Featured Posts

பாடம்-12 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றான். அவனே மிக்க மன்னிப்போன். மிகக் கிருபையுடையோன்.” என அல்லாஹ் கூறுகிறான். (10:106-107)

“(தவிர) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான். நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளை) படைத்துக் கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடம் தேடுங்கள். அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (29:17)

“மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவனுடைய அழைப்பை மறந்தவர்களாக உள்ளனர். மேலும் மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால் (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவனுக்கு விரோதிகளாக இருப்பர். இவன் (தங்களை) வணங்கிக்கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரிப்பார்கள். (46:5-6)

“(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கடுந் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவன் அழைத்தால் (அவனுக்குப்) பதில் அளித்து மேலும் (அவனுடைய) துன்பங்களை நீக்கி இப்புவியில் (உங்களைத் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவன் (சிறந்தவனா?) இத்தகைய அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்துக்கு உரியவன் இருக்கின்றானா? நீங்கள் சிந்திப்பது மிகக் குறைவாகும்.” (27:62)

முஹம்மத் (ஸல்) அவர்களுடைய காலத்தில் விசுவாசிகளுக்கு துன்பமிழைத்துக் கொண்டிருந்த முனாபிக் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதிராக அல்லாஹ்வின் தூதரிடம் உதவி கோருவோம் என விசுவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அந்த மக்களுக்கு ‘யாரும் உதவிக் கோரி என்னைத் தேடக் கூடாது. நிச்சயமாக அனைவரும் அல்லாஹ்விடமே உதவியும், ஒத்தாசையும் தேடவேண்டும்’ என நபி (ஸல்) பதிலளித்ததாக அத்-தப்ரானி ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்கான ஒரு செயலாகும்.

அல்லாஹ்விடம் அளவற்ற பற்றுள்ள மனிதராயினும், பிறருடைய தேவையின் பொருட்டு அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடினால் அவர் பெரும் அநியாயக்காரர் ஆகிவிடுவார்.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவதால் இவ்வுலக வாழ்வில் எவ்விதப் பயனும் ஏற்படாதது மாத்திரமின்றி அச்செயல் மனிதரை குஃப்ருடைய வழிக்கு இட்டுச்செல்லும்.

சுவர்க்கத்தை நாடும் யாரும் அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி கோருவதில்லை. அதே போன்று உணவுகளையும், செல்வங்களையும் அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் கோரக்கூடாது.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுபவனைவிட வழிகெட்டவன் யாருமில்லை.

அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் ஏனையவைகள் தங்களை மனிதன் வணங்குவதையோ, தங்களிடம் உதவி தேடுவதையோ, ஒரு போதும் அறிய மாட்டார்கள். அவைகளுக்கு அவற்றை அறிவதற்குரிய சக்தியுமில்லை.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவதனால் வணங்குபவனுக்கும், வணங்கப்படுபவைகளுக்கும் இடையில் கோபமும், பகையும் தான் வளரும்.

உதவிக்கோரி ஒன்றை அழைக்கும் போது, அச்செயல் அதற்கு செய்யப்படும் வணக்கமாகக் கருதப்படுகிறது.

மறுமை நாளுக்காக அனைவரும் ஒன்று திரட்டப்படும் போது வணங்கப்பட்டவைகளான அவைகள், மனிதன் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததையும் நிராகரிப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை அழைப்பவன் மனிதர்களில் மிகவும் வழிகெட்டவன்.

துன்பங்கள் ஏற்படும் போது அவற்றை நீக்கி அருள் புரிபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று விக்கிரகங்களை வணங்குபவர்கள் கூட அறிவார்கள். அதனால் தான் அவர்களும் தாங்கமுடியாத துன்பங்கள் ஏற்படும் போது அல்லாஹ்விடமே உதவிக் கோரி ஏகமனதோடு பிரார்த்தனை புரிகிறார்கள்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *