Featured Posts

பாடம்-04 | தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை

தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை.

தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. தவ்ஹீத் அர் ருபூபிய்யா – அல்லாஹ்வின் ஆதிபத்தியத்தில் ஏகத்துவம். அகிலங்களுக்கெல்லாம் அதிபதி ஒருவனே என்றும் அவனே அதனைப் படைத்தவன், நிர்வாகிப்பவன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், பாதுகாவலன் என்றும் அவன்தான் அல்லாஹ் என்ற உறுதியான நம்பிக்கை.

 

2. தவ்ஹீத் அல் உலூஹிய்யா – அல்லாஹ்வின் வணக்கத்தில் ஏகத்துவம். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற விசுவாசம். உதாரணமாக வணக்கங்கள், வேண்டுதல் செய்தல், கண்ணுக்குப் புலப்படாதவைகளிடம் உதவி தேடல், சத்தியம் செய்தல், குர்பான் கொடுத்தல், ஏழைகளுக்கு தானம் கொடுத்தல், நோன்பு நோற்றல், ஹஜ் யாத்திரை, போன்ற சகலவற்றையும் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்தல்.

3. தவ்ஹீத் ஈ அஸ்மா வ அல் சிபா – அவனுடைய அழகிய திருநாமங்களிலும் தன்மைகளிலும் ஏகத்துவம்.

பின்வரும் அம்சங்களில் நம்பிக்கை வைத்தல்.

 அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களோ குறிப்பிட்ட அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லது தன்மைகளைத் தவிர வேறு எவற்றையும் அல்லாஹ்வை குறிப்பிட உபயோகிக்கக் கூடாது.

→ அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லது தன்மைகளைக் கொண்டு மற்ற படைப்பினங்களை குறிப்பிடக் கூடாது (உதாரணம்: அல் கரீம் என ஒருவருக்குப் பெயரிடுவது.)

→ அல்லாஹ்வுடைய குர்ஆனும் அவனுடைய திருத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறிய தன்மைகளை உறுதிப்படுத்தல். அவற்றை அணுவளவேனும் மாற்றாமலும், அவற்றை முற்றாகப் புறக்கணிக்காமலும், புது அர்த்தங்களை புகுத்தாமலும், படைப்பினங்களை சுட்டிக்காட்டும் தன்மைகளை கொடுக்காமலும் இருக்க வேண்டும். உதாரணம்: அர் ரஹ்மான் அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான். 20:5

‘மிக உயர்ந்தவனாகிய (அல்லாஹ்) ஏழு வானங்களுக்கு அப்பால் தன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான். துல் ஹஜ் மாதம் 9ம் அரபா தினத்திலும், இரவின் கடைசி மூன்றாவது பாகத்திலும் தாழ்ந்த வானத்திற்கு இறங்குகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். தன் உருவில் அன்றி அறிவின் மூலம் எங்களுக்கு மிக அருகில் அல்லாஹ் நெருங்கி இருக்கிறான். (பி தாதிஹி). இதன்படி அல்லாஹ் எங்குமிருக்கிறான் என்ற சில மனிதரின் கருத்து பிழையாகிறது. உயர்ந்த வானத்துக்கப்பால் தன் அரியாசனத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே யாவற்றையும் செவியேற்கிறவன். பார்க்கிறவன். (42:11) குர்ஆனின் இத்திரு வசனங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் பார்க்கவும் எதனையும் கேட்கவும் சக்தி இருப்பதை குறிப்பினும் இவை படைப்பினங்களின் தன்மைகளில் எவற்றையும் குறிப்பிடவில்லை.

அதே போன்று அவன் (அஸ்ஸ வ ஜல்) என் இரு கரங்களால் படைத்ததற்கு… எனக் கூறுகிறான். (38:75) அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கிறது. (48:10)

அல்லாஹ்வுக்கு இரு கரங்கள் இருப்பதாக இவ்வசனங்கள் குறிப்பிடினும் இவை எதற்கும் சமமாகாது. உண்மை விசுவாசிகளின் மாத்திரம் அன்றி அல்லாஹ்வின் நபிமார்களாகிய நூஹு முதல் இப்ராஹீம், மூஸா, ஈசா உட்பட கடைசி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அனைவரது நம்பிக்கையும் இவையாகும்.

ஏக இறைவன் கொள்கையின் இந்த மூன்று அம்சங்களும் லா இலாஹ இல் அல்லாஹ் – வணக்கத்திற்குறிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற பொருளில் அடங்குகிறது.

வுஜுப் அல் இஜாபா ஆகிய அல்லாஹ்வின் திருத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் தவ்ஹீத் அல் உலூஹிய்யாவின் ஒரு அம்சமாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவார்கள் எனக் கூறும் சாட்சியத்தில் அல்லாஹ்வின் குர்ஆனுக்கு பிறகு பின்பற்றுதற்குரியவர் அல்லாஹ்வின் திருத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருமில்லை என்ற பொருளும் அடங்கும்.

‘(நபியே! மனிதர்களிடம்) கூறுவீராக. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள்’. 3:31

‘அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்’. 59:7

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *