ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்)
ஷிர்க் எனும் செயல் இரண்டு வகைப்படும்.
1. பெரிய ஷிர்க்
2. சிறிய ஷிர்க்
1. பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்)
இதன் காரணத்தால் நற்செயல்களில் தோல்வியும் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய பயங்கர நிலையுமேற்படும் எனக் குர்ஆன் கூறுகிறது.
‘இன்னும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்து விடும்.’ (6:88)
‘இணை வைத்துக்கொண்டிருப்போருக்கு – இவர்கள் தங்களுக்குத் தாங்களே நிராகரிப்பைக் கொண்டு சாட்சி கூறிக் கொள்பவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய பள்ளிகளை இவர்கள் நிர்வாகம் செய்ய எவ்வித உரிமையும் இல்லை. அத்தகையோர் – அவர்களுடைய செயல்கள் அழிந்து விட்டன. இன்னும் அவர்கள் (நரக) நெருப்பில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.’ (17:9)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ அவர் திட்டமாக வெகுதூரமான வழிகேடாக வழி கெட்டு விட்டார்.’ (4:116)
‘நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியை தடுத்து விடுகிறான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான். இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் இல்லை.’ (5:72)
இக்குர்ஆன் வசனங்களின்படி ஷிர்க்கான காரியங்களில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் மரிக்க நேரிட்டால் அவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காது என்பது மாத்திரமின்றி அவர் ஒருபோதும் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெளிவாகிறது.
இறந்த மனிதர்களிடம் உதவி கோருவது, சிலை வணக்கத்தின் மூலம் உதவி, நிவாரணம் முதலியவை தேடுவது, அவைகளுக்கு நேர்ச்சை வைப்பது, காணிக்கை வைப்பது, அவைகளுக்கு பணிவு காட்டும் முறையில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவது போன்ற காரியங்கள் பெரிய ஷிர்க்கில் அடங்கும்.
2. சிறிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு சிறிய அளவிலான இணை வைத்தல்)
குர்ஆன் வசனங்களும் நபியவர்களின் சுன்னாவும் சிறிய ஷிர்க்கைப் பற்றி விளக்குகின்றன. அவற்றின் அடிப்படையில் மற்றவர்களை ஏமாற்ற போலிவேஷம் போடுவது, அல்லாஹ்வையன்றி ஏனையவைகளின் மீது சத்தியம் செய்வது, அல்லாஹ்வும் நாடுவான் மற்றவர்களும் நாடுவார்கள் எனக்கூறுவது போன்ற காரியங்கள் சிறிய ஷிர்க்கில் அடங்கும்.
பின் வரும் ஹதீஸ்கள் இவற்றை மேலும் விளக்குகின்றன.
‘சிறிய ஷிர்க்கைப்பற்றி உங்களுக்காக பயப்படுகிறேன்’ என ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிறிய ஷிர்க் என்றால் என்ன என்று வினவிய போது ‘அவை உருவம் மாறிய ஷிர்க்காகும்’ எனக்கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அல் அன்சாரி (ரலி) தெரிவிக்கிறார்கள். அறிவிப்பவர் இமாம் அஹ்மத், அல் தப்ரானி, பய்ஹகி ஆகியோர்.
அல்லாஹ்வைத் தவிர வேறெவற்றின் மீதும் சத்தியம் செய்பவர் ஒரு முஷ்ரிக் எனக் கருதப்படுவார் என்று இப்னு உமர் (ரலி) தெரிவித்ததாக இமாம் அஹ்மத் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வைத் தவிர வேறெவற்றின் மீதும் சத்தியம் செய்பவர் குப்ரில் அல்லது ஷிர்க்கில் விழுந்து விட்டார், எனக் கருதப்படுவார் என்று இப்னு உமர் (ரலி) தெரிவித்தார்கள். நூல்கள்: அபு தாவூத், திர்மிதி.
அல்லாஹ்வும் நாடுவான், மற்றவரும் நாடுவார் எனக் கூறாதீர்கள். அதற்குப் பதிலாக அல்லாஹ் நாடுவான் அதன் பின்பு மற்றவர் அதனை நாடுவார் எனக் கூறுங்கள் என்று ஹுதைபா இப்னு அல் யமன் (ரலி) தெரிவித்தார்கள் – நூல்: அபு தாவூத்.
இத்தகைய சிரிய ஷிர்க்குகள் நரக நெருப்பில் ஒருவரை வீழ்த்தக் கூடிய இணை வைக்கும் பெரிய பாவங்களாகாதெனினும் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இருக்க வேண்டிய தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை இன்னும் முழுமை பெறவில்லை என்பதையே காட்டுகின்றன.
வேஷம் மாறிய ஷிர்க்குகள்.
வேஷம் மாறிய ஷிர்க்குகள் பெரிய ஷிர்க், சிறிய ஷிர்க் ஆகிய இரண்டிலும் அடங்கும். முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கையில் தாங்களும் முஸ்லிம்கள் என நடிக்கும் இறை நம்பிக்கையற்ற முனாபிக்குகள் விஷயத்தில் இது பெரிய ஷிர்க்காகும்.
பிற மனிதர்களுக்கு காட்டும் நோக்கத்தில் நற்காரியங்களைச் செய்வதும், அவற்றை அழகு படுத்துவதும், ரியா என அழைக்கப்படும் வேஷம் மாறிய ஷிர்க்காகும் என மஹ்மூத் இப்னு லபீத் அல் அன்சாரி தெரிவிக்கும் பின்வரும் ஹதீஸ் குறிப்பிடுகிறது.
‘மஸீஹ் அத்தஜ்ஜாலை விட உங்களுக்குப் பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியதென நான் பயப்படும் ஒன்றைப் பற்றிக் கூறவா? என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். ஆம் யாரசூலல்லாஹ்! என மற்றவர்கள் பதிலளிக்க, ‘அதுதான் பிற மனிதர்கள் பார்க்கிறார்கள் என்ற காரணத்துக்காக ஒருவர் எழுந்து தொழுவதும், அதனை அழகு படுத்துவதுமாகிய வேஷம் மாறிய ஷிர்க்காகும்’ என நபி (ஸல்) விளக்கினார்கள். அபி ஸஈத் அல் குத்ரி (ரலி) இதனை தெரிவித்ததாக இமாம் அஹ்மத் தன் முஸ்னத் தொகுப்பில் அறிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆபத்துகளினின்றும் தூரவிலகி வெற்றிபெற அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக.
“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.
அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்.
குர்ஆனில் 17:9 வசனம் இணைவைத்தல் வசனமில்லை. நீங்கள் தவறான குர்ஆன் வசனங்களை கூறுகிறீர்கள்.
“நிச்சயமாக இந்தக் குர்ஆன், (மனிதர்களுக்கு) எது மிக நேர்மையானதோ அதன்பால் வழிகாட்டுகிறது. நட்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகைய விசுவாசிக்கள்_ அவர்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய நற்கூலி உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றது”