Featured Posts

பாடம்-09 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்

அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என (நபியே!) நீர் கூறுவீராக. அவனுக்கு யாதோர் இணையுமில்லை; (துணையுமில்லை) இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்; இன்னும் (அவனுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக.)’ அல்குர்ஆன்:6.162-163.

‘ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.’ அல்குர்ஆன்:108.2.

அலி இப்னு அபிதாலிப் பின்வருமாறு சொன்னார்கள்: ‘அல்லாஹ்வின் நான்கு தீர்ப்புகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் எனக்குத் தெரிவித்தார்கள். அவையாவன:

1. அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றின் பெயரில் அறுத்து குர்பானி செய்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

2. தன் பெற்றோர்களை சபிப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

3. அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒரு புதிய செயலை புகுத்தும் ஒருவனுக்கு அடைக்கலம் கொடுப்பவனை அல்லாஹ் சபிக்கிறான்;

4. காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்யும் ஒருவனை அல்லாஹ் சபிக்கிறான்;

‘ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அது எப்படி சாத்தியமானது யா ரசூலல்லாஹ்!’ என ஸஹாபாக்கள் வினவினார்கள். ‘தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். ‘காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லை’ என அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது ‘மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்’ என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:அஹ்மத்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வுக்கன்றி ஏனையவற்றிற்கு தானம் அல்லது குர்பான் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்.

தன் பெற்றோர்களை சபிப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம் (ஒருவர் மற்றவருடைய பெற்றோரை சபித்தால், அவர் கோபம் கொண்டு இவருடைய பெற்றோரை சபிப்பார்).

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புகுத்தும் முஹ்தித் ஒருவருக்கு அடைக்களம் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம். இஸ்லாமிய மதத்தில் மாற்றம் செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளதாகும்.இதில் தலையிட்டு இஸ்லாத்தில் பித்ஆவை புகுத்தும் ஒருவருக்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவருக்கு அடைக்களமும் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்து, அடுத்தவரின் இடத்தை வஞ்சகமாக பிடித்துக் கொள்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

ஒரு அற்ப கொசு எனினும் மகத்தான பாடம்.

ஒரு கொசுவை விக்கிரகத்திற்கு தானம் செய்து, நரகத்திற்குச் சென்ற மனிதன் நாட்டமின்றியே அதனை செய்தார். அதுவும் விக்கிரகங்களை வணங்குபவர்களின் ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அதனை செய்தார்.

வெளிப்படையான ஒரு செயலையே காஃபிர்கள் செய்ய சொன்னாலும் அதனைக் கூட செய்ய மறுத்த மற்ற மனிதர் பொறுமையுடன் மரணத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம். இறை அச்சம் உள்ளவர்களுக்கு ஷிர்க் எவ்வளவு வெருப்பான செயல் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நரகம் புகுந்த மனிதன் ஒரு முஸ்லிமாகும். அந்த மனிதன் காஃபிராக இருந்தால் ஒரு அற்ப கொசுவின் காரணமாக நரகம் புகுந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள்.

‘நீங்கள் காலில் அணியும் காலணியை கட்டும் நாடாவை விட உங்களுக்கு மிக அருகில் சுவர்க்கம் உள்ளது. நரகமும் அதைப் போன்றதே’ என்ற நபிமொழியை இந்த சம்பவம் உறுதிப் படுத்துகிறது.

முஸ்லிமின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே விக்கிரக வணக்கம் புரிபவர்களின் முக்கிய நோக்கமாகும்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *