Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-25)

25. பொறுமையின் தனிச்சிறப்பு

ஹதீஸ் 25: அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: தூய்மை (ஈமான் எனும்) நம்பிக்கையின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது. ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உனக்குச் சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகத் திகழ்கிறது!. ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது ஆன்மா தொடர்பான வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு விடுதலை பெற்றுத் தருகின்றனர் அல்லது அதை அழிவுக்கு உள்ளாக்குகின்றனர்!’ (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

பொறுமையின் சிறப்பையும் நன்மையையும் விவரித்து அதைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தக்கூடிய இறைவசனங்ளை முன்னர் பார்த்தோம். இப்பொழுது பொறுமை பற்றிப் பேசும் நபிமொழிகளைப் பார்ப்போம்.

பொறுமை வெளிச்சமாகும் எனும் வாசகத்திற்காகத்தான் இந்த நபிமொழியை இந்த அத்தியாயத்தின் கீழ் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.

பொறுமை உள்ளத்தின் ஒளியாகவும் பாதையின் வெளிச்சமாகவும் பணிக்கு ஊக்கமாகவும் திகழ்கிறது! ஆம்! சூழ்ந்து வரும் துன்பங்களினாலும் இன்னல்களினாலும் வாழ்க்கைப் பாதையில் இருள்கள் அடர்ந்து தொடர்ந்து பயணிப்பது தடைபடும் பொழுது பொறுமை தான் வெளிச்சம் பாய்ச்சி இடறகற்றுகிறது. பொறுமையில் உறுதியாக இருப்பவருக்கே அப்பொழுது யதார்த்த நிலை என்ன என்பது புலப்படும்! இருள்களில் இடறி விழுந்திடாமல் ஆற்ற வேண்டிய பணிகளைத் தொடர்ந்து அவர் ஆற்றுகிறார்.
இறைவழியில் வாழும் மனிதர் பொறுமையைக் கடைப்பிடித்தால் நேர்வழியில் நிலைத்து நிற்கும் நற்பேறு பரிசாகக் கிடைக்கிறது. சத்திய நெறியின் அழைப்பாளன் பொறுமையை மேற்கொண்டால் அவனது உழைப்பு வெற்றிக் கனியைப் பறிக்கும் காலம் விரைந்து வருகிறது!

தூய்மை ஈமானில் பாதியாகும். தூய்மை என்பதில் புலனுக்குட்பட்ட அசுத்தங்களை விட்டு விலகுவதும் அடங்கும். தீய கொள்கைகள், தீய செயல்கள் ஆகியவற்றை விட்டு விலகுவதும் அடங்கும்.

ஈமான் என்பது ஏற்பது, தவிர்ப்பது எனும் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது. தவிர்ப்பது என்பதன் கருத்து, ஷிர்க் எனும் இணைவைப்பை விட்டும் இதர தீமைகளை விட்டும் விலகுதல், இணைவைத்து வணங்குபவர்கள், தீமை புரிபவர்கள் ஆகியோருடன் உள்ள தொடர்பை அவர்கள் செய்யும் தீமைகளின் அளவுக்குத் துண்டித்தலாகும். இந்த ரீதியில் ஒரு மனிதன் இறைநம்பிக்கையாளனாகத் திகழ வேண்டுமெனில் எல்லா வகையான தீமைகளை விட்டும் அவற்றைச் செய்பவர்களை விட்டும் விலகித் தூய்மை பெற்றிடவேண்டும். தூய்மையின் இந்த அம்சத்தின் அடிப்படையில் தான் சுத்தம் ஈமானில் சரி பாதி என்று கூறப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ் என்பது தராசை நிரப்புகிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பது இதன் பொருளாகும். இறைப் புகழை இயம்பும் வார்த்தைகளிலே இதற்கு தனிச்சிறப்பு உண்டு. அதனால் தான் திருக்குர்ஆனின் தொடக்கமே இதனைக் கொண்டு அமைந்துள்ளது.

ஹம்து என்றால் புகழ்தல் என்று பொருள். அதாவது, அழகிய செயல்கள் – ஆற்றல்களைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வதாகும். அப்படிப் புகழ்வதுடன் அவனுக்கு முழுமையாக அடிபணிவதும் அவன் நிர்ணயித்த விதியை முழுமனத்துடன் ஏற்பதும் அதிலிருக்க வேண்டும்.

தராசு என்பது மறுவுலகத்தில் மனிதர்களின் செயல்களை எடை போடுவதற்காக நிறுவப்படும் கருவியாகும். செயல்கள் எப்படி எடைத் தட்டில் நிற்கும்? அவற்றை எப்படித் தராசில் வைத்து நிறுக்க முடியும்? என்றொரு கேள்வி பிறக்கலாம். பதில் இதுதான்:

1) மனிதர்களின் செயல்களுக்கு மறுமை நாளில் அவற்றைத் தராசில் வைத்து நிறுக்கும் வகையில் வடிவமும் பருமனும் கொடுக்கப்படும்.

2) அல்லது நிறுக்கப்படும் என்றால், செயல்களை அல்ல. அவற்றின் பதிவேடுகள் தான் தராசில் வைத்து நிறுக்கப்படும் என்று பொருள் காணவேண்டும். தீமைகள் நிறுவைக்கு நிற்கமாட்டா. நல்ல செயல்களே எடையில் நிற்கும்.

அல்ஹம்துலில்லாஹ்வுக்கு தராசையே நிரப்பும் அளவு மகத்தான நன்மை உண்டென்பதன் கருத்து இதுதான்: ஹம்து என்பதிலுள்ள அல் எனும் துணையெழுத்திற்கு புகழின் எல்லா வகைகளையும் உள்ளடக்கும் அர்த்தம் உண்டு. அல்ஹம்துலில்லாஹ் என்றால் எல்லா வகையான புகழும் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தம் என்று பொருள்.

  • அல்லாஹ், எல்லாவகையான பூரணத் தன்மைகளையும் பெற்றவன் என்று கூறுவதும் புகழ் தான்.
  • பலவீனங்களும் குறைபாடுகளும் இல்லாதவன். அவற்றை விட்டும் தூய்மையானவன் என்றுரைப்பதும் புகழ் தான்.
  • அவனது பேராற்றலை ஏற்றுக் கொண்டு அதற்கு எதிரில் நமது இயலாமையை ஒப்புக் கொள்வதும் புகழ் தான்.
  • அவனுக்கு நன்றி செலுத்துவதும் புகழ் தான்.
  • மிக உயர்ந்த அந்தஸ்துகளைப் பெற்றுத் திகழ்வதில் அல்லாஹ் தனித்துவம் உடையவன் என்பதும் புகழ் தான்.

இப்படிப்பட்ட புகழ் மொழிகளும் இன்னும் நம் அறிவுக்கு எட்டாத புகழுரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றுரைப்பதில் அல்ஹம்துலில்லாஹ் எனும் வார்த்தை தன்னிகரற்றுத் திகழ்கிறது! இதன் அடிப்டையிலேயே இவ்வளவு மகத்தான கூலியை இவ்வார்த்தை பெறுகிறது!

ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹ், வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது,

இதில் இருவார்த்தைகள் உள்ளன. விடுவித்தல், அணிவித்தல் என்கிற இரு அம்சங்களை முறையே அவை பெறுகின்றன.

முதல் வார்த்தை ஸுப்ஹானல்லாஹ். இதன்பொருள், அல்லாஹ் தூய்மையானவன் என்பதாகும். அதாவது, அல்லாஹ்வின் திருப்பெயர்கள், தன்மைகள், செயல்கள் மற்றும் அவன் வகுத்தளித்த சட்டங்கள் ஆகியற்றில் எவ்விதக் குறைபாடுமில்லை. அவை எல்லாமும் தூய்மையானவை! பொருத்தமற்ற பெயர்களை, தன்மைகளை இறைவனுக்குச் சொல்வது கூடாது என்கிற கருத்தில் விடுவித்தல் எனும் அம்சமாகும் இது!

அல்லாஹ்வின் பெயர்கள், தன்மைகளின் தூய்மை நிலைபற்றி குர்ஆன் குறிப்பிடுவதைக் கேளுங்கள்:

‘மிகவும் அழகிய பெயர்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்’ (7:180)

‘தீய தன்மைகளால் வர்ணிக்கப்பட வேண்டியவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தான். ஆனால் மிக உயர்ந்த தன்மைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனே யாவரையும் மிகைத்தவன். விவேகமிக்கவன் ‘

அல்லாஹ்வுடைய செயல்களின் தூயநிலை குறித்து குர்ஆன் வேறோர் இடத்தில் கூறுகிறது:

‘இந்த வானங்களையும் பூமியையும் இவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. சத்தியத்துடன் தான் படைத்துள்ளோம். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இதனை அறிவதில்லை’ (44 : 38)

அல்லாஹ் வழங்கிய சட்டங்களின் தூயநிலை குறித்து அவற்றில் எவ்வித முரண்பாடோ குறைபாடோ இல்லை என்பது பற்றி இன்னோர் இடத்தில் குர்ஆன் கூறுகிறது:

‘அறியாமையின் அடிப்படையிலான தீர்ப்பினையா அவர்கள் விரும்புகிறார்கள்? ஆனால் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை அல்லாஹ்வை விட நல்ல தீர்ப்பு வழங்குபவன் யார்?’ (5:50)

இரண்டாவது வார்த்தை அல்ஹம்துலில்லாஹ். சிறப்பிற்கும் உயர்வுக்கும் உரிய எல்லா விதமான முழுமைப் பண்பையும் அல்லாஹ்வுக்குச் சூட்டுகிற சொல்லாகும் இது. இதுவே அணிவித்தல் என்கிற அம்சம். இவ்விரு அம்சங்களின் அடிப்படையில்தான் இவ்வார்த்தைக்கு இவ்வளவு அதிகமான நன்மைகள் உண்டென இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழுகை ஒளியாகும்: – தொழுகை முகத்திற்கு ஒளி. இதனால் தான் யார் அதிகம் அதிகம் தொழுகிறார்களோ அல்லாஹ்வின் முன்னிலையில் அதிக அளவில் சிரவணக்கம் செய்கிறார்களோ அவர்களின் முகம் ஒளியால் இலங்குவதைக் காண்கிறோம்.

தொழுகை உள்ளத்திற்கு ஒளி. ஆம், அல்லாஹ்வை பற்றிய ஞானக்கதவைத் திறக்கிறது தொழுகை. அல்லாஹ்வின் திருப்பெயர்கள், செயல்கள், அவன் வழங்கிய சட்டங்கள் ஆகியவை குறித்துத் தெளிவான அறிவை வழங்குகிறது தொழுகை. இதனால் தான் தொழுகையாளிகள் இறைவனை அஞ்சி வாழ்வதில், இஸ்லாத்தின் நெறிமுறைகளைப் பேணி நடப்பதில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள்.

இதே போன்று மண்ணறையிலும் மறுமை நாளின் மஹ்ஷர் மைதானத்திலும் தொழுகை ஒளியாக வருகிறது. ஏனெனில் தொழுகை இஸ்லாத்தின் தூண். தூண் நிலை பெற்றிருந்தால் கட்டிடம் நிலைத்து நிற்கும். உலகில் இஸ்லாமியப் பெருவாழ்வு நிறைவாக மலர்ந்துவிட்டால் மறுமை வாழ்வில் இருள் அகன்று எங்கும் ஒளிமயமாகி விடும் என்பது திண்ணம்!

இங்கு பொறுமை மற்றும் தொழுகையின் இரு ஒளிகளுக்கு மத்தியிலுள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்வது பயன்மிக்கது. பொறுமைக்குப் பயன் படுத்தப்பட்டுள்ள ழியா எனும் சொல்லின் பொருளும் ஒளி தான் என்றாலும் அது லேசான வெப்பத்துடனும் அதிக வெளிச்சத்துடனுமுள்ள ஒளியாகும். குர்ஆனில் இவ்வார்த்தை சூரியனுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

‘அவனே சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான். சந்திரனை ஒளியாக ஆக்கினான்’ (10 : 5)

பொறுமைக்கு ழியா – வெப்பம் இணைந்துள்ள வெளிச்சம் என்று கூறப்பட்டதற்குக் காரணம், பொறுமை கொள்ளும் பொழுது மனித மனம் சிரமத்தையும் கஷ்டத்தையும் தாங்கிட நேர்வதையும் உடலில் வெப்பமும் களைப்பும் அதிகரிப்பதையும் பார்க்கிறோம். இதனால் தான் பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்றுரைக்கிறது குர்ஆன்!

