Featured Posts

அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! [உங்கள் சிந்தனைக்கு… – 040]

அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவும் வேண்டாம்; யாரேனும் அவரை ஏசினால், அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!’ என்று அவர் சொல்லட்டும்”. { புகாரி- 1904 }

இந்த ஹதீஸுக்கு அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் கூறுகின்றார்கள்:

“நோன்பை ஏனைய நல்லமல்களுக்கு மத்தியில் அல்லாஹ் பிரத்தியேகமாகச் சிறப்பித்திருக்கின்றான். ஏனெனில்  இந்நோன்பு, பொதுவாகவே வணக்க வழிபாடுகளில் மிகப் பிரதானமானதும் மகத்துவமிக்கதுமாகும். மனிதனுக்கும், அவனின் இரட்சகனுக்குமிடையிலான இரகசியமாக இது இருப்பதே இதற்கான காரணமாகும். மனிதன் நோன்பாளியாக இருக்கின்றானா? அல்லது நோன்பு பிடிக்காமல் இருக்கின்றானா? என்று அறியப்பட முடியாது. அவன் மக்களுடன் இருந்தாலும் இதுகுறித்து அறியப்பட முடியாது. ஏனெனில், அவனின் எண்ணம் மறைமுகமானதாக இருக்கிறது. இதனால்தான் இந்நோன்பு, மனத்தூய்மையால் மிக்க மகத்துவமிக்கதாகக் காணப்படுகின்றது. ஆகையினால்தான், அல்லாஹ் இதை ஏனைய நற்காரியங்களுக்கு மத்தியில் பிரத்தியேகமாகச் சிறப்பித்திருக்கின்றான்.

அறிஞர்களில் சிலர் இதன் கருத்து குறித்து இப்படியொரு விளக்கத்தைத் தருகின்றார்கள்: “மறுமை நாளில் அல்லாஹ் இருக்கின்றபோது மனிதன் பிற மனிதர்களுக்காகக் கொடுத்துத் தீர்க்கப்பட வேண்டிய அநீதிகள் இருக்கும். அப்போது, அநீதியிழைத்தவனின் நோன்பைத் தவிரவுள்ள ஏனைய நற்கருமங்களிலிந்து அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். ஆனால்,  அநீதியிழைத்தவனின் நோன்புக்குரிய கூலியிலிருந்து எதுவுமே எடுத்துக் கொடுக்கப்படமாட்டாது!”

‘நோன்பிற்கான கூலி, நோன்பாளிக்குக் குறைவின்றி பரிபூரணமாகக் கொடுக்கப்படும்; அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கான பரிகாரமாக அநீதியிழைத்தவனின் நோன்புக் கூலியிலிருந்து எதுவும் எடுத்துக் கொடுக்கப்படமாட்டாது!’ என்ற இக்கருத்து நல்லதோர் கருத்தாகும். அத்துடன், மனிதன் புரியும் நற்செயலுக்கான கூலி, ஒன்று முதல் பத்து மடங்கு வரை அதிகரிக்கப்படுகிறது. நோன்பைத் தவிர! இதற்கான கூலி கணக்கின்றிக் கொடுக்கப்படும்; அதாவது, பன்மடங்குகளாக அதிகரித்துக் கொடுக்கப்படும்”.

{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 5/267 }

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:- [ قال الله: كل عمل بن آدم له، إلا الصيام؛ فإنه لي وأنا أجزي به! والصيام جنّة، وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب؛ فإن سابّه أحد أو قاتله فليقل: إني امرؤ صائم ]. (رواه البخاري برقم ١٩٠٤ ، كتاب الصيام )

 قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى في شرحه للحديث:

  [ والمعنى: أن الصيام يختصه الله سبحانه وتعالى من بين سائر الأعمال؛ لأنه (أي: الصيام) أعظم العبادات إطلاقا. فإنه سرّ بين الإنسان وربه؛ لأن الإنسان لايعلم إذا كان صائما أو مفطرا، فهو مع الناس ولا يعلم به؛ لأن نيته باطنة، فلذلك كان أعظم إخلاصا، فاختصه الله من بين سائر الأعمال.

 قال بعض العلماء: ومعناه إذا كان الله سبحانه وتعالى يوم القيامة وكان على الإنسان مظالم للعباد، فإنه يؤخذ للعباد من حسناته إلا الصيام. فإنه لا يؤخذ منه شيئ؛  وهذا معنى جيد أن الصيام يتوفر أجره لصاحبه ولا يؤخذ منه لمظالم الخلق شيئا. ومنها أن عمل ابن آدم يزاد من حسنة إلى عشرة أمثالها إلا الصوم؛ فإنه يعطى أجره بغير حساب. يعني: أنه يضاعف أضعافا كثيرة ]

{ شرح رياض الصالحين، ٥/٢٦٧ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *