எனது உறவினர் ஒருவரின் மகனுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழமைபோன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிலுமாய் சம்பிரதாயங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் தம்பதிகள் சிலநாட்களுக்கு மாமியாரின் இருப்பிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மணமகன் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் திருமணத்தின் பின்னர் பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வழமையாக அவரது முதல் வேலை தாயின் கையில் அந்த மாதத்திற்கான செலவுத் தொகையை ஒப்படைப்பதே. ஆனால், வழமைக்கு மாறாக அதைத் தனது மனைவியினூடாக வழங்கியிருந்தார். அதை இன்முகத்தோடு பெற்றுக் கொண்டாலும் அந்தத் தாய் உள்ளுக்குள் அனுபவித்த உரிமைப் போராட்டத்தை என்னால் உணர முடிந்தது.
அந்த மகன் தாயிடம் அப்படி நடந்து கொண்டது ஒன்றும் புதுமையல்ல. திருமணத்தின் பின் பெரும்பாலான ஆண்கள் இவ்வாறாக நடந்து கொள்வதை ஆங்காங்கே அவதானிக்க முடிகிறது.
இதற்குக் காரணம் தனது மனைவியை நல்லவள் என மற்றவர்களுக்கு அடையாளப் படுத்துவதாயிருக்கலாம் அல்லது, மனைவி மீதுள்ள அன்பினை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் அல்லது, சமூகத்தில் சிலருக்கு பழகிய விடயம் என்பதற்காக இருக்கலாம். ஆனால், அது மனைவி என்பவளுக்கு தற்காலிகத் திருப்தியொன்றைத் தவிர வேறெதையும் அவளுக்குக் கொடுத்துவிடப் போவதில்லை.
கணவர் தனது சம்பளப் பணத்தின் ஒருபகுதியை தன் தாய்க்கோ தந்தைக்கோ வழங்கி வைப்பதில் மனைவியின் தலையீடு எவ்வகையிலும் தேவையற்றதொன்றே. தனது பெற்றாரைப் பாதுகாத்துப் பராமரிப்பது என்பதை ஆண் வர்க்கத்தினருக்குக் கடமையாக்கிய இஸ்லாம் அதைத் தனிக் கல்வியாகவே முன்வைக்கிறது. இது தெரிந்திருந்தும் பெரும்பாலான ஆண்கள் தான் நல்லதொரு கணவன் என்பதை நிரூபிக்க முனைகிறார்களே தவிர, நல்ல மகன் என்பதை நிரூபிக்கத் தவறிவிடுகிறார்கள்.
மணமாகி வாழ்க்கைக்குள் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனுக்கும் அவரது பெற்றோருக்குமிடையிலான தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதனை மார்க்க ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இன்னும் ஆழமாக நோக்கினால் கணவரின் தாயை மனைவிக்குப் பிடிக்காமல்கூட போயிருக்கலாம். ஆனால், அதைவிடப் பெறுமதியானது அந்தத் தாயாரின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்தான். அதன் பெறுமதி தெரிந்திருந்தால், அவர்களின் உறவுக்குள் பங்கம் வராமல் பாதுகாப்பதிலேயே முஃமினான ஒரு மனைவி கவனமாக இருப்பாள்.
ஆனால், வரதட்சணை பரிசளித்த தீய விளைவுகளில் முதன்மையானது இந்த தாய்-மகன் பிரிவு எனக் கூறலாம். வரதட்சணையைக் கேட்டுப் பெற்ற மணமகன் மணமகளின் பிடிக்குள் ஆட்பட்டுக் கிடக்கும் போது, அவள் மாமியார் மாமனாரின் வாழ்த்தைப் பெறுவதைப் பற்றி எங்கனம் சிந்திக்க முடியும்?
ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த இந்த நடைமுறைகள் தவிர்க்கப்பட்டாலேயொழிய ஆரோக்கியமான விளைவுகளைப் பெறமுடியாது.
அது ஒருபுறமிருக்க, அந்த மணமகள் வந்த ஓரிரு வாரத்தினுள் குடும்ப உறவினுள் சலசலப்பு வளரவும் ஆரம்பித்தது. மணமகள் வெளியிட்ட சில விச வார்த்தைகள் அவளது மதினி, மாமியார் அனைவரிடமிருந்தும் வெகு விரைவில் கணவரை வேறுபடுத்திவிடுவாள் என்பதை உணரமுடிந்தது. மணமகளின் நடத்தை ஒரு தேன்கூட்டைக் கலைப்பதற்கு ஒப்பாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. பிறந்த வீட்டில் அவளது தாய் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டிய புத்திமதிகள் இவையல்ல. தன் கணவரின் குடும்பத்தினரை தான் பாதுகாக்காது விட்டாலும் தன்னால் எந்த வருத்தமும் அவர்களுக்கு நேர்ந்து விடக்கூடாதென்பதை அவளது தாய் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறே, தேன்கூட்டைப் போன்ற உறவுகளைக் கலைக்கும் ஆண்களும் சமூகத்தில் இல்லாமலில்லை. உறவுகளைப் பேணுதல் என்பது ஒவ்வொருவருவரின் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் நேரடித் தொடர்பு பட்டுள்ள ஒன்றாகவே இஸ்லாம் இதனை எடுத்துரைக்கிறது. குறைந்த பட்சம் சுற்றியுள்ள உறவுகளிடமிருந்து ஒரு புன்னகையையாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அடுத்து எம் பெற்றோர்களை எடுத்துக்கொண்டால் தான் பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து வளர்த்த தனது பிள்ளைகள் மூலம்தான் அதிக வேதனையடைகிறார்கள்.
“நான் வளர்ந்துவிட்டேன்… இனிமேல் உங்கள் தலையீடு தேவையில்லை…. சொந்தமாக முடிவெடுக்க என்னாலும் முடியும்…”
என்னும் விதமாக பிள்ளைகள் நடந்துகொள்ளும்போது, அத்தருணங்களில் பெற்றோர் தாம் அந்நியப்படுவதாய் உள்ளுக்குள் வலியுறுகிறார்கள். தக்க காரணமின்றி அவ்வாறானதோர் வலியை அவர்களுக்குக் கொடுத்து விடாமலிருப்பதே பிள்ளைகளுக்கு ஆனந்தத்தையும் ஆசிர்வாதத்தையும் பெற்றுத் தருவதாயிருக்கும்.
பாரதூரமான முடிவுகளை தானே எடுத்துவிட்டு அது பிழைத்துவிடும் தருணத்தில் மட்டும் பெற்றோரைச் சம்பந்தப்படுத்துவது போன்றவை அவர்களை மிகவும் வேதனைப்படுத்துவதாகும்.
சிறிய விடயமாயினும் பெற்றோரிடம் மசூறா செய்து செயற்படும்போது அதில் எவ்வளவு பறக்கத்தும் முன்னேற்றமும் கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாகவே உணரலாம். சில விடயங்களில் அவர்கள் பிள்ளைகளோடு முரண்பட்டாலும் காரண காரியங்களைப் பேசித்தீர்க்கும் சந்தர்ப்பங்களாக அவற்றை எடுத்துக் கொள்ளலாம். கொள்கை ரீதியாக பெற்றோருடன் முரண்பாடு வரலாம். ஆனால், அவர்களது அன்பிலிருந்து மாத்திரம் விலகாமல் பார்த்துக் கொள்வதே திறமை.
சில குடும்பங்களில் பெற்றோர் தன் விருப்பங்களை பிள்ளைகளில் திணித்துவிட்டு பின்னர் மூக்குடைந்து போவதும்,
அவ்வாறு திணித்தது தவறுதான்…
நல்லது கெட்டதை எடுத்துச் சொல்வதோடு நின்றிருக்கலாமோ…
என்றெண்ணி அவர்கள் வருந்தும் வண்ணம் காலம் பல படிப்பினைகளைக் கொடுத்திருக்கலாம். எப்படியாயினும் தங்களின் மன்னிப்பிலும் பிள்ளைகளின் வெற்றி தங்கியுள்ளது, என்பதை பெற்றோர் உணரும்வரை அல்லது, மன்னிக்கும் குணத்திற்கு பெற்றோர் வசப்படும்வரை, அந்தக் காத்திருப்பே பிள்ளைக்குச் சவாலாகிப் போகிறது.
எது எப்படியிருப்பினும் வேலைப் பழுவில் திண்டாடும் கணவனை சில நேரங்களுக்காவது அவரது தாயாருடன் உறவாட வழியமைக்கும் மனைவியும், அவர்களுடன் உரையாடுவதால் தனக்கு ரீசார்ஜ் (மீள்சக்தி) கிடைப்பதாய் உணரும் பிள்ளையும் வாழும் வீட்டில் ஆசீர்வாதங்களும் ஆனந்தமும் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.