நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் நாடி மோதிரம், நூல் போன்றவைகளை அணிவது ஷிர்க்காகும்.
‘அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ் எனக்கு போதுமானவன். (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுவீராக’ (39:38)
பித்தளை மோதிரமொன்றை அணிந்திருந்த ஒருவரிடம் அது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். முதுமையின் பலகீனத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கு என அந்த மனிதர் பதிலளித்தார். அதனை கழற்றுங்கள். அது உங்கள் பலகீனத்தை மேலும் அதிகரிக்கத்தான் உதவும். அதனை அணிந்திருக்கையில் உங்களுக்கு மரணம் ஏற்பட்டால் ஒரு போதும் சித்தி பெற மாட்டீர்கள் எனக் கூறியதாக இம்ரான் பின் ஹுசைன் தெரிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத் (இப்னு ஹம்பல்)
நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிப்பாளர் அனைவரையும் குறிப்பிடும் மர்பு ஹதீஸில் “எவராயினும் ஒரு துஆ கூட்டை அல்லது தாயத்தை அணிந்துக் கொண்டால் தன் நாட்டத்தை அல்லாஹ் பூர்த்தி செய்வதை அவர் ஒரு போதும் காணமாட்டார். எவரேனும் ஒரு கடல் சங்கை தொங்கவிட்டுக் கொண்டால் அவர் ஒரு போதும் ஓய்வும், சாந்தியும் பெறமாட்டார்” என நபி (ஸல்) கூறியதாக உக்பா பின் ஆமிர் தெரிவித்தார். ஆதாரம்: அஹ்மத் (இப்னு ஹம்பல்)
நபி (ஸல்) அவர்களின் இன்னுமொரு ஹதீஸின்படி, “யாரேனும் ஒரு தாயத்தை அணிந்து கொண்டால், அவர் ஒரு ஷிர்க்கான காரியத்தை செய்து விட்டார்”, என்று கூறியிருக்கிறார்கள்.
கையில் (மந்திரம் ஓதிய) ஒரு நூலை கட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட ஹுதைபா (ரலி) அவர்கள் அதனை வெட்டியெரிந்து 12:106 குர்ஆன் ஆயத்தை ஓதிக் காட்டியதாக இப்னு அபி ஹாதிம் அறிவிக்கிறார்கள்.
இப்பாடம் காட்டும் முக்கிய அம்சங்கள்:
→ பாதுகாப்பு நாடி மோதிரம், நூல் போன்றவற்றை அணிவது கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.* நபித் தோழர்களாயினும் இவற்றை அணிந்திருக்கையில் மரணிக்க நேரிட்டால் மறுமையில் சித்தி பெற மாட்டார்கள். சிறிய ஷிர்க், பெரிய ஷிர்க்கை விடக்கொடியது என்ற நபித்தோழர்களின் கூற்று இதனை உறுதிப் படுத்துகிறது.
→ பிழை செய்தால் அறியாமையை காரணம் காட்ட முடியாது.
→ பாதுகாப்புத் தேடி அணியும் எதுவும் இவ்வுலக வாழ்வில் உதவி செய்யாது. மாறாக அவற்றால் தீமையே ஏற்படும்.
→ நபி (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை கடுமையாக கண்டித்த முறையும் அவற்றை தடை செய்ததும்.
→ யாரேனும் பாதுகாப்பு நாடி ஏதேனும் ஒன்றை அணிந்து கொண்டால் அந்த மனிதர் அதன் பொறுப்பில் மாத்திரம் விடப்படுவார் என்ற எச்சரிக்கை.
→ தாயத்தை கட்டிக் கொண்டவர் ஷிர்க்கான காரியமொன்றை செய்து விட்டார் என்ற கண்டனம்.
→ சகாபாக்கள் பெரிய ஷிர்க்கை சுட்டிக்காட்டும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டி சிறிய ஷிர்க்கை தடை செய்தார்கள் என்பதை ஹுதைபா (ரலி) வின் செய்கை சுட்டிக்காட்டுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் சூரா பகராவில் 165வது வசனத்தை ஓதிக்காட்டி இக்காரியத்தை செய்தார்கள்.
→ நோய்கள், பிறரின் கண்திருஷ்டிப் படுவது போன்றவற்றிலிருந்து தாயத்து, துஆக்கூடு முதலியவைகளின் உதவியைக் கொண்டு பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கில் சார்ந்ததாகும்.
→ தாயத்து, துஆக்கூடு முதலியவற்றில் பாதுகாப்புத் தேடுபவர்கள் தாங்கள் தேடிய நிவாரணம் பெறமுடியாது, கடல் சங்கை தொங்க விட்டுக் கொண்டவர்கள் சாந்தி பெறமாட்டார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சாபம். அதாவது, அல்லாஹ் அவர்களை நிராகரித்து விட்டான் என்ற அறிக்கை.
“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.
அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்.