Featured Posts

கட்டிக் காக்க வேண்டிய குடும்பக் கட்டமைப்பு

ஆசிரியர் பக்கம்

 சமூகக் கட்டமைப்பின் அத்திவாரமாகத் திகழ்வது குடும்பக் கட்டமைப்பாகும். குடும்பக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டால் சமூகக் கட்டமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். மனிதனை ஓரளவாவது நிதான சிந்தனையுடன் செயற்பட வைப்பது குடும்பப் பொறுப்பாகும். குடும்பக் கட்டமைப்பு சிதைந்துவிட்டால் பொறுப்புணர்வு குண்றிவிடும். அதன் பின்னர் அவிழ்த்துவிட்ட மாடு போன்று அவரவர் அவரவரது மனம் போன போக்கில் போக ஆரம்பித்துவிடுவர்.

கணவன்-மனைவி என்கின்ற உறவு இல்லையென்றால் ஆணும் பெண்ணும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கின்ற நிலை தோன்றிவிடும். இந்நிலை பெருமளவில் வெளியுலகில் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறே பெற்றார்-பிள்ளை உறவும் சிதைந்துவிட்டால் ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம், எவருடன் வேண்டுமானாலும் பழகலாம். மகனின் கைபேசியை தந்தை பார்ப்பது ‘டீசன்ட்” இல்லை. மாறாக, தனிநபர் உரிமையில் தலையிடுவதாகப் பார்க்கப்படும் இந் நிலையும் ஐரோப்பிய உலகில் ஏற்பட்டுவிட்டது!

ஓரளவு மனித உணர்வுகளுடன் வாழும் மக்களிடம்தான் குடும்ப உறவு இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. யூத சியோனிஸ சக்திகள் குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பதை தமது இலக்குகளில் ஒன்றாக வகுத்து, திட்டமிட்டு, வியூகங்கள் வகுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய எமது சமூக அமைப்பும் இவர்களின் சதிவலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்குண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றது.

ஒரு காலம் இருந்தது; மாலையில் கணவன் வேலை விட்டு வரும் போது மனைவி வீட்டில் சீரியலில் சீரியஸ் ஆகி சீரியல் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பாள். இதனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் விழுந்தும் வந்தது. இப்போதெல்லாம் வீடு வந்த கணவன் போனில் மூழ்கிப் போயுள்ளார் என பெண்கள் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டனர். வீட்டில் அனைவரும் பேஸ்புக், வட்ஸ்அப், ட்விட்டர்…. என போனில் நோண்டிக் கொண்டிருப்பதால் குடும்ப உறவுகளில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

இவ்வாறே சிலர் நாள் முழுவதும் பணம் பணம் என பதறிக் கொண்டிருக்கின்றனர். பொருள் திரட்டுவது ஒன்றே வாழ்வின் இலக்கு என்ற எண்ணத்தில் எண்ணிச் செயற்பட்டு வருகின்றனர். இறுதியில் சேர்த்ததை மகிழ்வாக செலவழிக்கவோ அல்லது அனுபவிக்கவோ முடியாமல் வாழ்வை அழித்துக் கொள்கின்றனர்.

சடவாத சிந்தனையுடன் உழைப்பு உழைப்பு என ஓடிக் கொண்டிருப்பதனாலும் மனைவி மக்களின் உண்மையான உணர்வுகளை உணராமல் செயற்படுவதனாலும் உறவுப் பாலங்கள் உடைந்து போக ஆரம்பிக்கின்றன.

இன்றைய கல்வி நடவடிக்கைகளும் கூட உறவுப் பாலத்தில் ஓட்டைகளைப் போட ஆரம்பித்துள்ளது. காலை எழுந்ததில் இருந்து பிள்ளைகள் பாடசாலை, மாலை நேர வகுப்புக்கள்… என படித்துக் களைத்து இரவில் வீட்டுக்கு வந்து உண்ட பாதி உண்ணா மீதியுடன் உறங்கச் செல்லும் அவல நிலை நீடித்து வருவதனால் பெற்றார்-பிள்ளை உறவுகளில் இடைவெளி விழ ஆரம்பித்துள்ளது.

சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாம் விவாகரத்தில் போய் முடிவதற்கு இது போன்ற இடைவெளிகள்தான் முதல் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன.

இன்றைய இளம் சந்ததிகள் உறவின் அருமை, பெருமை தெரியாமல் வாழ்கின்றனர்; வளர்கின்றனர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில், இவர்களுக்கு பெற்றார், பெரியார், ஆசிரியர் போன்ற இன்னோரன்ன உறவுகளின் உண்ணதம் தெரிவதில்லை. அவர்கள் அதிகமான நேரத்தை செலவிடும் ஒரே உறவாக நட்பு மட்டுமே உள்ளது. இதனால் நட்புக்காக எதையும் செய்யத் துணிகின்றனர். அல்லது காதல் உறவு, அதற்காக எதையும் இழக்கத் துணிகின்றனர்.

நட்புக்கு முன்னால் பெற்றார்களின் உண்மைப் பாசம் அவர்களுக்குப் புரிவதில்லை. காதலுக்கு முன்னால் தாய் தந்தையரின் தியாகம் அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இந்த நிலைக்குச் செல்லும் காரணம் எமது உறவில் ஏற்பட்டு வரும் விரிசல்தான்.

எனவே, இந்த ‘டென்ஷன் நிறைந்த” உலக மாயையில் இருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். அதிலிருந்து விடுபட்ட பிறகு உறவுகளை பலப்படுத்த நாம் முயல வேண்டும். குடும்ப உறவுகள் சிதைந்துவிட்டால், அதன் கட்டமைப்பு உடைக்கப்பட்டுவிட்டால் இஸ்லாம் போற்றும் பல உண்ணத மாண்புகள் மடிந்துவிடும். இஸ்லாத்தின் போதனைகள் பலமிழந்து விடும்.

எனவே, இஸ்லாமிய அடிப்படையில் குடும்ப உறவுகளை பலப்படுத்தி இந்த உலகின் சடவாத சிந்தனைகளைத் தகர்த்தெறிந்து யூத, சியோனிச சக்திகளை முறியடிக்க நாம் ஒவ்வொருவரும் முனைய வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *