Featured Posts

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு

அத்தியாயம் 41
வசனங்கள் 54

அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான்.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது.

அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3)

உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன்(யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.(41:36)

42) சூரதுஸ் ஷுரா – கலந்தாலோசனை

அத்தியாயம் 42
வசனங்கள் 53

அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் அவனிலே முழுமையாக சார்ந்திருப்பதுடன் பெரும் பாவங்களை, மானக்கேடானவற்றையும் விட்டும் தம்மை காத்துக்கொள்வர், மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று, அவனை தொழுது, தமக்குள்ளே கலந்தாலோசித்துக் கொள்வர் என்கின்றான்.

அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (42:37,38)

43) சூரதுஸ் ஸுக்ருஃப் – அலங்காரம்

அத்தியாயம் 43
வசனங்கள் 89

உலக மாயைகளை பற்றி இந்த அத்தியாயத்தின் 32ம் வசனம் தொடக்கம் சொல்லிக் காட்டுகின்றான். நிராகரிப்போருக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களையும்சுட்டிக்காட்டுகின்றான்.

தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால்இ இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். (43:35)

பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். (43:67)

44) சூரதுத் துஹான் – புகை

அத்தியாயம் 44
வசனங்கள் 59

நாளை மறுமையின் அமளிதுமளிகளைப் பற்றி விபரக்கும் இந்த அத்தியாயத்தின் 9 வது வசனம் தொடக்கம் மறுமை நம்பிக்கையில் சந்தேகப்பட்டவர்களாக அவர்கள்விளையாடிக் கொண்டிருப்பர் என எல்லாம் வல்ல அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.

ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.

(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; ‘இது நோவினை செய்யும் வேதனையாகும்.’

‘எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்’ (எனக் கூறுவர்). (44:10-12)

45) சூரதுல் ஜாஸியா – முழந்தாள் இடல்

அத்தியாயம் 45
வசனஙகள் 37

நாளை மறுமையில் நிகழும் ஒரு மோசமான நிலையை அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் 28ம் வசனத்தில் விபரிக்கின்றான்.

(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள்(உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். (45:28)

46) சூரதுல் அஹ்காப் – மணல் குன்றுகள்

அத்தியாயம் 46
வசனங்கள் 35

ஆத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பட்ட ஹுத் (அலை) அவர்கள் மணல் குன்றுகளில் இருந்து அந்த சமுதாயத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நேர்வழியின் பால் அழைத்ததைஅல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 21ம் வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான்.

மேலும் ‘ஆது’ (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் – (அவர்)தம் சமூகத்தாரை, ‘அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் – நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான்பயப்படுகிறேன்’ என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. (46:21)

47) சூரது முஹம்மத்

அத்தியாயம் 47
வசனங்கள் 38

நபியவர்களை பற்றி 2வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்…

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது – இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ளஉண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான். (47:2)

மேலும் இந்த நபியை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை இந்த அத்தியாயத்தின் இருதியில் குறிப்பிடுகின்றான்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)

48) சூரதுல் பத்ஹ் – வெற்றி

அத்தியாயம் 48
வசனங்கள் 29

நபியவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் நீண்ட நாள் ஆசையாக இருந்த அல்லாஹ்வின் முதலாவது ஆலயம் அமைந்திருக்கும் மக்கா வெற்றி தொடர்பான நன்மாறாயத்தைஅல்லாஹ் இந்த அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எடுத்தியம்புகின்றான்.

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.

உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில்நடத்துவதற்காகவும். (48:1,2)

49) சூரதுல் ஹுஜ்ராத் – அறைகள்

அத்தியாயம் 49
வசனங்கள் 18

ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு பண்புகள் தொடர்பான செய்திகளை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நபியவர்களின்அறைகளுக்கு பின்னால் இருந்து சப்தமிட்டு அழைக்கின்ற நடைமுறையை அல்லாஹ் கண்டிக்கின்றான். மேலும் நபியவர்களின் சாப்தத்தை விட உயர்ந்த சப்தத்தில் பேசுவதற்கும்தடை விதிக்கின்றான்.மற்றவர்களை பரிகாசம் செய்தல், குறை கூறுதல், பட்டப் பெயர் கொண்டு அழைத்தல், தவறான எண்ணம் கொள்ளுதல், குறைகளை துருவித் துருவிவிசாரித்தல், புறம் பேசுதல் என பல்வேறு பாவங்களை இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு அவற்றை விட்டும் ஒரு முஸ்லிம் தவிர்திருக்க வேண்டும் என அல்லாஹ்வழிகாட்டுகின்றான்.

(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! (49:4)

50) சூரது காப்ஃ

அத்தியாயம் 50
வசனங்கள் 45

காப்ஃ என்ற அரபு எழுத்துடன் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து இதில் உலக வாழ்க்கை, மரணம், மறுமை என மனித வாழ்கையின் எல்லாபாகங்களையும் சுட்டிக்காட்டுகின்றான். மனிதனது செயல்கள் பதியப்படுவது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றான்.

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50: 17,18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *