான் அதன் பலமாகும். பிளவுபட்ட பெரும்பான்மையை விட ஒன்றுபட்ட சிறுபான்மை பலமிக்கதாகும் என்பதை எமக்குக் குர்ஆன் கற்றுத் தருகின்றது. ஆனால், இந்த விடயத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகப் பெரும் பின்னடைவில் உள்ளனர். எமக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைக் குர்ஆன், சுன்னா அடிப்படையில் தீர்த்துக் கொள்ள நாம் தயார் இல்லை.
எமக்கு மத்தியில் இனவாதத்தை மிஞ்சிய இயக்க வாதம் உள்ளது! ஒரு இயக்கம் கட்டிய பள்ளியை அடுத்த இயக்கம் காட்டிக் கொடுக்கவும் இடித்து விடவும் கூட துணிகின்றது. ஒரு அமைப்பினர் மீது மற்றொரு அமைப்பு பொய் வழக்குப் போடுகின்றது. உஸாமாவோடு தொடர்பு, அல்காயிதாவுடன் தொடர்பு…. என்று பொய்யாகப் போட்டுக் கொடுக்கின்றது. இவ்வாறு ஒருவர் மற்றவருக்குக் குழிபறித்துக் கொண்டிருக் கின்றோம். இந்த இழிநிலை நீங்க வேண்டும். முஸ்லிம்-இஸ்லாம் எனும் ஒரு பொதுத் தளத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். பொதுவான இலக்கை நோக்கி அனைவரும் ஒருமுகப்பட்ட மனதுடன் பயணிக்க வேண்டும்.
பண்பாடே பலம்:
இஸ்லாத்திற்கென்று குறித்த சில பண்பாடுகள் உள்ளன. அந்தப் பண்பாடுகள் எமது பலமாக இருக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய இருக்கும் மிகப்பெரும் வாய்ப்பும் வலிமையான வழிமுறையுமாக இந்த பண்பாடுகள் உள்ளன. கடந்த கால முஸ்லிம்களின் கருணை, காருண்யம், இரக்கம், ஈகை, நம்பிக்கை, நாணயம் என்பவைதான் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம்கள் மீதான மரியாதை மற்றும் பாதுகாப்புகளுக்கான காரணமாகத் திகழ்ந்தன.
இலங்கையில் இஸ்லாம் பரவ முஸ்லிம் வியாபாரிகளின் நாணயம், நம்பிக்கை, நன்னடத்தை போன்றன காரணமாக இருந்தன. மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இஸ்லாத்தை அரவணைக்கவும் இதுவே காரணமாக இருந்தது. இந்த இஸ்லாம் போற்றும் பண்பாடுகள் இஸ்லாத்தை வளர்க்கும் அதே வேளை, முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றது.
இந்த இடத்தில் சில இஸ்லாமிய பாண்பாடுகளை இனம்காட்ட விரும்புகின்றோம்.
ஏமாற்றுபவன் முஸ்லிமாக இருக்க மாட்டான்:
“ஏமாற்றுபவன் எம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
நூல்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா
முஸ்லிம்கள் ஏமாற்றும் போக்குள்ளவர் களாக இருக்கக் கூடாது. முஸ்லிம்களை நம்பலாம்; அவர்கள் ஏமாற்றமாட்டார்கள் என பிற சமூகம் சொல்லும் அளவுக்கு முஸ்லிம்கள் நாணயமாக நடக்க வேண்டும்.
அன்பும் மரியாதையும்:
“சிறுவர்கள் மீது அன்பு காட்டாதவர்களும் பெரியவர்களை மதிக்காதவர்களும் எம்மைச் சார்ந்தவர் இல்லை” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(வ)
நூல்: திர்மிதி 1919
முஸ்லிம்கள் என்றால் சிறுவர்கள் மீது அன்பு காட்டுவார்கள். பெரியவர்களை மதித்து நடப்பார்கள் என பிற சமூகம் சொல்லும் அளவுக்கு எமது நடத்தை இருக்க வேண்டும்.
இவ்வாறு முஸ்லிம்கள் தமது பண்பாட்டின் மூலமும் நல்ல பழக்க வழக்கங்கள் மூலமும் தனித்துவமாக பிற சமூகங்களால் இனம் காணப்படும் நிலை இருக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் தம்மை ஆடையாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், கட்டிட அமைப்பினாலும் தனித்துவமாகக் காட்டுவதில் காட்டும் கரிசனையில் காற்பங்கைக் கூட பண்பாட்டில் காட்டுவதில் கவனத்திற் கொள்ளவில்லை.
நல்ல அயலவர்:
இஸ்லாம் அண்டை அயலவர்களுடன் சண்டை, சச்சரவுகளில்லாமல் நல்ல முறையில் நடந்து கொள்ளச் சொல்கின்றது.
“இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
(புகாரி: 5185)
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: “அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.”
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
(புகாரி: 6014)
“அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ச) அவர்கள் “எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பவர்: அபூ ஷூரைஹ்(வ)
புகாரி: 6016
இந்த பண்பாடு முஸ்லிம்களிடம் ஒட்டுமொத்தமாகக் காணப்பட வேண்டும். முஸ்லிம்களுக்குப் பக்கத்தில் வாழ்வதை அடுத்தவர்கள் விரும்பும் நிலை உருவாக வேண்டும். முஸ்லிமின் அண்டை வீட்டாராக இருப்பதன் மூலம் நிம்மதி, அமைதி, உதவி ஒத்தாசை போன்றன கிடைக்கும் என்கின்ற மனநிலை உருவாக வேண்டும்.
குடும்பக் கட்டடைப்பு:
இஸ்லாம் இறுக்கமான குடும்பக் கட்டமைப்புக்கு வழிகாட்டுகின்றது. இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மத்தியில் பெற்றார்-பிள்ளைகள், கணவன்-மனைவி மற்றும் சகோதரத்துவ உறவுகள் பலப்பட வேண்டும். பிற சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தைப் பார்க்கும் போது அவர்களின் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல், சிதறாமல் சிறப்பாக உள்ளது; பெற்றோர் மதிக்கப்படுகின்றனர்; கணவன் மனைவியின் உறவுப் பாலம் நலமாக உள்ளது; சகோதரர்களுக்கு மத்தியில் பாசமும் நேசமும், தேசம் முழுவதும் உள்ளது என உணர வேண்டும். இந்த சமூகத்துடன் இணைந்து கொண்டால் எமது குடும்பமும் குதூகலமாக, குழப்பங்கள் இல்லாது இருக்கும் என்கின்ற எண்ணம் அவர்களின் உள்ளத்தில் உதிக்க வேண்டும்.
சமூகக் கட்டமைப்பு:
முஸ்லிம்களின் சமூகக் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் உள்ள பலவீனர்களுக்குப் பலமானவர்கள் கை கொடுக்கும் நிலை இருக்க வேண்டும். சமூகத்தில் பெண்கள், விதவைகள், ஏழைகள், அநாதைகள், முதியவர்கள்…. என பலவீனப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் இந்தக் கட்டமைப்பால் கவரப்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் தனது சமூகத்து உறுப்பினர்களுக்கு காவல் அரணாக இருப்பதை அவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு தனிப்பட்ட முஸ்லிமினதும், இஸ்லாமியக் குடும்பத்தினதும், சமூகத்தினதும் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் பிற சமூகத்தால் மெச்சப்படும் நிலையில் இருந்தால் இப்படியான ஒரு சமூக அமைப்புதான் எமக்குத் தேவை என்பதை அவர்களும் உணர்வார்கள். இத்தகைய சமூக அமைப்பைப் பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள். சமூகத்தின் இந்த சீரான நிலைக்கு இஸ்லாமிய போதனைதான் காரணம் என அவர்கள் உணரும் போது இஸ்லாத்தை நேசிக்கவும் ஆசிக்கவும் விரும்புவார்கள். இந்த அடிப்படையில் சிறுபான்மை சமூகங்கள் தம்மைத் தாமே மாற்றிக் கொள்வது அவர்களின் பாதுகாப்புக்கான முதல்கட்ட நடவடிக்கையாக அமையும். இது குறித்து இலங்கை முஸ்லிம்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
எம்மை நாம் மாற்றிக் கொள்வதன் மூலம் எம்மைப் பற்றிய பிற சமூகங்களின் பார்வையையும், மதிப்பீட்டையும் நாம் மாற்ற முனையலாம்.
“(மனிதனாகிய) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய(வான)வர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர். எந்த ஒரு சமூகமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடமுள்ளதை மாற்ற மாட்டான். அல்லாஹ் ஒரு சமூகத்துக்குத் தீமையை நாடி விட்டால் அதனை யாராலும் தடுக்கமுடியாது. அவனையன்றி அவர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் இல்லை.” (13:11)