மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்.
ஒரு மனிதனை படைப்பதும், அழிப்பதும், அல்லாஹ்வின் கடமையாகும். ஒரு மனிதன் எப்படி மரணிப்பான், எந்த நிலையில் மரணிப்பான், எந்த இடத்தில் மரணிப்பான் என்ற அனைத்து விவகாரங்களையும் அறிந்த ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஒரு மனிதனின் மரணத்தின் முடிவை வைத்து இது நல்ல மைய்யத்து, இது கெட்ட மைய்யத்து என்று உலகில் யாருக்கும் உறுதியான தீர்ப்பு கொடுக்க முடியாது. பொதுவாக உலக நடை முறைகளை வைத்து மக்கள் தீர்பளிப்பார்கள். அப்படி தீர்ப்பளிப்பதை நாம் கட்டாயமாக தவிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் முஸ்லிம்களாலோ, அல்லது முஸ்லிம் அல்லாதவர்களினாலோ கொலை செய்யப்பட்டு மரணிக்கின்றான் என்றால் இது கெட்ட மைய்யத்து என்று மார்க்கம் தெரியாத சிலர் கூறுவதை காணலாம்.இது இவர்களின் அறியாமையின் வெளிப்பாடாகும். அப்படியானால் உமர் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) போன்ற சிலர் கூர்மையான ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்கள். அதற்காக அவர்களின் மரணம் கெட்ட மரணம் என்ற சொல்வதா ? இப்படி தவறாக கூறுவதை விட்டும் நம்மை
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
ஒரு யுத்தத்தில் நபித்தோழர் ஒருவர் எதிரிகளை ஆக்ரோசமாக வெட்டி வீழ்த்திக் கொண்டு செல்லும் போது அருகிலிருந்த நபித்தோழர்கள் இந்த நபித் தோழர் சுவனவாசி என்று சொல்லும் போது, இவர் நரகவாதி என்று நபியவர்கள் கூறினார்கள். இறுதியில் அவர் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறார். எனவே உலகில் எந்த மரணங்களையும் முன் வைத்து இது நல்ல மைய்யத்து அல்லது இது கெட்ட மைய்யத்து என்று யாருக்கும் தீர்ப்பு சொல்ல முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே மிக நன்கு அறிந்தவனாகும். ஒரு மனிதனின் வெளித் தோற்றம் மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அவனது மறைமுகமான வாழ்க்கையின் உண்மையை அல்லாஹ்வே அறிவான்.
இருந்தாலும் சில விடங்களை நபியவர்கள் நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவைகளை கவனியுங்கள்.
“நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து யா ரஸூலுல்லாஹ் ! எனது பொருளை ஒருவன் (திருடன்) அபகரிக்க வருகிறான், நான் என்ன செய்வது என்ற கேட்ட போது, நீ கொடுக்காதே என்றார்கள். நான் கொடுக்கா விட்டால் அவன் என்னை கொல்ல வந்தால் என்ன செய்வது என்றார்,அருகிலுள்ள முஸ்லிம்களை உதவிக்காக அழை என்றார்கள். அப்படி யாரும் இல்லா விட்டால் என்ன செய்வது என்று கேட்ட போது, ஆயுதத்தின் மூலமாக உன்னை பாதுகாத்துக் கொள் என்றாரகள். அவனும் ஆயுதத்தை தூக்கினால் நான் என்ன செய்வது என்றார். நீ முந்திக் காண்டு அவனை கொள், அவன் நரகவாதி என்றார்கள். அவனது வாழ் முந்தி நான் மரணித்து விட்டால் என்று கேட்ட போது, நீ ஷஹீதாவாய் என்றார்கள். (முஸ்லிம்)
எனவே நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒருவன் கொள்ளையடிக்க வருகிறான் என்றால், நமது பொருளாதாரத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். பாதுகாப்புக்காக போராடி மரணித்தால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும். அந்த விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
பலகீனமான முஃமினை விட பலமான முஃமின் தான் அல்லாஹ்விற்கு விருப்பமானவர் என்ற செய்தியும் மேற்ச் சென்ற இந்த ஹதீஸோடு
ஒத்து போகிறது. ஒரு முஃமின் எப்போது தன்னை பலமாகவே வைத்துக் கொள்வான்.
எந்தெந்த கட்டங்களில் ஷஹீதுடைய நன்மை கிடைக்கிறது என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் கவனியுங்கள்.
யார் தனது பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார். மேலும் யார் தனது மார்க்கத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிராறோ அவர் ஷஹீதாவார். யார் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்… என்ற நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி)
அதே போல எந்தெந்த நிலையில் உள்ளவர்கள் ஷஹீதுடைய நிலைக்கு ஆளாவார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் அறியலாம். கொள்ளை நோயினால் மரணித்தவர் ஷஹீதாவார். வயிற்றோற்ற நோயினால் மரணித்தவர் ஷஹீதாவார். நீரில் மூழ்கி மரணிப்பவர் ஷஹீதாவார். நெருப்பில் சிக்கி மரணித்தவர் ஷஹீதாவார். கட்டட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணித்தவர் ஷஹீதாவார். (அபூதாவூத், நஸாயி)
மேற்ச் சுட்டிக் காட்டிய அனைத்தும் போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் அந்தஸ்துகளாகும். அதாவது நோயோடு நீண்ட காலமாக போராடி
இறுதியில் மரணிக்கிறார். திடீரென்று நெருப்பு பிடித்துக் கொள்கிறது. நெருப்பிலிருந்து தப்பிக்க போராடி, இறுதியில் மரணிக்கிறார்.
தண்ணீரில் மூழ்கும் போது வெளியே வருவதற்கு தண்ணீரோடு போராடி மரணிக்கிறார். திடீரென்று கட்டடம் இடிந்து வீழும்போது தப்பிக்க போராடி மரணிக்கிறார். எனவே இவைகள் அனைத்தும் போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் ஷஹீத் அந்தஸ்துகளாகும்.
எனவே ஒரு முஃமீனுடைய வாழ்க்கையில் கடைசி வரை அல்லாஹ்விற்கான போராட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.