Featured Posts

இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது?

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி),
BA(Reading) – SEUSL,
DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE

பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியப் பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காகப் பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாரான பிரயாணங்களின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் , எவ்வாரான ஒழுங்குகளைப் பின்பற்றவேண்டும் எவ்வாரானதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதே போன்று நாம் மேற்கொள்ளும் பிரயாணத்தினையும் வகைப்படுத்தி வரையறுத்துள்ளதை அவதானிக்கலாம்.

பிரயாணங்கள் எந்நோக்கை அடிப்படையாகக் கொண்டதாயினும் அதில் இஸ்லாமிய ஒழுங்குமுறைகள், வரையறைகள் பேணப்படவேண்டியது அவசியமாகும். எமது பிரயாணங்கள் அவ்வாறு இஸ்லாம் கூறும் பிரயாணங்களாக அமைகின்றதா? நாம் எவ்வாறு பிரயாணங்களை அமைத்துக் கொள்கின்றோம்? எதற்காகப் பிரயாணங்களை மேற்கொள்கின்றோம்? என்ற வினாக்களைத் தன்னைத்தானே தொடுத்துப்பார்க்க வேண்டியதொரு காலகட்டத்தில் நாம் உள்ளோம் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் இன்றைய சம்பவங்கள் பல எமது இஸ்லாமிய சமூகத்தின் பிரயாணங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன என்பதனை படம்பிடித்துக் காட்டுகின்றன. அஃது எந்தவகையான பிரயாணமான இருந்தாலும் அங்கு இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. ஆகப் பிரயாணங்கள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தினை அவதானிப்பது அவசியமானதொன்றாகும்.

இஸ்லாம் பிரயாணத்தைத் தனித்துவப்படுத்தி அதனை ஆர்வமூட்டும் , வழிகாட்டுதல்களை வழங்கும் மார்க்கமாகும். மனித வாழ்வின் சகல விடயங்களுக்கும் போதனைகளையும், வழிகாட்டுதல்களையும் முன்வைப்பது போன்று பிரயாணங்கள் பற்றியும் மிகவும் அழகிய முறையில் போதனைகளையும் வழிகாட்டுதல்களையும் முன்வைக்கின்றது.

‘இஸ்லாமிய மார்க்கம் ஏன் பிரயாணங்களை ஆர்வமூட்டுகின்றது?’ என்ற வினாவிற்கு பல விடைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோன்று இஸ்லாத்திற்கு முந்திய காலத்திலேயே அரேபியர்கள் மத்தியில் பிரயாணங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளதனையும் அவதானிக்க முடிகிறது.

1. அரேபியர்களிடையே காணப்பட்ட பிரயாண ஈடுபாடு:
அல்-குர்ஆனில் ‘அல்குறைஷ்’ என்ற அத்தியாயம் இஸ்லாத்திற்கு முந்திய காலப்பகுதியிலே குறைஷிகள் இரண்டு விதமான பிரயாணங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனைப்பற்றிப் பேசுகின்றது. கோடை காலத்தில் குறைஷிகள் சிரியா, பலஸ்தீனம் ஆகிய பிரதேசங்களுக்கும், குளிர் காலத்தில் தெற்கு அரேபியாவிற்கும் அதாவது யமன் பிரதேசத்திற்கும் வணிக நோக்கில் பிரயாணங்களை மேற்கொண்டுள்ளதனை குறிப்பிடுகின்றது. இஸ்லாத்திற்கு முன்பே பயணம் என்பது அரேபியர்களிடம் காணப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. இஸ்லாத்திற்கு பின்பும் இப்பிரயாணங்களில் அதீத ஈடுபாடுடன் காணப்பட்டார்கள். அரேபியர்களிடம் காணப்பட்ட பிரயாணத்தினைப் பற்றி சூரா அல்குறைஷில் அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

  لِإِيلَافِ قُرَيْشٍ  إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ

குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,  (அதாவது) குளிர்கால மற்றும் கோடைகாலப் பயணங்களில் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். (106 : 1,2)

2. ஹஜ், உம்ரா பயணம் :
சக்தி பெற்றவர்கள் ஹஜ், உம்ரா பயணங்களை மேற்கொள்வதனை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதனை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:97)

இது வசதிபடைத்த முஸ்லிம்கள் அனைவர்மீதும் கடமை என்பதனால்
உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் இப்புனித யாத்திரையினை மேற்கொள்கின்றனர்.

3. உணவு தேடி பயணம் செய்தல் :
அல்லாஹ் இந்த பூமியை விரிப்பாக ஆக்கி அதில் உணவு தேடி புசித்துக்கொள்ளுமாறு அல்குர்ஆனில் கூறுவதனை அவதானிக்கலாம்.

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِه وَاِلَيْهِ النُّشُوْرُ

அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (67:15)

பூமியினை மிகவும் வசதியானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளதாகவும் அதில் பல பாகங்களுக்கும் சென்று அங்குள்ள உணவு வகைகளை புசிக்குமாறும் இவ்வசனம் கூறுகின்றது. இவ்வாறு மனிதன் உணவுதேடி உலகின் எல்லா திசைகளுக்கும் பல்வேறு பயணங்களை மேற்கொள்கின்றான்.

4. அல்லாஹ்வின் படைப்புக்கள் , அத்தாட்சிகளை அறிந்துகொள்ளவும் :
அல்லாஹ்வின் படைப்புகள் , அத்தாட்சிகளை அறிந்துகொள்ள பிரயாணங்களில் ஈடுபட இஸ்லாம் ஆர்வமூட்டுகின்றது. அதன் மூலம் அல்லாஹ் எவ்வாறு படைப்புக்களை படைத்தான் என்பதனை அறிய தூண்டுகிறது. இவ்வாறு பூமியில் பயணம் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அறிந்து அல்லாஹ்வுடனான நெருக்கத்தினை அடைந்துகொள்ளலாம். இதனை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது.

قُلْ سِيرُوا فِي الأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

‘பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (29:20)

5. முன்சென்ற சமுதாயத்தினரில் படிப்பினை பெறல்:
பிரயாணம் என்றாலே அங்கு அனுபவங்கள் அதிகம் கிடைக்கும். பூமியின் பல இடங்களுக்கும் சென்று அங்கு வாழ்ந்த , வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறைகளை அவதானித்து படிப்பினை பெறுவது இறைவனைப் பற்றிய சிந்தனையினை எமக்கு ஏற்படுத்துகின்றது.

அல்லாஹ் அல்-குர்ஆனில் அதிகம் படிப்பினைகளை குறிப்பிட்டுள்ளான். அதேபோன்று பிரயாணங்கள் செய்து பூமியை சுற்றிபார்த்தும் படிப்பினை பெறக் கூறுகின்றான்.

قُلْ سِيرُواْ فِي الأَرْضِ ثُمَّ انظُرُواْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ

(அவர்களிடம்) நீர் கூறும்: ‘(சற்று) பூமியைச் சுற்றிப் பாருங்கள், பிறகு சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனியுங்கள்!’ (06:11)

இறைவனை பொய்ப்பித்து நடந்தவர்களுக்கு வேதனை எவ்வாறு இருந்தது என்று பார்ப்பதற்கு அதன் மூலம் படிப்பினை பெறுவதற்கும் இறைவன் தூண்டுவதனை இங்கு அவதானிக்க முடிகிறது. முன்சென்ற சமூகத்தில் அதிகம் படிப்பினையினைப் பெறவும் பிரயாணம் அவசியமாகின்றது.

6. இறைவனின் அருளினை தேடிய பயணம் :
தொழுகையை நிறைவு செய்துவிட்டால் பூமியில் இறைவனின் அருளினைத்தேடி பிரயாணம் செய்யுமாறும் அதில் அல்லாஹ்வின் அருளினை தேடுமாறும் அதிகமாக அவனை ஞாபகப்படுத்துமாறும் அதன் மூலம் வெற்றி பெறுவீர்கள் என்று அல்லாஹ் பூமியில் பிரயாணம் செய்வதனை தூண்டுவதனை அவதானிக்க முடிகிறது.

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

(ஜும்ஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். (62:10)

இவ்வசனத்தில் இறைவனின் அருளினை தேடுவதும் , அவனை நினைவு கூர்ந்து பிரயாணம் செய்வதும் வெற்றியடைவதற்கான வழி என்று இறைவன் குறிபிட்டுள்ளதன் மூலம் பிரயாணங்கள் இறைஅருளினைப்பெற உதவுகின்றது என்பதனை விளங்கிக்கொள்ளலாம்.

இவ்வாறு அரேபியர்களுக்கு இயல்பாகவே காணப்பட்ட பிரயாணத்தின் மீதான விருப்பம், அல்லாஹ்வின் படைப்புக்கள் , அத்தாட்சிகளை அறிதல் , முன்சென்ற சமுதாயத்தினரில் படிப்பினை பெறல் , இறைவனின் அருளினை தேடல், உணவு தேடி பயணம் செய்தல் போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாம் பிரயாணங்களைத் தூண்டுகின்றது.

இவ்வாறு இஸ்லாம் பல்வேறு வகையான நன்மைகளை கொள்ளையடித்துக்கொள்ளக் கூடிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பிரயாணத்தினை ஊக்குவிக்கின்றது. ஆனால் இன்று எம்மில் பலர் இவ்வாரான நோக்கங்களைவிட்டுத் தூரமாகி பல்வேறு அசிங்கங்களை அரங்கேற்றும் விதமான இஸ்லாம் தடைசெய்த விடயங்களை அரங்கேற்றுகின்ற பிரயாணங்களாக எமது இன்றைய பிரயாணங்கள் அமைத்திருப்பதனை அவதானிக்கும் போது மிகவும் கவலையளிக்கின்றது. குறிப்பாக சுற்றுப் பிரயாணங்கள் , கல்விச் சுற்றுலா என்ற நாமத்தில் எத்தனையோ அசிங்கங்களை பொது இடங்களில் அரங்கேற்றும் அவலங்கள் அன்றாடம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நம் அனைவரது  பயணங்களையும் இறைவனுக்குப் பொருத்தமாக அமைத்து எமது வாழ்வினை மறுமையை நோக்கிய பயணமாக அமைத்துக்கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்  நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *