31) சூரது லுக்மான்
அத்தியாயம் 31
வசனங்கள் 34
லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த பொன் எழுத்துக்களில் பதிய வேண்டிய உபதேசங்களை இவ்வத்தியாயத்தின் 12 வது வசனம் தொடக்கம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ‘என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)
32) சூரதுஸ் ஸஜதா -சிரம் பணிதல்
அத்தியாயம் 32
வசனங்கள் 30
இவ்வத்தியாயத்தின் 15வது வசனத்தில் இறை வசனங்கள் நினைவூட்டப்பட்டால் சிரம் தாழ்தி சுஜுது செய்யும் நல்லடியார்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேலும் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (32:15)
33) சூரதுல் அஹ்ஸாப் – கூட்டுப் படை
அத்தியாயம் 33
வசனங்கள் 73
மதீனாவை நோக்கி எதிரிகள் கூட்டாக படையெடுத்த அந்த வரலாற்றை அல்லாஹ் இவ்வத்தியாயத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, ‘இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்’ என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (அதிகரிக்கவே செய்தது) (33:22)
34) சூரது ஸபா – ஸபா நகரம்
அத்தியாயம் 34
வசனங்கள் 54
யமன் நாட்டின் லபா எனும் ஊர் மக்களுக்கு செய்த அருற்கொடைகளை பற்றியும் அம்மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாததனால் அவர்கள் மீது இறை தண்டனை அனுப்பப்பட்டதை இவ்வத்தியாயத்தின் 15 முதல் 21 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
மேலும் அவர்கள் மறுமையை பொய்யாக்கினர்.
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன ‘உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்’ (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). (34:15)
35) சூரது பாதிர் – படைப்பவன்
அத்தியாயம் 35
வசனங்கள் 45
அல்லாஹ் தான் இரட்சகன் என்பதனை பறை சாற்றும் படைக்கும் அதிகாரம் தனக்கே உரியது என்பதனை இவ்வத்தியாயத்தின் முதல் வசனத்தில் சுட்டிக்காட்டுகின்றான்.
அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (35:01)
36) சூரது யாஸீன்
அத்தியாயம் 36
வசனங்கள் 83
அல்லாஹ்வின் வல்லமைகள் மற்றும் அவனது வசனங்களை பற்றியும் பேசும் இந்த அத்தியாயத்தின் 70வது வசனம் அல்குர்ஆன் உயிரோடு இருப்பவர்களுக்கே அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக கூறுகின்றான். ஆனால் நமது சமுதாயத்தில் ஒரு சிலர் இன்னும் இந்த அத்தியாயத்தை மரணித்தவர்களுக்கு ஓதிக்கொண்டு இருக்கின்றமை கவலைக்குறியது.
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல. இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. (36:69,70)
37) சூரதுஸ் ஸாப்பாத் – அணிவகுத்து நிற்போர்
அத்தியாயம் 37
வசனங்கள் 182
அணிவகுத்து நிற்க்கக் கூடிய, மறுமையில் விரட்டும் மலக்குமார்கள் மீதும், வேதத்தை ஓதுவோர் மீதும் சத்தியம் செய்து வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே என இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏகத்துவ கொள்கையை குறிப்பிடுகின்றான்.
“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
‘அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?’ (37: 86,87)
38) சூரது ஸாத்
அத்தியாயம் 38
வசனங்கள் 88
இப்லீஸ் நபி ஆதம் அவர்களுக்கு சிரம்பணிய மறுத்து அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்த சம்பவத்தை இந்த அத்தியாயத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றான். தனக்கு மறுமை நாள் வரை அவகாசம் தருமாறு கேட்ட இப்லீஸ் மனிதர்கள் அனைவரையும் வழிகெடுப்பதாக சத்தியம் செய்தான்.
‘இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக’ என்று அவன் கேட்டான். (38:79)
அப்பொழுது ‘உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்’ என்று (இப்லீஸ்) கூறினான். (38:82)
39) சூரதுஸ் ஸுமர் – கூட்டங்கள்
அத்தியாயம் 39
வசனங்கள் 75
நாளை மறுமையில் கூட்டங்கூட்டமாக நரகத்திற்கும், சுவர்கத்திற்கும் மக்கள் கொண்டு வரப்படுவது தொடர்பாக இந்த அத்தியாயத்தின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி ‘உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?’ என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) ‘ஆம் (வந்தார்கள்)’ என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. (39:71)
40) சூரதுல் காஃபிர் – மன்னிப்பவன்
அத்தியாயம் 40
வசனங்கள் 85
முஃமின் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்து எமது தவ்பாவை (பாவமன்னிப்பு கேட்பதை) அங்கிகரிப்பதாக மேலும் முன் சென்ற சமுதாயங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளையும் எமக்கு படிப்பினைக்காக குறிப்பிடுகின்றான். மேலும் பிரார்தனையின் முக்கியத்துவத்தை பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றான்.
உங்கள் இறைவன் கூறுகிறான்; ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (40:60)