ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?
فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ
‘அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.’ (4:25)
மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம்.
இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் வசனங்களில் அல் முஹ்ஸனாத் என்ற பதம் நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல் முஹ்ஸனாத் என்பதற்கு திருமணம் முடித்த கணவன் உள்ள பெண் என்றும் அர்த்தம் இருக்கின்றது. இந்த அடிப்படையில் அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் முடித்த பெண்ணுக்கு வழங்கும் தண்டனையில் பாதியை வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் அர்த்தம் செய்துவிட்டனர்.
இலங்கையில் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையில் இருந்தவர்கள் விபச்சாரம் செய்தவர் களுக்கு 100 கசையடி கொடுக்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். (24:2) அதில் திருமணம் முடித்தவர்கள், முடிக்காதவர்கள் என்று எந்தப் பாகுபாடும் காட்டப்பட வில்லை. ஆனால், ஹதீஸில் திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குர்ஆனுக்கு மாற்றமான இந்த ஹதீஸ்கள் உண்மையாக இருக்க முடியாது.
அத்துடன் குர்ஆனில் அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் முடித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையில் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று வந்துள்ளது. ஒருவருக்கு பாதி மரண தண்டனை கொடுக்க முடியுமா? 100 கசையடி என்றால் அதில் பாதியாக 50 கசையடிகளைக் கொடுக்கலாம் என வாதிட்டு மரண தண்டனை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை மறுத்ததுடன் ஒட்டுமொத்த ஹதீஸ்கள் விடயத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தினர். இந்தத் தவறான வாதம் வலுப்பெற தப்பான மொழிபெயர்ப்புதான் காரணமாக அமைந்தது.
அல் முஹ்ஸனாத் என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
1. கணவன் உள்ள பெண்:
திருமணம் செய்ய தடுக்கப்பட்டவர்கள் பற்றி அல்லாஹ் கூறும் போது,
‘மேலும், உங்களின் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இவை) அல்லாஹ் உங்கள் மீது விதித்த கடமை யாகும்… ‘ (4:24)
பெண்களில் கணவர் உள்ளவர்களையும் (திருமணம் செய்யலாகாது) என்று குறிப்பிடுகின்றான்.
இங்கே கணவன் உள்ள பெண்கள் என்பதற்கு ‘அல் முஹ்ஸனாத்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2. கணவன் இல்லாத ஒழுக்கமான பெண்:
இதே போன்று இந்த வார்த்தை கணவன் இல்லாத ஒழுக்கமான பெண் என்ற அர்த்தத்திலும் கன்னிப் பெண் என்ற அர்த்தத்திலும், சுதந்திரமான பெண் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.
وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰت.ِ
‘நம்பிக்கை கொண்ட, சுதந்திரமான பெண்களை மஹர் கொடுத்து, திருமணம் செய்ய உங்களில் யார் சக்திபெறவில்லையோ அவர் உங்கள் அடிமைப் பெண்களில் நம்பிக்கையாளர்களைத் (திருமணம் செய்து கொள்ளட்டும்.)’ (4:25)
இந்த வசனத்தில் ஈமான் கொண்ட ‘முஹ்ஸனாத்’ பெண்களை மணமுடிக்க முடியாதவர்கள் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணமுடியுங்கள் என்று கூறப்படுகின்றது. ஈமான் கொண்ட சுதந்திரமான பெண்களை மணமுடிக்க வாய்ப்பு வசதி இல்லாதவர்கள் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணம் முடிக்கலாம் என்றும் இதற்கு அர்த்தம் எடுக்கலாம்.ஈமான் கொண்ட, கற்பொழுக்கமுள்ள பெண்களை மணமுடிக்க வாய்ப்பற்றவர்கள் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணமுடியுங்கள் என்றும் அர்த்தம் செய்யலாம். ஆனால், முதலாவது கூறிய அர்த்தத்தை இங்கே சொல்ல முடியாது. அதாவது, கணவனுடன் வாழும் பெண்களுக்கும் அல் முஹ்ஸனாத் என்று கூறப்படும். அந்த அர்த்தத்ததை இங்கு பயன்படுத்த முடியாது. ஈமான் கொண்ட கணவன் உள்ள பெண்களை மணம் முடிக்க வசதி இல்லாவிட்டால் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணம் முடியுங்கள் என்று இங்கே அர்த்தம் செய்தால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும். ஹராம் ஹலாலாகிவிடும்.
3. ஒழுக்கமுள்ள பெண்கள்:
இந்த அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதுண்டு. இந்த அத்தியாயத்தில் இதே வசனத்தில் அடிமைப் பெண்களை மணக்கும் போது ‘முஹ்ஸனாதின்’ அவர்களை வைப்பாட்டிகளாக இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களாக கரம் பிடிக்க வேண்டும் என்ற கருத்து பதிவு செய்யப்படுகின்றது.
அல்குர்ஆனின் 5:5, 24:4, 24:23 ஆகிய வசனங்களிலும் இந்த வார்த்தை இதே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தோடு குறித்த வசனத்தின் பகுதியை எப்படி மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால் முரண்பாடு முடிவுக்கு வந்துவிடும்.
அல் முஹ்ஸனாத் என்பதற்கு சுதந்திரமான கன்னிப்பெண் என்ற அர்த்தமும் உள்ளது. அடிமைப் பெண்கள் திருமணம் முடித்த பின் விபச்சாரம் செய்தால் சுதந்திரமான கன்னிப் பெண் விபச்சாரம் செய்தால் கொடுக்கும் தண்டனையில் பாதியை வழங்க வேண்டும் என்பதுதான் இந்த இடத்திற்கு சரியான மொழியாக்க மாகும். சுதந்திரமான கன்னிப் பெண் விபச்சாரம் செய்தால் 100 கசையடி கொடுக்கப்படும். அதில் பாதி 50 கசையடிகள் கொடுக்கப்படும். இதில் எந்த முரண்பாடும் கிடையாது.
இந்த வசனத்தில் கன்னிப் பெண் விபச்சாரம் செய்தால் கொடுக்கப்படும் தண்டனையில் பாதி என்று கூறப்படுவதால் திருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் கொடுக்கப்படும் தண்டனை வேறு, திருமணம் முடிக்காதவர்கள் விபச்சாரம் செய்தால் கொடுக்கப்படும் தண்டனை வேறு என்பதையும் விளங்கலாம்.
திருமணம் முடிக்காதவர்கள் விபச்சாரம் செய்தால் 100 கசையடி என குர்ஆன் கூறுகின்றது (24:2). திருமணம் முடித்தவர்கள் செய்தால் கல்லெறிந்து கொல்லுதல் என ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை.