-மக்தூம் தாஜ்
இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர்.
“உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் அகிலத்திற்கு அருட்கொடையாக, படைத்த ஓரிறைவனால் அனுப்பப்பட்டவரே பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.”
(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன்-21.107)
இவர் வாழ்ந்த ஊரிலேயே நம்பிக்கைக்குரியவர், வாய்மையானவர் என்று இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே நற்பெயர் எடுத்தவர் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்துமறைந்த நபிகள்நாயகம் அவர்கள், இந்த உலகத்திற்கு பல நல்லுபதேசங்களை சொல்லிச்சென்றுள்ளார்கள்.
“ஏழைக்கு உணவளி, தாய் தந்தையை பராமரித்துவா, உறவினர்களை ஒன்றிணைத்து வாழ், அண்டை வீட்டாருக்கு இடையூறு தராதே, சக மனிதனை மதிக்கக் கற்றுக்கொள், விதவைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவு, பிரச்னைகள் எங்கேனும் நடந்தால் அதனைத் தீா்த்துவை, நன்மைகளை ஏவு, தீமைகளைத் தடு, அனைவருடனும் சகோதரத்துவத்தோடு பழகு, பெரியவர்களுக்கு மரியாதைகொடு, சிறியவர்களின் மீது அன்புகாட்டு, இரக்ககுணம் கொள், உனக்கு எதை விரும்புகின்றாயோ அதையே பிறருக்கும் விரும்பு, அன்பையும் அமைதியையும் இவ்வுலகுக்கு பறைசாற்று! – இவ்வாறு உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான உபதேசங்களை வாரி வழங்கி, தானும் அவ்வாறே செயல்பட்டார்கள் நபகள்நாயகம்(ஸல்) அவர்கள்.”
இறைவனுக்கு யாரையும் எதையும் இணைவைக்காதீர்கள், ஐவேளை தொழுகையை தவறாமல் நிறைவேற்றுங்கள், ரமளான் மாதம் நோன்பு வையுங்கள், வசதியிருப்பவர்கள் ஆண்டு வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தர்மம் செய்யுங்கள், வசதியும் ஆரோக்கியமும் வாய்க்கப் பெற்றவர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்லுங்கள் ஆகிய கடமைகளையும், பல உபதேசங்களையும் இறைவன் புறத்திலிருந்து கட்டளைகளாகவும் செய்திகளாகவும் பெற்று நடைமுறைப்படுத்தினார்கள்.
இருபத்தி மூன்று ஆண்டுகளாய் இவ்வாறு, ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து, பல நல்ல உபதேசங்களை வாரி வழங்கிச் சென்ற நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் வாழ்வில் ஒருமுறையும் “என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுங்கள்” என்று சொல்லவில்லை. நபிகள் நாயகத்தின் இறப்புக்குப் பிறகு, அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நபித்தோழர்களில் யாரும் நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது. இஸ்லாமிய வரலாற்றில் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாக “மிலாடி நபி” என்கிற ஒருபண்டிகையே இல்லை!
இஸ்லாத்தின் எதிரிகளால் இடையில் நுழைக்கப்பட்ட ஒரு நூதன கலாச்சாரமே மிலாடிநபி என்ற பண்டிகை ஆகும். நபிகள் நாயகத்தை நேசிக்கின்றோம் என்ற பெயரில், அவரை அளவுக்கு மீறி புகழ்வது, இறைவனின் தன்மைகளை அவருக்கு அளிப்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத செயல்களை முஸ்லிம்களில் பெரும் மக்களால் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
நபிகள்நாயகத்தை உண்மையாக நேசிப்பது என்பது, அவர் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே நம்வாழ்வில் செயல்படுத்துதே ஆகும். அதைவிடுத்து, இஸ்லாமிய மார்க்கம் காட்டித்தராத இந்த பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவது மிகப்பெரிய தவறாகும். இதனை உடனே கைவிடவும் வேண்டும். முஸ்லிம் அல்லாதோருக்கு மத்தியில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை எடுத்தியம்ப வேண்டும். இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றி அல்லாஹ்வின் அருளுக்கு உரியவர்களாக நாம்மாற வேண்டும்.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மா்யமின் புதல்வர் ஈஸா(அலை) எல்லை மீறி புகழப்பட்டதை போன்று என்னை நீங்கள் எல்லை மீறி புகழாதீர்கள். மாறாக, (என்னைக்குறித்து, நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும், அவனுடைய தூதர் என்று சொல்லுங்கள்.” (நூல்:புகாரி-6830)
“இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகிறாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸ்லிம்-3540)