Featured Posts

மனங்களில் குரோதங்களைத் தேக்கி வைக்க வேண்டாம் [ரமளான் சிந்தனை – 01]

சென்ற வருட நோன்பை முடித்து நேற்றுத்தான் வழியனுப்பிது போன்றிருக்கின்றது. அதற்குள் மறு ரமளான் நோன்பும் நம்மை அடைகின்றது.

நாம் அதை அடைவது நிச்சயமா? என்ற கேள்வியோடும், அல்லாஹ் அதன் முழுமையான பாக்கியத்தை நமக்கு அருள வேண்டும் என்ற தூய பிரார்த்தனையோடும் நம் அனைவர்களையும் முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாக அவன் மரணிக்கச் செய்வானாக!

பிற முஸ்லிம்களோடு குரோதம் வேண்டாம்:
நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள். சில நொடிகள் இங்கு வாழ்வோம், நாம் குரோதித்த, டோபித்த மக்கள்தான் நம்மை மீண்டும் வழியனுப்ப மண்ணறைக்கு வருவார்கள்.

ஏன்? அவர்கள் நமது ஈமானிய உறவுகளாச்சே!
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரன் போன்றவன். #எனவே நாம் ஒவ்வொருவரும் தத்தம் தவறுகளை மன்னித்து பரவுபகாரகத்தோடும், தாராளத் தன்மையோடும் வாழ முயற்சி செய்வோம்.

நம்மை விட்டும் பிரிந்து மண்ணறைகளில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களுக்காகவும் தஹஜ்ஜுத் மற்றும் ஏனைய வேளைகளிலும் பிரார்த்தனை செய்வோம். (பதிவிடும் நான் உட்பட)

அன்ஸாரிகளான நபித்தோழர்களின் உயர் பண்பாடுகளில் ஒன்று பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு சிறப்பிக்கின்றது.

وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ا (لحشر/ ١٠)

அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தமக்குப் பின்னால் வந்தவர்களுக்காக,

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ.

“எங்கள் இரட்சகனே! எமக்கும் ஈமானோடு எம்மை(ப் பிரிந்து) முந்திய எமது சகோதரர்களுக்கும் பாவமன்னிப்புத் தருவாயாக! ஈமான் கொண்டவர்கள் விஷயத்தில் எமது இதயங்களில் குரோதத்தன்மை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்கனே! நிச்சயமாக நீ மிகப் பெரும் அன்பாளன், மிகக் கிருபை செய்பவன்” என்று பிரார்த்திப்பார்கள் .

அத்துடன் பிற முஸ்லிம்களோடு மார்க்க விரோதக் கருத்துக்களில் உயர்ந்த நமது உறுதிக்காவும் அவர்களின் சீர் திருத்தம் வேண்டியும் பிரார்த்தனை செய்வோம். மறப்போம் மன்னிப்போம் என்ற நிலையை உருவாக்குவோம்.

இறை மன்னிப்பைத் தடுக்கும் குரோதம்
முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் ஹதீஸின் பொருள் பற்றி தனிமையில் சுய பரிசோதனை செய்வோம்.

عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم، قال: ” تفتح أبواب الجنة يوم الإثنين، ويوم الخميس، فيغفر لكل عبد لا يشرك بالله شيئا، إلا رجلا كانت بينه وبين أخيه شحناء، فيقال: أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا ( أخرجه الإمام مسلم في صحيحه)

பொருள்:
பிரதி திங்கள், மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் (பாவங்கள்) மன்னிக்கப்படுகின்றன. யாருக்கும் தனது மற்ற (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையில் குரோதமான நிலை காணப்படுகின்றதோ அவரைத் தவிர. அவ்விருவரும் சமஸரமாகும் வரை காத்திருங்கள், அவ்விருவரும் சமஸரமாகும் வரை காத்திருங்கள். அவ்விருவரும் சமஸரமாகும் வரை காத்திருங்கள் என (வானவர்களிடம்) கூறப்படும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் நபித்தோழர் அபூஹுரைரா ரழி அவர்கள். (முஸ்லிம்)

படிப்பினை:
(1) நமக்கெதிராக ஒரு முஸ்லிம் செய்கின்ற தவறுகளை மறத்தல்.

(2) ஈமானிய யதார்த்தம் பற்றிய உண்மைகளை உணர்த்தும் மேற்படி பிரபிரார்த்தனை தொடர்பாக சிந்தித்தல்.

(3) நமது உடன் பிறப்புக்கள் மற்றும் உறவுகளோடு காணப்படும் கோபதாபங்களை குரோதங்களை மறந்து மன்னித்தல்.

கவனிக்க:
1- சிலர் நமது பெருந்தன்மையையும் பொருட்படுத்தாது நடப்பதை நாம் உணர்கின்ற போது ஸலாத்தோடு சரி நமது உறவை முறிக்காது பாதுகாத்துக் கொள்ளல்.

2- சில சகோதரர்கள் நம்முடன் மார்க்க விளக்க முரண்பாட்டில் இருப்பதை அறிவோம்.
அதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்தாது, அவர்களின் கருத்துக்களை நியாயமான பார்வையில் விமர்சனம் செய்கின்ற போது அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விமர்சிப்பதைத் தவிர்த்தல். பாரிய வழிகேடர்களைத் தவிர

சென்று போன எனது பதிவுகளால் அல்லது என்னால் உலமாக்கள், கல்விமான்கள், சிந்தனைவாதிகள், இயக்க நண்பர்கள், மாற்று முகாம் அன்பர்கள் ஒருவர் கூட மனத்தாக்கம் பெற்றிருப்பின், அல்லது எனது எழுத்துக்களால் அவர்களின் மனங்களில் ரணங்கள்; வடுக்கள் படிந்திருப்பின் நான் அவர்கள் அனைவரிடமும் மனதால் மன்னிப்பு வேண்டி மேற்படி பிரார்த்தனையில் அவர்களையும் என்றும் இணைத்துக் கொண்டது போன்று வரும் நாட்களிலும் “இன்ஷா அல்லாஹ்” இணைத்துக் கொள்வேன்

ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவைத் தருவானாக!

-ரிஸ்வான் மதனி

One comment

  1. Abu Riyaz Gingee

    சகோ நான் ஒரு காப்பி எடுத்துக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *