மவ்லவி. அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் – ரியாத், சவூதி அரபியா
முன்னுரை
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவனது தூதர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தோழர்கள் கியாமத் வரையும் வரும் நல்லவர்கள், எம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பாராட்டும் பாதுகாப்பும் உண்டாகட்டும்.
பித்அதைப் புரிவதில் சத்தியத்தை விட்டு விலகிய இரு பிரிவினர்கள்:
- மார்க்க விடயங்களைக் கூட பித்அத் எண்ணுவோர்
- ஒரு சில முக்கிய விடயங்களைத் தவிர ஏனையவைகள் அனைத்துமே மார்க்க காரியங்கள் என எண்ணுவோர்
இரு பாலாரும் சரியான கருத்தை விட்டும் தவறி ஒவ்வொரு முனைகளை பிடித்துள்ளனர்.
பித்அத்கள் எண்ணிலடங்காதவை. ஒவ்வொரு காலத்திலும் புதிது புதிதாக ஏதாவது ஒரு விடயம் மார்க்கம் என மக்களால் உருவாக்கப்படும். அவைகளை வரையறுத்துக் கூறுவது சாத்தியமற்றது. ஆனால் சில பொது விதிகளைப் புரிந்து கொண்டால் எந்த ஒரு காரியத்தையும் அதனுடன் உரசிப் பார்த்து அது பித்அத்தா இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம்.
உள்ளடக்கம்
பித்அதின் வரையறை:
பித்அத்களைப் புரந்துகொள்வதற்கான மொத்த விதிமுறைகளின் எண்ணிக்கை 23. அவற்றை பின்வரும் மூன்று அடிப்படைகளுக்குள் உள்ளடக்கலாம். இவைகளே பித்அத்கள் உருவாவதற்கான காரணிகளாகும்.
பித்அத் உருவாகும் அடிப்படைகள் 3:
- அல்லாஹ் விதியாக்காதவற்றின் மூலம் அவனை நெருங்குதல்
- மார்க்க அமைப்புக்கு விரோதமாக செயல்படல்
- பித்அத்துக்கு இட்டுச் செல்லும் காரணிகளில் ஈடுபடல்
முதல் அடிப்படையின் கீழ் பத்து விதிமுறைகள்:
- பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வணக்கம்
- சொந்தக் கருத்து மற்றும் இச்சையை அடிப்படையாகக் கொண்ட வணக்கம்
- நபியவர்கள் விட்ட ஸ{ன்னாவுக்கு முரணான வணக்கம்
- நல்லோர்களான முன்னோர்களது செயலுக்கு முரணாக அமைந்த வணக்கம்
- மார்க்க விதிமுறைகளுக்கு முரணாக அமைந்த வணக்கம்
- அனுமதிக்கப்பட்ட மற்றும் அன்றாட வழமைகளைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குதல்
- தீமைகளின் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல்
- வரையறுக்கப்பட்ட வணக்கத்தை வரையறையற்றதாக்குதல்
- வரையறையற்றதை வரையறை செய்தல்
- வணக்கத்தில் தீவிரப் போக்கு
இரண்டாவது அடிப்படையான மார்க்க ஒழுங்கை மீறல் என்பதில் அடங்கும் விதிமுறைகள்
- வஹியின் நேரடி வார்த்தைகளுக்கு முரணான கொள்கைகளும் கருத்துக்களும்
- வஹியில் இடம்பெறாது நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்களிடமும் அறியப்படாத கொள்கைகள்
- மார்க்க விடயத்தில் தர்க்கித்தல்
- குறிப்பிட்ட சில அன்றாட மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டாயப்படுத்தல்
- ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மார்க்கத்தில் அளவு குறிப்பிடப்பட்ட சட்டதிட்டங்களில் மாற்றம் உண்டாகுதல்
- நிராகரிப்பாளர்களுக்கே உரிய விடயங்களில் ஒப்பாகுதல்
- நிராகரிப்பாளர்கள் புதிதாக உருவாக்கிய விடயங்களில் ஒப்பாகுதல்
- ஏதேனும் ஜாஹிலிய்ய செயற்பாட்டை மேற்கொள்ளல்
மூன்றாவது அடிப்படையான பித்அதுகளுக்கு வழிகோலும் விடயங்களில் உள்ளடங்கும் விதிமுறைகள்
- மார்க்கத்தில் வேண்டப்பட்டதை அதன் யதார்த்தத்திற்கு மாற்றமான ஒரு எண்ணப்பாட்டை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளல்
- வெறும் அனுமதிக்கப்பட்டதை வேண்டப்பட்டது போன்ற தோற்றம் ஏற்படும் அமைப்பில் மேற்கொள்ளல்
- பொது மக்கள் மார்க்கம் என நினைக்கும் அமைப்பில் உலமாக்களிடம் காணப்படும் தீமைகள்
- மக்களிடம் பரவலாகக் காணப்படும் ஒரு தீமையை அறிஞர்கள் சக்தியிருந்தும் தடுக்காததனால் அதனை அனுமதிக்கப்படதாக நினைத்தல்
- புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்களின் விளைவாக உருவான செயற்பாடுகள்
இவை ஒவ்வொன்றுக்குமுரிய உதாரணங்கள் ஆதாரங்களுடன் எதிர்வரும் பதிவுகளில் வழங்கப்படும்.