Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3)

பொறுமை

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (3:200)

மேலும் கூறுகிறான்: ‘சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்களில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்தச் சூழ்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்வோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக! ‘ (2:155)

மேலும் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி நிறைவாய் வழங்கப்படும்’ (39:10)

வேறோர் இடத்தில், ‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (42:43)

பிறிதோரிடத்தில்,

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (2:153)

மற்றோரிடத்தில், ‘மேலும் நாம் உங்களை நிச்சயம் சோதனைக்கு உள்ளாக்குவோம். உங்களில் யார் யார் முஜாஹிதுகள் (போராளிகள்) பொறுமையாளர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!’ (47:31)

பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிடக்கூடிய குர்ஆன் வசனங்கள் ஏராளமாய் பிரபலமாய் உள்ளன.

தெளிவுரை

பொறுமையின் தத்துவம்

பொறுமை என்பதற்கு அரபியில் ஸப்ர் என்பர். தடுத்து வைத்தல் என்பது அதன் அகராதிப் பொருள். ஆனால் ஸப்ர் என்றால் இஸ்லாமிய வழக்கில் மனத்தை மூன்று விஷயங்களில் கட்டுப்படுத்துவதாகும்.

  • அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதில்
  • விலக்கப்பட்ட செயல்களை விட்டு விலகுவதில்
  • அல்லாஹ் நிர்ணயித்த விதியை ஏற்பதில்

இறைவழிபாட்டில் பொறுமை தேவை. ஏனெனில் இறைவனை வணங்கி வழிபடுவதை சிரமமான ஒன்றாகவே மனிதன் உணர்கிறான். மனத்திற்கு அது ஒரு பாரமாகவே உள்ளது.

நோயினாலோ முதுமையினாலோ மனிதனுக்கு இயலாமை வந்து விட்டால் வணக்க வழிபாடென்பது உடலைப் பொறுத்தும் பாரமாகி விடுகிறது.

இதே போலவே ஹஜ், ஜிஹாத் போன்ற பணம் செலவு செய்து நிறைவேற்றும் வழிபாடு என்று வரும் பொழுது அவற்றை நிறைவேற்றுவதும் மனிதனுக்குச் சிரமமாகவே படுகிறது! இந்தச் சூழ்நிலைகளில் இறைவழிபாட்டை நிறைவேற்றுவதற்குப் பொறுமை தேவை.

குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறது: ‘ பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக தொழுகை ஒரு பாரமான செயல் தான். ஆனால் எவர்கள், இறுதியில் தங்கள் இறைவனைச் சந்திப்பவர்களாய் இருக்கிறோம் என்றும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் உறுதியாக நம்பி அஞ்சி வாழ்கிறார்களோ அவர்களுக்கு அது பாரமானதே அல்ல” (2:46)

இதே போல் தீமைகளை விட்டு விலகி வாழ்வதற்கும் பொறுமை தேவை. இறைமார்க்கம் தடை செய்த காரியங்களில் விழுந்து விடாதவாறு மனத்தைத் தடுத்து வைக்க வேண்டும். மனித மனமோ தீமை செய்யத் தூண்டக் கூடியதாகவே உள்ளது.

கொடுக்கல், வாங்கலின் பொழுது பொய் பேசவும் ஏமாற்றவும் மனம் ஆசைப்படுகிறது. வட்டிக் கொடுக்கல், வாங்கல் போன்ற தவறான வழியில் பொருளீட்டி உண்ணவே தூண்டுகிறது. அந்தத் தூண்டுதலுக்குப் பலியாகாமல் மனத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அதன் கடிவாளத்தைக் கைப்பற்றி அதனை நல்ல வழியில் செலுத்துவதற்கும் பொறுமை தேவை!

இதே போல விதியைப் பொருந்திக் கொள்வதற்கும் பொறுமை அவசியம். இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதி மனிதனைப் பொறுத்து இரண்டு வகைப்படும்.

1) உடன்பாடானது

2) எதிர்மறையானது

மனிதனுக்கு வளவாழ்வும் நிம்மதியும் ஏற்படுவது உடன்பாடான விதி. (அப்பொழுது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திட வேண்டும்)

உலக வாழ்வில் மனிதன் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது. சிலபொழுது நோய்நொடிகள் வந்து வாட்டுகின்றன. வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு வாழ்வு சிதைகிறது. சிலபொழுது குடும்பத்தில் மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான கடும் பிரச்னைகள்! மனம் நிம்மதி இழக்கிறது. சிலபொழுது சமுதாய வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனைகள்! இது எதிர்மறையான விதி! இத்தகைய சூழ்நிலைகளில் பொறுமையே மிகமிகத் தேவை!

பொதுவாகத் துன்பங்களுக்கு உள்ளாகும் மனிதனிடம் பின்வரும் நான்கு நிலைகளில் ஒன்றைக் காணலாம்:

  • கோபம் கொள்வது
  • பொறுமை கொள்வது
  • பொருந்திக்கொள்வது
  • நன்றி செலுத்துவது

முதல் நிலை கோபம் கொள்வது. இறைவனைக் குறித்து உள்ளத்தில் கோபமும் வெறுப்பும் அடைவது. இறைவன் துன்பம் அளித்து விட்டான். அநீதி இழைத்து விட்டான் என்று அவனைக் குறை காண்பதாகும் இது!

சிலநேரம் மனிதன் இந்தக் கோபத்தை நாவால் வெளிப்படுத்துவதும் உண்டு. அட நாசமே! அட நாசமே! எனப் புலம்பிக் கொண்டு திரிகிறான் அல்லது காலத்தையும் நேரத்தையும் ஏசுகிறான். இவை யாவும் அல்லாஹ்வுக்குத் துன்பம் கொடுக்கும் வகையிலான பாவச் செயல்களாகும். (இவற்றைத் தவிர்த்துப் பொறுமை காக்க வேண்டும்!)

சிலபொழுது உள்ளத்தில் எழுந்த கோபத்தை உறுப்புகளால் வெளிப்படுத்துகிறான். அதாவது, மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுகிறான். ஆடைகளைக் கிழிக்கிறான். தன்னிலை இழந்து பதறிப் பரிதவிக்கும் பதற்றக்காரர்களின் நிலையாகும் இது. இதிலிருந்து மனத்தைப் பாதுகாக்க வேண்டும்!

இப்படிப் பொறுமை இழந்து பதறிப் பரிதவிப்பதால் என்ன பயன்? துன்பம் தான் இரட்டிப்பாகும்! நோவினையும் வேதனையும் கொடுத்துக் கொண்டிருக்கும் துன்பம் ஒரு புறம். விதி குறித்து பொறுமை இழந்ததால் இறைமார்க்கத்தின் நல்லொழுக்கத்தைப் பேணாததால் நன்மை இழந்து நிற்கும் துன்பம் மறுபுறம்!

இரண்டாவது நிலை பொறுமை! அதாவது, துன்பம் குறித்து இயல்பாக மனத்தில் ஒருவித வெறுப்பு ஏற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்துவதும் இறைவனின் கோபத்திற்கு வழிவகுக்கும் வகையில் எதையும் செய்யாதிருப்பதுமாகும் இது!

மூன்றாவது நிலை அந்தத் துன்பத்தை முழுமையாகப் பொருந்திக் கொள்ளும் பண்பட்ட நிலை! அதாவது, துன்பம் எதுவும் நேராதது போன்று முழு நிம்மதியாக இருப்பது போன்று மனம் பொருந்திக் கொள்வது!

நான்காவது நிலை, துன்பம் வந்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் ஏற்றமிகு நிலை! அதாவது, இந்தத் துன்பம் அல்லாஹ் விதித்த விதி என்று ஏற்றுப் பொறுமை கொள்வதுடன் பொருந்திக் கொள்வதுடன், பொறுமைக்கு அல்லாஹ்விடம் அதிக அளவு நற்கூலி உண்டு எனும் ரீதியில் அதனை ஒரு நற்பேறாகக் கருதி நன்றி செலுத்துவதாகும்.

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

அந்தஸ்தை உயர்த்தும் அமல்கள்

இமாம் நவவி(ரஹ்) அவர்கள், பொறுமைக்கு ஆர்வமூட்டக்கூடிய – பொறுமையாளர்களைப் புகழக்கூடிய குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார்கள். அவற்றின் விளக்கத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதல் வசனம் : ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (இறைவழிபாடு செலுத்திடப்) பொறுமையில் உறுதியாய் இருங்கள். (சத்தியத்திற்குத் தொண்டாற்றிட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (3 : 200)

இந்த வசனத்தில் இறைவன், நம்பிக்கையாளர்களே என்று அழைத்து இந்தக் கட்டளைகளை வழங்கியிருப்பதால் இவை ஈமானின் தேட்டத்திற்கும் அதன் ஏற்றத்திற்கும் உரியவை என்பது தெளிவு. அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழுங்கள் எனும் வாக்கியத்தையும் சேர்த்தால் இந்தக் கட்டளைகள் மொத்தம் நான்காகும்:

  • 1) பொறுமையை மேற்கொள்ளுங்கள்
  • 2) பொறுமையில் உறுதியுடன் இருங்கள்
  • 3) ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்
  • 4) அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழுங்கள்

1) பொறுமையை மேற்கொள்ளுங்கள்: அதாவது, வணக்க வழிபாடுகள் மற்றும் துன்பங்கள் மீதும் பாவங்களை விட்டும் விலகுவதிலும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.

ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். பாவம் செய்யும்படி மனம் தூண்டும் பொழுதுதான் அதை விட்டும் பொறுமை கொள்வதெனும் விஷயம் வருகிறது! பாவத்தின் சிந்தனையே மனத்தில் எழாத மனிதனைக் குறித்து அவன் பொறுமை கொண்டான் என்று சொல்வதில்லை! ஆனால் பாவம் செய்யுமாறு உங்கள் மனம் தூண்டும் பொழுது பொறுமையை மேற்கொள்ளுங்கள். மனத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று சொல்லப்படுகிறது.

2) (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள்.
அதாவது எதிரிகள் எவ்வாறு கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்துக் கொண்டு அசத்தியத்திற்கு ஆதரவாய் இருக்கிறார்களோ அதை விடவும் அதிகப் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நீங்கள் சத்தியத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இவ்விடத்தில் இரண்டாவது கட்டளைக்கு அறிஞர்கள் சிலர் இப்படிப் பொருள் கொடுக்கிறார்கள்: வழிபாடுகளை நிறைவேற்றுவதில் இத்தகைய பொறுமையுடன் நிலைத்திருங்கள் என்று! ஏனெனில் இறைவழிபாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன.

  • அ) அது மனிதன் மீது கடமையாக்கப்பட்டிருக்கும் நிலை
  • ஆ) அது மனத்திற்குப் பாரமாக இருக்கும் நிலை

இறைவனை வழிபடுவதென்றால் அது ஒரு சுமையாகவே படுகிறது. பாவத்தை விட்டொழிப்பதென்பது தீய மனத்திற்கு ஒரு பளுவாக இருப்பது போன்று!

இதனால் தான் இறைவழிபாட்டில் பொறுமையுடன் நிலைத்திருப்பது, பாவத்தை விட்டும் பொறுமையாய் இருப்பதை விடவும் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது! இந்த வசனத்தில் இஸ்பிரூ (பொறுமை கொள்ளுங்கள்) என்பதற்குப் பிறகு ஸாபிரூ எனும் வார்த்தை ஆளப்பட்டிருப்பதன் காரணமும் இது தான். இந்த வகையில் இதன் பொருள் இவ்வாறு விரிகிறது: அதாவது பிறருடன் போட்டி போடும் அளவிலான பொறுமையுடன் வழிபாட்டில் நிலைத்திருங்கள். மனிதன் போரிலோ சண்டையிலோ தன் எதிரியுடன் போட்டி போட்டுக் கொண்டு பொறுமையை மேற்கொள்வது போன்று!

3) ஒருங்கிணைந்து முனைப்புடனிருங்கள் எனும் கட்டளையின் கருத்து, இஸ்லாமிய நாட்டிற்கும் முஸ்லிம்களுக்கும் நிம்மதியும் பாதுகாப்பும் அளிப்பதற்காக எல்லையில் காவல் புரிதல், எதிரிகளின் ஊடுருவலைக் கண்காணித்தல் என்பதாகும். ஆம்! முஸ்லிம்கள் நாட்டையும் தீனை, இறை மார்க்கத்தையும் பாதுகாத்திட முடிந்த அளவு வலிமையைத் திரட்டி வைத்திருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த வசனத்தில் வந்துள்ள றாபிதூ (இதன் வேர்ச் சொல் அல் முறாபதா) எனும் வார்த்தைக்கு அதிக அளவு நல்லமல்கள் செய்தல், அதில் நிலைத்திருத்தல் எனும் அர்த்தமும் உண்டு.

பின்வரும் நபிமொழியில் இந்த அர்த்தம் உள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னென்ன அமல்களைக் கொண்டு அல்லாஹ், தவறுகளை மாய்ப்பானோ, அந்தஸ்துகளை உயர்த்துவானோ அவற்றை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? அவைதான்: மனம் விரும்பாத நிலைகளிலும்; உளூவை முழுமையாகச் செய்வது, பள்ளிவாசல்களை நோக்கி அதிகம் நடப்பது, தொழுகைக்குப் பிறகு தொழுகையை எதிர்பார்த்திருப்பது! இதுதான் எல்லையைக் காவல் காப்பது, இதுதான் எல்லையைக் காவல் காப்பது!’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) – நூல்: முஸ்லிம்)

ஏனெனில் இந்த அமல்களில் நன்மைகளை அதிகம் தேடிக் கொள்வதும் அதில் நிலைத்திருப்பதும் உள்ளது. மேலும் முன்கூட்டியே பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகைக்கு இகாமத் சொல்வதை எதிர்பார்த்து காத்திருப்பதை, எல்லையைக் காவல் புரிவதுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதன் நுட்பம் என்னவெனில், எல்லையைக் காவல் காப்பதற்கு அல்லாஹ்விடம் எவ்வளவு அதிக நன்மைகள் கிடைக்குமோ அவ்வளவு அதிக நன்மைகள், முன்கூட்டியே பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை எதிர்பார்த்திருப்பதற்கும் உண்டு. இதையே இவ்வாசகம் உணர்த்துகிறது.

4) அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் (அதாவது தக்வாவுடன்) வாழ்தல் என்பதன் கருத்து, அவனது கோபம் மற்றும் தண்டனையில் இருந்து தற்காப்பை மேற்கொள்வதாகும். ஏனெனில் தக்வா எனும் வார்த்தையின் உண்மைப் பொருள் தற்காத்தல் என்பதே! இறைக்கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலமும் விலக்கப்பட்ட தீய செயல்களை விட்டு விலகுவதன் மூலமும் இந்தத் தற்காப்பு கிடைக்கிறது! இந்த வகையில் முதல் மூன்று கட்டளைகளின் பொருள்களையும் இந்த வார்த்தை உள்ளடக்கும் என்பது தெளிவு! தனித்தனி விஷயங்களைக் கட்டளையிட்ட பின் பொதுவான விஷயத்தைத் தொடுத்துரைத்தல் எனும் இலக்கண விதியின் கீழ் அமைந்ததாகும் இது!

இறுதியில் நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும் என்று இந்த வசனம் முடிந்திருப்பதும் கவனத்திற்குரியதாகும்! இந்த நான்கு கட்டளைகளையும் நிறைவேற்றினால் தான் வெற்றிக்கு வழி பிறக்கும் என்பதை இது உணர்த்துகிறது! அத்துடன் ஃபலாஹ் என்பது பொருட் செறிவானாதோர் அரபிச் சொல். அதன் கருத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று: நாடியது நிறைவேறுவது. மற்றொன்று: அஞ்சியதை விட்டும் தப்பிப்பது. அல்லாஹ்வுக்கு அஞ்சிய வாழ்வை மேற்கொண்டால் மட்டுமே இந்த இரண்டும் கிட்டும். அதுவே வெற்றி!

சோதனையில் சாதனை

இரண்டாவது வசனம்: ‘திண்ணமாக நாம் சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைகைள், உயிர்கள், விளைபொருள்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். (இந்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கிறவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக!’ (2 : 155)

உலகில் மக்களுக்கு ஏற்படும் சோதனைகளை இந்த வசனம் பட்டியலிடுகிறது.

சிறிதளவு அச்சம்
ஏனெனில் முழு அளவு அச்சத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிப்பதில்லை. ஏனெனில் முழு அளவிலான அச்சத்தை மனிதனால் தாங்கிக்கொள்ள முடியாது. அவனை அது அழித்தே விடும்!

மேலும் அச்சம் என்பது பசி, பட்டினியை விடக் கொடுமையானது. இதனால் தான் சோதனைகளின் வரிசையில் இதற்கு முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளது. பசித்த மனிதன் தண்ணீரையாவது அள்ளி அருந்தலாம். எங்காவது அலைந்து திரிந்து வயிற்றுப் பசிக்கு ஏதாவது தேடலாம். இலை தழைகளையாவது தின்று வயிற்றை நிறைத்து உயிர் வாழலாம்!

ஆனால் அச்சத்திற்குள்ளான மனிதனுக்கு வீட்டிலும் நிம்மதி இருக்காது. வெளியிலும் அவன் செல்ல முடியாது. அவன் அஞ்சி அஞ்சியே சாக வேண்டியது தான்!

ஓர் உண்மையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எவற்றையெல்லாம் குறித்து நாம் அஞ்சுகிறோமோ அவை அனைத்திலும் நாம் அதிகம் அஞ்ச வேண்டியது நம்முடைய பாவங்களைக் குறித்துத்தான்! ஏனெனில் பாவங்கள் தாம் அனைத்து விதமான அழிவுகளுக்கும் நாசங்களுக்கும் மூல காரணம். மறுமை மற்றும் உலக ரீதியான எல்லாத் தண்டனைகளிலும் நம்மைச் சிக்க வைப்பது அவைதான்!

பசி இதில் இருவகைகள் உள்ளன. (அ) மனிதர்கள் மீது சில காலகட்டத்தில் ஒரு விதமான நோயை அல்லாஹ் ஏவுகிறான். அது தான் ‘பசி’ எனும் நோய். இந்நோய் வந்துவிட்டால் எவ்வளவு அதிகம் உணவு உட்கொண்டாலும் வயிறு நிறையாது, பசித்துக்கொண்டே இருக்கும்! (ஆ) பஞ்சம் – பட்டினி! விவசாய உற்பத்தி நின்று, கால்நடைகளின் வளர்ச்சியும் பெருக்கமும் குறைந்து எங்கும் பஞ்சம் தாண்டவமாடுவதாகும் இது.

உடைமைகள் இழப்பு பொருளாதாரம் நசிந்து விடுவதாகும் இது. அதாவது மக்களின் கையிருப்பு குறைந்து விடுவது, அவர்களின் வருமானம் ஏமாற்றம் அளிப்பது, அவர்களின் வாழ்வில் வறுமை தலை தூக்குவது, அரசாங்கத்தின் கடன் சுமை அதிகரித்து நிர்வாகம் ஸ்தம்பித்து விடுவது போன்ற காரணங்களால் ஏற்படுவதாகும் இது!

உயிரிழப்பு அதாவது மரணம்! கொடிய நோய்களின் தாக்குதலால் மக்கள் மரணத்தைத் தழுவுவது. முற்காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் தாக்கி மக்கள் மடிந்தனர். இப்பொழுது எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்!

விளைச்சலின்மை
பசியும் பட்டினியும் இருக்காது. ஆனால் விவசாய உற்பத்தி குறைந்து விடும். நெற்பயிர்களில் உணவு தானியங்களில் அபிவிருத்தி இல்லாமலாகி விடும்!

இப்படியெல்லாம் அவ்வப்பொழுது அல்லாஹ் மனிதர்களைச் சோதிக்கிறான். அது, அவர்களுடைய தீய செயல்களுக்கான தண்டனை! இதில் இறைநியதியின் நோக்கம் என்னவெனில், மக்கள் தக்க படிப்பினை பெறவேண்டும். பாவங்களை விட்டொழித்து நற்செயல்கள் ஆற்ற வேண்டும் என்பதே!

இந்த வசனத்தில், பொறுமையை மேற்கொள்வோர்க்கு (நபியே!) நற்செய்தி சொல்வீராக எனும் வாக்கியம் வாழ்க்கையில் இத்தகைய சோதனைகள் எதிர்படும்பொழுது பொறுமையுடன் இருப்பவர்களே நற்செய்திக்கு உரியவர்கள் நற்பேறு பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது!

இங்கு ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சோதனைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் சோதனைக்குள்ளாகும் மனிதன் செயல்படாமல் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பது பொருளல்ல! வாழ்க்கையில் இவை போன்ற கஷ்டங்கள் சூழ்கிற பொழுது அவற்றின் தீய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முயல்வது. அதாவது, பஞ்சம் வருவதை முன்கூட்டியே அறிந்து தக்க நடவடிக்கைகள் எடுத்துச் சமாளிப்பது, உயிர்க்கொல்லி நோய்களை ஒழிக்கும் அரிய மருந்துகளைக் கண்டுபிடித்து மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவது போன்ற முயற்சிகள் இறைஉவப்புக்கு எதிரானவையும் அல்ல. பொறுமைப் பண்புக்கு முரணானவையும் அல்ல.

இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு குர்ஆனில் உள்ளது. அதுதான் யூசுப் நபி(அலை) அவர்களின் வரலாறு. யூசுப் நபி அவர்கள், எகிப்து நாட்டில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படவிருந்ததை முன்கூட்டியே அறிந்தபொழுது அதைச் சமாளிக்கும் அரிய திட்டம் ஒன்றை வகுத்துக் கூறினார்கள். பருவ காலத்தில் கிடைக்கும் அதிக விளைச்சலை வீண் விரயம் செய்யாமல் சேமித்து வைத்து எதிர்காலத் தேவைகளைச் சமாளிக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினார்கள்!

(மேலும் விவரத்திற்கு பார்க்க: குர்ஆனின் 12 வது அத்தியாயம் யூசுப் நபி வரலாறு) இந்த ரீதியில் பார்த்தால் இப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வது நபிமார்களின் செயல் முறையாகவும் இறை உவப்பைப் பெறும் நற்செயலாகவும் உள்ளதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தின் தொடரில் அல்லாஹ் மேலும் கூறுகிறான்: ‘அவர்கள் எத்தகையோர் எனில், தங்களுக்குத் துன்பம் நேரும் பொழுது கூறுவார்கள்: இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (பொருள்: நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் ஆவோம்)’

பொறுமையாளர்கள், வாழ்க்கையில் துன்பங்கள் சூழ்கிற பொழுது ஓர் உண்மையை நினைத்துப் பார்க்கிறார்கள். நாவால் மொழிகிறார்கள். அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவர்களும் கூட அவனுடைய உடைமைகள் தாம்! தனது உடைமையில் தனது விருப்பப்படி செயல்படுவதற்கு அல்லாஹ்வுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும் மரணத்திற்குப் பிறகு மனிதர்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. அவரவர் செய்த நன்மைகள், தீமைகளுக்கு அந்த மறுவுலகில் அல்லாஹ் நற்கூலி – தண்டனை வழங்கயிருக்கிறான் என்பதே அந்த உண்மை! இதனை உணர்ந்ததால் தான் நம்பிக்கையாளர்கள் நிலைகுலையாமல் இருக்கிறார்கள். அவன் வழங்கும் நற்கூலியை எதிர்பார்த்து பொறுமையை மேற்கொள்கிறார்கள்.

இந்த வசனம் இவ்வாறு முடிகிறது: அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடம் இருந்து புகழுரைகளும் கருணையும் உண்டாகட்டுமாக!,

இந்த வசனத்திலுள்ள ஸலவாத் எனும் அரபிச் சொல்லுக்குத் தான் புகழுரைகள் என்று நாம் மொழியாக்கம் செய்துள்ளோம். இது ஸலாத் என்பதன் பன்மை. இதன் கருத்து, அவர்கள் பொறுமையை மேற்கொண்டது பற்றி அல்லாஹ் மலக்குகளிடம் புகழ்ந்துரைப்பதாகும். அந்தளவுக்கு அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கிறான். பொறுமையை விரும்புகிறான்!

இஸ்லாமிய அறிஞர்களில் சிலர், ஸலாத் எனும் வார்த்தை அல்லாஹ்வுடன் சேர்த்துச் சொல்லப்பட்டால் அவனது கருணை என்று பொருள். மலக்குகளுடன் சேர்த்துச் சொல்லப்பட்டால் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவது என்று பொருள். மனிதர்களுடன் சேர்த்துச் சொல்லப்பட்டால் அவர்கள் பிரார்த்தனை செய்வது என்று பொருள் என்பதாக விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி அல்லாஹ்விடமிருந்து ஸலவாத் உண்டாவதாக என்பதற்கு அவனது கருணை உண்டாகட்டும் என்றே பொருளானால் இதே இடத்தில் ரஹ்மத் – கருணை எனும் வார்த்தையும் இடம் பெற்றிருப்பது அதற்கு முரணாகிறது! எனவே ஸலவாத் – ரஹ்மத் இரண்டும் வெவ்வேறான பொருள் கொண்டவை என்பதே சரியாகும்.

மட்டுமல்ல (அல்லாஹும் மர்ஹம் அலா ஃபுலான்) யா அல்லாஹ்! இன்னார் மீது கருணை புரிவாயாக! என்று நீங்கள் பிரார்த்தனை செய்வது கூடும்., இதில் இஸ்லாமிய அறிஞர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அல்லாஹும்ம ஸல்லி அலா ஃபுலான் (யா அல்லாஹ்! இன்ன முஸ்லிம் மீது ஸலாத் பொழிவாயாக என்று பிராத்தனை செய்வது கூடாது. நபி(ஸல்) அவர்களுக்காக மட்டும் தான் (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்) என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதற்குக் காரணம் ஸலாத் என்பது ரஹ்மத் என்பதை விடவும் மேலான பொருள் உடைய வார்த்தை என்பது தான்!

இந்த இடத்தில் இன்னொரு நுட்பத்தையும் புரிந்துகொள்வது பயன்மிக்கது. அதாவது, நபி(ஸல்) அவர்களின் மீது ஸலாத் சொல்வதுடன் சேர்ந்து வந்தால் பிறர் மீதும் ஸலாத் வேண்டி பிராத்தனை செய்யலாம். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் (யா அல்லாஹ்! நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத் பொழிவாயாக) என்று பிரார்த்தனை செய்வது போன்று!

மேலும் நபியவர்களின் பெயருடன் தொடுத்து வரவில்லை. ஆனால் ‘(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை வசூல் செய்து கொண்டு அதன் மூலம் அவர்களை அகமும் புறமும் தூய்மைப் படுத்துவீராக. மேலும் அவர்கள் மீது ஸலவாத் உண்டாவதாக என்று பிரார்த்தனையும் செய்வீராக’ (9:103) என்று குர்ஆன் குறிப்பிடுவது போன்று ஒரு காரணம் இருந்தால் அந்த முஸ்லிம் மீது ஸலவாத் உண்டாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்வதில் தவறில்லை.

எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒருவர் வந்து, இதோ! எனது ஜகாத் பணம். இதனை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுங்கள் என்று தந்தால் ஸல்லல்லாஹு அலைக் (அல்லாஹ் உங்கள் மீது ஸலவாத் பொழிவானாக) என்று நீங்கள் பிரார்த்தனை செய்வது கூடும். ஆனால் அவரது பெயருடன் சேர்த்து ஸல்லல்லாஹு அலைஹி என்று சொல்வது ஒரு மரபாக ஆக்கப் படாமல் இருக்க வேண்டும்.

கணக்கின்றி கூலி

மூன்றாவது வசனம்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றியே வழங்கப்படும்’ (39: 10)

கணக்கோடு வழங்கப்படுவது எவ்வளவு என்று தெரிந்தால் கணக்கின்றி வழங்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது : ஓர் நற்செயலுக்கு பத்து மடங்கு ஏன், எழுநூறு மடங்குகள் வரை அதை விடவும் இரட்டிப்புடன் அல்லாஹ் அதற்கு கூலி வழங்குவான் என்று!

அதே நேரத்தில் பொறுமைக்கு எவ்வளவு கூலி? அதற்குக் கணக்கே இல்லை என்கிறது இந்த வசனம்! பொறுமைக்கு ஏராளமான கூலி தாராளமாக உண்டு! எவ்வளவு என்று மனிதனால் கற்பனை செய்யவே முடியாது! அது, அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்!

மன்னிப்பும் சீர்திருத்தமும்

நான்காவது வசனம்: ‘யார் பொறுமையை மேற்கொள்ளவும் மன்னிக்கவும் செய்கிறாரோ அவரது இந்தச் செயல் திண்ணமாக உறுதிமிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (42:43)

கருத்து இது தான்: மனிதர்களிடமிருந்து வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதென்பது அவர்களை மன்னித்து விடுவதென்பது சாதாரணச் செயல் அல்ல. உறுதிமிக்க செயல். பெரிய அளவில் மனத்தைக் கட்டுப்படுத்தினால் தான் மன்னிப்பதற்கு மனம் இணங்கும்.

அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யும் பொழுது கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வதென்பது போர் புரியுமாறு இறைவன் இடும் ஆணைக்குக் கீழ்ப்படியுமாறு மனத்தைக் கட்டுப்படுத்துவதென்பது வீரமிக்க தீரச் செயல் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. போர்ச் சூழ்நிலையில் ஒரு போராளி மேற்கொள்ளும் பொறுமைக்குச் சாதாரணப் பொறுமையைக் காட்டிலும் அதிக நற்கூலி உண்டு.

இதே போன்றே மக்களை நன்மை புரியுமாறு ஏவுதல், தீமையை விட்டும் தடுத்தல் எனும் பணிகளுக்காகப் பொறுமையை மேற்கொள்வதற்கும் அதிகச் சிறப்பு உண்டு. ஏனெனில் இப்பணிகளை மேற்கொள்பவருக்கு இரண்டு வகைகளில் கூலி உண்டு!

அவருக்குத் துன்பம் ஏற்படுகிறது எனும் வகையில்!

இறைவனுக்காக – இறைமார்க்கத்திற்காக பொறுமை கொண்டார் எனும் வகையில்!

ஆக! மன்னிப்பதற்கும் மனிதர்களால் ஏற்படுகிற தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வதற்கும் இதில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ஆயினும் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவனை நீங்கள் மன்னிக்க வேண்டுமென்பதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அந்த நிபந்தனையுடன் இருந்தால் தான் அந்த மன்னிப்பு புகழுக்குரியதாகும். அஷ்ஷூரா அத்தியாயத்தில் வரும் ஒரு வசனத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னிப்பதும் கூட சீர்திருத்தத்துடன் இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அந்த வசனம் இதுதான்:

‘எவர் மன்னிக்கிறாரோ மேலும் சீர்திருத்தவும் செய்கிறாரோ அவரது கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது’ (42:40)

எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் துன்பம் இழைத்த மனிதன் தீமை புரியத் துணிந்தவனாக எவரையும் துன்புறுத்த அஞ்சாதவனாக இருந்தால் நீங்கள் அவனைச் சாதாரணமாக மன்னித்து விடுவதால் திருந்தமாட்டான் என்றிருந்தால் அவனை மன்னிக்காதீர்கள்! உங்களது நியாயத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்! உங்களது உரிமையை முறையாகப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. ஏனெனில் உங்களது மன்னிப்பு அந்த மனிதனின் தீமையை வளர்க்கவே செய்யும்!

ஆனால் அந்த மனிதனை நீங்கள் மன்னிப்பதால் அவன் திருந்தி விடுவான் அவனது தீமை தொடராது என்றிருந்தால் நீங்கள் அவனை மன்னிப்பதே சிறந்தது. உகந்தது. ஏனெனில் அவரது கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. நீங்கள் மன்னிக்காமல் நாளை மறுமையில் அந்த மனிதனின் நற்செயல்களை உங்கள் உரிமைக்குப் பகரமாக நீங்கள் பெறுவதை விட, இந்த வசனம் குறிப்பிடுவதன்படி அந்த மனிதனை மன்னித்து அதற்கான கூலியை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வதே சிறந்தது!

பொறுமையும் இறையுதவியும்

பொறுமை குறித்து எடுத்துரைக்கும் ஐந்தாவது வசனம்: ‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” (2 : 153)

வாழ்க்கையில் பிரச்னைகள் எழும்பொழுது பொறுமையை மேற்கொண்டு அதன் மூலம் உதவி தேடுமாறு இவ்வசனம் அறிவுறுத்துகிறது. ஆம்! அல்லாஹ்விடம் உதவியை எதிர்பார்த்து பொறுமையுடன் இருந்தால் பிரச்னைகள் இலகுவாகத் தீர்ந்து நிம்மதி பிறக்கும் என்பது திண்ணம்! துன்பத்திற்குப் பின் இன்பமும் கஷ்டத்திற்குப் பின் இலகுவும் தொடர்வது தானே உலக வாழ்வின் நியதி! அதற்கான வழி பிறப்பதற்குத் தான் பொறுமை தேவை. பொறுமையில் தான் வெற்றியின் இரகசியம் அடங்கி உள்ளது!

பொறுமையைப் போன்றது தான் தொழுகையும். அது இறைவனுக்கும் மனிதனுக்கும் ஒரு வலுவான தொடர்பாகத் திகழ்கிறது! இதோ! தொழுகையில் அல்லாஹ்வின் திரு முன்னால் மனிதன் நிற்கிறான். இரகசிய உரையாடலை அவனிடம் சமர்ப்பிக்கிறான். பணிந்தும் குனிந்தும் தலையைத் தரையில் வைத்தும் வணங்கியும் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்கிறான். இறை உதவி அவன் பக்கம் கனிந்து வருதற்கு இது ஒருபலமான பாலமாக அமைகிறது. இதோ! நபியவர்களின் வாழ்க்கை இதற்கு ஓர் அழகிய முன்மாதிரி! நபியவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள் என்று ஹதீஸ் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

‘நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” இதிலுள்ள உடனிருக்கிறான் எனும் வாசகம் அல்லாஹ்வின் பிரத்தியேகமான நெருக்கத்தைக் குறிக்கிறது. இது இரண்டு வகைகளிலாகும். ஒன்று: அல்லாஹ் எல்லா மனிதர்களுடனும் இருப்பது. பின்வரும் இரண்டு வசனங்களில் இது கூறப்பட்டுள்ளது :

‘நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57 : 4)

‘மூன்று மனிதர்களிடையே ரகசியப் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறுவதில்லை. அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ்வும் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர்களிடையே இரகசியப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறுவதில்லை. அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ்வும் இருந்தே தவிர! இரகசியப் பேச்சுகள் பேசுவோர் இதனைவிடக் குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்’ (58:7)

இந்த முதல் வகை எல்லாப் படைப்பினங்களுக்கும் பொருந்தும். பேரண்டத்தில் எந்த ஒரு படைப்பானாலும் அல்லாஹ் அதனுடன் இருக்கிறான். அதாவது, அவனது அறிவும் ஆற்றலும் அதிகாரமும் அவற்றைச் சூழ்ந்திருக்கிறது.

இரண்டாவது, பிரத்தியேகமான முறையில் உடனிருத்தல். அல்லாஹ் உடனிருக்கிறான் என்றால் உதவியும் ஒத்தாசையும் நல்கிக் கொண்டிருக்கிறான் என்பது கருத்தாகும். இது ரஸூல்மார்களுக்கும் அவர்களைப் பின்பற்றியோருக்கும் மட்டும் உரியது.

அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பது போன்ற வசனங்கள் இத்தகைய உடனிருத்தலை உணர்த்தக் கூடியவையே!

இந்த இடத்தில் இன்னோர் உண்மையையும் அறிந்து கொள்ளவேண்டும். அதாவது, உடனிருத்தல் எனகிற வாசகத்தின் கருத்து, அல்லாஹ் எல்லா மனிதர்களுடனும் அவரவருடைய இடங்களில் அவர்களுடன் இருக்கிறான் என்பதல்ல. அவன் இருப்பது அண்ட சராசரங்களுக்கும் மேலே அர்ஷில் தான்! அவன் அங்கிருப்பதுடனேயே தனது அதிகாரத்தால், அறிவு ஞானத்தால் எல்லா மனிதர்களையும் எல்லா படைப்புளையும் சூழ்ந்து கொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருக்கிறான்!

பொறுமையும் ஜிஹாதும்

பொறுமையின் சிறப்பை எடுத்துரைக்க இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கொண்டு வந்த இறுதி வசனம் இதுதான்:

‘நாம் உங்களை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குகிறோம். எதற்காகவெனில், உங்களின் முஜாஹித் (போராளி)களையும் பொறுமையாளர்களையும் நாம் அறிந்து கொள்வதற்தகாகத்தான். மேலும் உங்களுடைய நிலைமைகளைப் பரிசீலிப்பதற்காகத்தான்!” (47 : 31)

சோதனைக்குள்ளாக்குதல் என்பதன் கருத்து, அல்லாஹ், இறை நம்பிக்கையாளர்களின் மீது ஜிஹாத் எனும் இறைவழிப்போரைக் கடமை ஆக்கியிருப்பதாகும். இப்படிச் செய்வதன் நோக்கம் என்ன? பொறுமையாளர்கள் யார் என்பதை அறிவது தான். அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதுதான் என்கிறது இந்த வசனம்.

இன்னொரு வசனம் கூறுகிறது: ‘அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் (இப்படியொரு வழியை அவன் மேற்கொண்டது) உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும் எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறார்களோ அவர்களின் பணிகளை ஒரு போதும் அல்லாஹ் வீணாக்க மாட்டான்” (47:4-5)

இப்படி இறைநம்பிக்கையாளர்கள் மீது இறைவழிப் போரை கடமையாக்கி அவர்களைப் போர்க்களத்தில் கொண்டு வந்து நிறுத்திச் சோதிப்பதன் மூலம் அல்லாஹ் பொறுமையாளர்களை அறிகிறான் என்கிற பொழுது குறைமதியாளர் சிலர் ஒரு தவறான கருத்தை முன் வைக்கிறார்கள். எந்த ஒரு காரியமானாலும் அது நிகழ்கிற பொழுதுதான் அல்லாஹ் அதை அறிந்து கொள்கிறான். நிகழ்வதற்கு முன்னால் அது பற்றி எதுவும் அவனுக்குத் தெரியாது என்கின்றனர்! இதற்குத் தெளிவானதொரு பதில் தருவது நமது கடமை.

எல்லா விஷயங்களையும் நிகழ்வுகளையும் அவை நிகழ்வதற்கு முன்பே அல்லாஹ் அறிகிறான். அப்படி அறிவதற்கு நம்மால் இயலாது தான். ஆனால் இறைவனுக்கு இயலாதது என்று எதுவும் இருக்க முடியாது! அவனது ஆற்றல் அளவில்லாதது. இதனை இன்னோர் இடத்தில் குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கிறது:

‘வானம் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகிறான் என்பதையும் அவை அனைத்தும் ஒர் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் நீங்கள் அறிவதில்லையா? திண்ணமாக இது அல்லாஹ்வுக்குச் சிறிதும் சிரமமானதன்று!’(22 : 90)

ஒரு விஷயத்தை அது நிகழ்வதற்கு முன்னால் அல்லாஹ் அறிய மாட்டான் என்று வாதிடுபவன் குர்ஆனில் இடம் பெற்றுள்ள இது போன்ற வசனங்களைப் பொய்ப்படுத்தியவன் ஆகிறான்.

ஒரு வேறுபாட்டைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களில் போராளிகளையும் பொறுமையாளர்களையும் நாம் அறிவதற்காக எனும் வாசகத்தில் வரும் அறிதல் என்பதன் கருத்து, எந்த அறிதலின் அடிப்படையில் நற்கூலியோ தண்டனையோ வழங்கப்படுமோ அந்த அறிதல் ஆகும். அதாவது, ஒன்றை அது நிகழ்வதற்கு முன்னால் அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான் என்பது சரி தான். ஆனால் அதனடிப்படையில் மனிதனின் செயலுக்கு நற்கூலியோ தண்டனையோ அளிப்பது நீதமாகாது! அதைக் கொண்டு அவன் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதில் அவனது செயல்பாடு வெளிப்பட்டு அதன் அடிப்படையில் நற்கூலியோ தண்டனையோ அளிக்கப்பட்டால் தான் அது நீதியாகும்.

அறிஞர் சிலர் இதற்கு இன்னொரு விளக்கம் தருவர். அதாவது, உங்களில் போராளிகளை பொறுமையாளர்களை அறிவதற்காக என்றால் அதன் கருத்து, அது வெளிப்படையாக நிகழ்வதை அறிவது, தெளிவாகத் தெரிவது என்பதாகும். ஒரு செயலைக் குறித்து அது எதிர்காலத்தில் நிகழும் என்று அறிவதற்கும் நேற்று அது நிகழ்ந்துவிட்டது என்று அறிவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஓரு மனிதன் இந்தச் செயலை நாளை செய்வேன் என்று உங்களிடம் சொல்கிற பொழுது அந்த விஷயம் உங்களுக்குத் தெரிய வந்து விட்டது. மறுநாள் அந்தச் செயலை அவன் செய்து விடும் பொழுது அதுவும் உங்களுக்குத் தெரிந்துவிட்டது. இந்த இரண்டையும் அறிந்து கொள்வதற்கு மத்தியில் வித்தியாசம் தெளிவாய் உள்ளதை எவரும் எளிதாய்ப் புரிந்து கொள்ளலாம்.

எழுத்தாளனும் ஒரு போராளியே!

போராளி (முஜாஹித்) எனும் வார்த்தையின் கருத்து விரிவானது. அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக, மேலோங்கச் செய்வதற்காக உழைப்பவர் என்றால் கல்வியின் மூலம் அதற்காக உழைப்பவரையும் ஆயுதம் ஏந்திக் களத்தில் குதிப்பவரையும் அது உள்ளடக்கும். இருவருமே அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிபவர் தாம்!

கல்வியைக் கற்று – கற்றுக்கொடுத்து மக்கள் மத்தியில் கல்விப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் கல்வியின் மூலம் ஜிஹாத் செய்பவர் ஆகிறார். அல்லாஹ் வழங்கிய ஷரீஅத்தை அரியணையேற்றுவதற்குக் கல்வியை ஒரு கருவியாகக் கொண்டு பாடுபடுகிறார். இதே போன்று தான் ஆயுதமேந்தி எதிரிகளுடன் போர் புரிபவரும்! ஆனால் ஒரு நிபந்தனை: இவர்களின் நோக்கம் இறைமார்க்கத்தை இத்தரணியில் மேலோங்கச் செய்வதாக இருக்க வேண்டும்.

கேள்விகள்

1) ஸப்ர் (பொறுமை) என்பதன் அகராதிப் பொருள் என்ன? இஸ்லாமிய வழக்கில் அதன் விரிவாக்கம் என்ன? சுருக்கமாக விளக்கவும்.

2) தவறுகளை மாய்க்கக்கூடிய மற்றும் அந்தஸ்துகளை உயர்த்தக்கூடிய அமல்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டவை யாவை?

3) 2:155 ஆம் வசனத்தில் சில சோதனைகளை குர்ஆன் பட்டியலிடுகிறது. அவற்றைச் சுருக்கமாக விளக்கவும்.

4) அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடம் இருந்து புகழுரைகளும் (ஸலவாத்தும்) அருளும் உண்டாகும் எனும் வசனத்தின் கீழ் ஸலவாத் என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கம் என்ன?

5) மன்னிக்க வேண்டும்தான் ஆனால் அது சீர்திருத்தத்துடன் இருக்க வேண்டும் என்பதன் விளக்கம் என்ன?

6) நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்கிற வசனத்தின் கீழ் உடனிருத்தல் என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கம் என்ன?

7) உலகில் நிகழும் நிகழ்ச்சிகளை அவை நிகழ்ந்த பிறகு தான் அல்லாஹ் அறிகிறான். அதற்கு முன்பு அது பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது என்கிற தவறான கருத்துக்கு அளிக்கப்பட்ட பதில் என்ன என்பதைச் சுருக்கமாக விளக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *