மறுமை நாளில் தன் அடியார்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், பல விதமான சிறப்புக்களையும், அந்தஸ்துக்களையும் வழங்குகின்றான். தன் அடியார்களுக்கு மன்னிப்பு வழங்குதல், தவ்பா செய்த தன் அடியார்களின் பாவங்களை நன்மையாக மாற்றுதல், பிறரின் குறைகளை மறைத்த, தன் அடியார்களின் குறைகளை உயர்ந்தோன் அல்லாஹ் மறைத்துவிடுதல் போன்ற அந்தஸ்துகளில் தன் அடியார்களுக்கு அல்லாஹ் ஒளியை வழங்க இருப்பதும் அந்தஸ்துகளில் ஒன்றாகும்.
மறுமை நாளில் அல்லாஹ் யாருக்கு ஒளியை (பிரகாசத்தை) வழங்குகின்றானோ, அவர்கள்தான், நேர்வழி பெற்றவர்களும், சுவனத்திற்குள் பிரவேசிக்கக் கூடியவர்களுமாவார்கள்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرٰٮكُمُ الْيَوْمَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۚ
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய (ஒளி) பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நற்செய்தி சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் – இது தான் மகத்தான வெற்றியாகும்” (அல்குர்ஆன்:57:12)
يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْۚ قِيْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًاؕ فَضُرِبَ بَيْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌؕ بَاطِنُهٗ فِيْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُؕ
அந்நாளில் நயவஞ்சகம் உடைய ஆண்களும், பெண்களும் ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டவர்களை பார்த்து: “எங்களை சிறிது கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பயனடைந்து கொள்கிறோம்” என்று கூடுவார்கள். உங்களின் பின் திசையிலிருந்து ஒளியைத் தேடுங்கள் என்று அப்போது அவர்களுக்குக் கூறப்படும். பிறகு, அந்த இரு சாராருக்கும் மத்தியில் ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (அல்லாஹுவின்) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் – (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும். (அல்குர்ஆன்: 57:13)
يُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَ تَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِىُّ حَتّٰى جَآءَ اَمْرُ اللّٰهِ وَ غَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ
அவர்கள் இறைநம்பிக்கையாளர்களை அழைத்து நாங்கள் (உலகத்தில்) உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கேட்பார்கள். ஆம் “உண்மைதான்; எனினும் நீங்களே உங்களைக் குழப்பிக்கொண்டும், (நல்லவர்களுக்கு) கேடு ஏற்படுவதை) எதிபார்த்துக்கொண்டும் இருந்தீர்கள். (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை (மரணம்) வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மதிமயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் இறை நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 57:14)
இந்த மூன்று இறைவசங்களும் சூரா அல்ஹதீத் 57-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பெற்றது என்பது பெருமப்பாலான அறிஞர்களின் கூற்றாகும்.
அதாவது மறுமை நாளின் மிகப்பெரும் மைதானங்களில் நிகழவிருக்கும் திடுக்கிடச் செய்யும் அமளி துமளிகளைப் பற்றியும், கடுமையான நிலஅதிர்வுகளைப்பற்றியும், அங்கு ஏற்படவிருக்கும் மோசமான விஷயங்கள் பற்றியும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறும் அறிவிப்புகளாகும் இது!
இந்த மூன்று வசங்களுக்கும் முந்திய வசனங்களில் தர்மம் செய்பவர்களுக்கு கிடைக்க இருக்கும் வெகுமதிகளையும், அதனால் அவர்கள் அடையவிருக்கும் சுகங்களையும் அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டு, இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் (நூர்) ஒளியைப்பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.
இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் (நூர்) ஒளி என்பது என்ன? அதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்கள் என்ன? மறுமையில் இருளில் சிக்கித்தவிக்கும் நயவஞ்சகர்கள் மற்றும் இறைநிராகரிப்பாளர்களுக்கு ஏற்படப்போகும் இழிவு என்ன என்பதையும் அல்லாஹுவின் தூதர் (ஸல்) மற்றும் நபித்தோழர்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் ஆகியோரின் விளக்கப் பின்னணியில் இருந்தும், இமாம் இப்னு கதீர் அவர்களின் விரிவுரையில் இருந்தும் நாம் விளங்குவோம் இன்ஷாஅல்லாஹ்..,
(இன்ஷாஅல்லாஹ்.., தொடரும்).
——————
S.A.Sulthan
16/06/1441-H
jeddah