ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்!
அஷ்ஷெய்க் சஈத் அப்துல் அழீம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
ஒவ்வொரு முஸ்லிமும் தான் நோற்றிருக்கும் நோன்பு பாழாகாமல் இருக்கவும், வெறுமனே பசித்திருந்து தாகித்திருந்ததே தனக்கான பங்கு என்றில்லாதிருக்கவும் மனித மற்றும் ஜின் இன ஷைத்தான்களின் தவறான ஊசலாட்டங்களிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அல்லாஹ்வின் அடியார்களை ஏமாற்றுகின்ற விடயத்தில் ஷைத்தான் பல வழிகளால் வருவான். “எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதால் நிச்சயமாக நான் பூமியில் அவர்களுக்கு(ப் பாவங்களை) அலங்கரித்துக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்” (அல்குர்ஆன், 15:39) என்று அல்லாஹ்விடம் ஷைத்தான் கூறியதுபோல மனிதர்களுக்கு சிலவேளை அசத்தியத்தை அழகாகவும், சத்தியத்தின்பால் அவர்களுக்கு வெறுப்பையும் அவன் ஏற்படுத்துவான்.
அத்தோடு, மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் செயல்தான் விடயங்களில் மிகப்பயன்மிக்கது என்ற கற்பனையை அவன் உண்டாக்குவான்; விடயங்களில் அவனுக்கு மிகப்பயன்மிக்க செயலை விட்டும் அவனை விரண்டோட வைத்து, அதுவே அவனுக்குத் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என்றவாறும் கற்பனையை உண்டாக்குவான். அசத்தியம் மனிதனுக்கு அலங்கரித்துக் காட்டப்பட்டு, அதை அழகானது என்றும் அவன் கண்டுவிட்டால் சத்தியம் என்று அவன் (பிழையாகக்) கண்டதை நிறைவேற்றுவதற்காக தனது முழுப் பலத்தையும் அவன் பிரயோகிப்பான். அதிலேயே அவனது அழிவு இருந்தாலும் சரியே!. அல்லாஹ் கூறுகிறான்: “செயல்களால் பெரும் நஷ்டமடைந்தவர்கள் பற்றி உங்களுக்கு நாம் அறிவிக்கட்டுமா? என்று (நபியே) நீர் கேட்பீராக! அவர்களின் முயற்சிகள் இவ்வுலக வாழ்வில் வீணாகிவிட்டன. அவர்களோ, தாம் நல்லதையே செய்வதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன், 18:103,104)
{ நூல்: ‘துரூசுஸ் ஸமான் fபீ ஷஹ்ரிஸ் ஸியாம்’, பக்கம்: 58,59 }
قال الشيخ سعيد عبد العظيم رحمه الله تعالى:-
[ فعلى كل مسلم أن يحذر وساوس شياطين الإنس والجن في هذا الشهر المبارك، حتى لا يفسد عليه صيامه ويكون حظه منه مجرد الجوع والعطش.
والشيطان في تغريره بعباد الله يسلك سبلا كثيرة، وتارة يحسن لهم الباطل ويكرّه إليهم الحق كما قال لرب العزة: «ربّ بما أغويتني لأزيّننّ لهم فى الأرض ولأغوينّهم أجمعين إلا عبادك منهم المخلصين ». فيزيّن له الفعل الذي يضره حتى يخيل إليه أنه أنفع الأشياء، وينفّر من الفعل الذي هو أنفع الأشياء له حتى يخيل له أنه يضرّه. والإنسان إذا زيّن له الباطل فرآه حسنا، فإنه يندفع بكل قواه لتحقيق ما يراه حقا وإن كان فيه هلاكه « قل هل ننبّئكم بالأخسرين أعمالا الذين ضلّ سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ».
{ دروس الزمان في شهر الصيام، ص – ٥٨ ، ٥٩ }
தமிழில்:
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி, மதனி)
புதிய சாளம்பைக்குளம், வவுனியா
26/05/2018