மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது!
பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது!
“அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு”
திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது.
லக்னௌவில் 24 டிசம்பர் 2017 அன்று நடைபெற்ற வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் மௌலானா ராபே ஹஸன் நத்வி கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். மேலும் வாரியம் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு நேர் எதிரான சட்டம் ஆகும்; முஸ்லிம் பெண்களின் குழப்பங்களையும் கவலைகளையும் சிரமங்களையும் அதிகப்படுத்துகின்ற சட்டம் ஆகும். மேலும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் வெளிப்படையான தலையீடாகத்தான் இந்தச் சட்டம் இருக்கின்றது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் முத்தலாக் தொடர்பாக 2017 அக்டோபர் 17 அன்று நாட்டின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நேர் முரணானதாகவும் இருக்கின்றது.
இந்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுபவையாகவும் இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். முத்தலாக்கினை சட்டவிரோதமானதாக, நடைமுறையாகாதவொன்றாக இந்தச் சட்டத்தில் ஒரிடத்தில் சொல்லப்பட்டிருக்க, இன்னோர் இடத்தில் முத்தலாக் ஒரு குற்றம் எனச் சொல்லப்பட்டு அதற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. தலாக் சட்டவிரோதமாக்கப்பட்டு நிறைவேறாமல் போகின்ற போது தண்டனை எதன் பெயரால் வழங்கப்படுகிறது?
இந்தச் சட்டத்தின் 4, 5, 6 ஆகிய பிரிவுகள் தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களுடன் (எடுத்துக்காட்டாக Guardians and Wards Act, 1890 என்கிற சட்டத்துடன்) முரண்படுகின்றன. மேலும் இவை நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14, 15 ஆகிய பிரிவுகளுக்கும் நேர் எதிரானவையாய் இருக்கின்றன.
முத்தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கும் பிற முஸ்லிம் பெண்களுக்கும் இடையில் இந்தச் சட்டத்தில் எந்தவொரு அடிப்படையும் இன்றி பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
மேலும் கணவனை குற்றவாளியாக அறிவிப்பதில் அவனை மணம் புரிந்திருந்த அவனுடைய மனைவியின் விருப்பமும் கருத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தம்பதியரின் குழந்தைகளின் பராமரிப்பு, நலம் குறித்து அடியோடு எந்தவிதமான குறிப்பும் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளது.
எந்தச் சமூகத்தார் தொடர்பாக இந்தச் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரின் பொறுப்பாளர்களுடனோ, தலைவர்களுடனோ கலந்தாலோசிக்கப் படாததும், அவர்களின் ஆலோசனைகள் பெறப்படாததும், எந்தவொரு முஸ்லிம் அமைப்புடனும் தொடர்பு கொள்ளப்படாததும் வியப்புக்குரியதாகும். அதுமட்டுமல்ல நம்பகமான எந்தவொரு பெண்கள் அமைப்புடனும் கூட தொடர்பு கொள்ளப்படவில்லை.
எனவே நடப்புக் கூட்டத் தொடரில் இந்தச் சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தேவைப்படுமாயின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடனோ, முஸ்லிம் பெண்களை சரியான முறையில் பிரதிநிதிப்படுத்துகின்ற அமைப்புகளுடனோ கலந்தாலோசித்த பிறகு பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற அதே வேளையில் இஸ்லாமிய ஷரீஅத்துடனும், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துடனும் இயைந்து போகின்ற சட்டம் ஒன்றை வகுத்து தாக்கல் செய்யுமாறு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
இந்தச் சட்டம் இஸ்லாமிய ஷரீஅத்துக்கும் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் நேர் எதிரானதாகவும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் இருப்பதால் இந்தச் சட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் இறங்கியுள்ளது. இனி வரும் நாள்களில் இது தொடர்பாக எல்லா மட்டங்களிலும் அனைத்து விதமான முயற்சிகளிலும் வாரியம் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை விரைவில் பிரதமரை சந்தித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தின் தலைவர் எடுத்துரைப்பார் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.
– அபுமரியம்
நன்றி: மக்கள் உரிமை