தர்மம் ஆதாரமாகும் – அதாவது தர்மம் என்பது அல்லாஹ்வின் உவப்பைப் பெறும் எண்ணத்துடன் செல்வத்தைச் செலவு செய்வதாகும். மனைவி, மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவது, ஏழை எளியோருக்கு உணவளிப்பது, இறையில்லங்கள் கல்விக்கூடங்கள் போன்றவை கட்டுவது, இதரப் பொது நலப்பணிகளுக்கு வழங்குவது போன்ற எல்லா வகையான தர்மங்களும் இதில் அடங்கும்.

தர்மம் ஆதாரமென்பது வழங்குபவரின் உள்ளத்தில் இறைநம்பிக்கை உள்ளதென்பதற்குத் தான்! எவ்வாறெனில், செல்வம் மனத்திற்கு அதிகப் பிரியமான ஒன்று. அதனைச் சாதாரணமாகப் பிறருக்கு வழங்கிட மனம் ஒப்புவதே இல்லை. ஒரு முஸ்லிம் செல்வங்களை அல்லாஹ்வுக்காக எனும் வாய்மையுடன் வாரி வழங்குகிறானெனில் அவனது உள்ளத்தில் இறைநம்பிக்கை இருப்பதால் தான் வழங்குகிறான். தர்மங்களின் நற்கூலியாக நாளை மறுவுலகில் சுவனப்பேறுகள் கிடைக்கும் எனும் உறுதிப்பாட்டின் அடிப்படையில்தான் அப்படிச் செய்கிறான். மனித இயல்பு என்னவெனில், அவனுக்குப் பிரியமான எதுவொன்றையும் இழப்பதற்கு எளிதில் அது முன்வருவதில்லை. அதனை விடவும் பிரியமான வேறொன்று கிடைக்கும் என்றிருந்தால்தான் பணத்தை வழங்க மனம் வருகிறது, இல்லையா? இந்த ரீதியில்தான் இறைவன் மீதும் மறுவுலகத்தின் மீதும் சுவனத்தின் மீதும் ஆழமான நம்பிக்கையுள்ள நன்மக்களே அதிக அளவில் தானதர்மங்கள் செய்வதை நாம் பார்க்கிறோம்!

‘ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது ஆன்மா தொடர்பான வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு விடுதலை பெற்றுத் தருகின்றனர் அல்லது அதை அழிவில் ஆழ்த்துகின்றனர்’

அதிகாலை புலர்ந்ததும் மக்கள் கண்விழித்தெழுந்து அன்றைய தினத்தின் பணிகளைத் தொடங்குகின்றனர். இது அன்றாடம் நாம் காணும் காட்சி!

பகலெல்லாம் ஓடியாடி உழைத்த மனிதன் இரவில் நிம்மதியாகத் துயில் கொண்டு ஓய்வெடுக்கிறான். இதற்காகவே இரவை இறைவன் படைத்துள்ளான் என்கிறது குர்ஆன்.

‘பகலில் நீங்கள் என்னென்ன செயல்களைச் செய்தீர்கள் என்பதை அவன் அறியும் நிலையில் அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுகிறான். பிறகு மறுநாள் (இந்த வாழ்க்கை எனும் செயற்களத்தில்) மீண்டும் உங்களை எழுப்புகிறான்’ (6:60)

இரவில் மனிதர்களைத் தூக்கத்தில் ஆழ்த்துவதைத் தான் உயிர்களைக் கைப்பற்றுதல் எனும் வாசகம் குறிப்பிடுகிறது. ஆம்! தூக்கம் என்பது மரணத்தின் சகோதரன் என்று ஒரு நபிமொழி கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இரவின் அந்தத் தூக்கம், பகலின் பணிகளில் ஏற்பட்ட களைப்பையும் சோர்வையும் களைகிறது. மீண்டும் நாளையப் பணிகளைத் தொய்வின்றி தொடர்ந்திட உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பொங்குகிறது. மக்கள் காலையில் எழுந்து உற்சாகத்துடன் தத்தம் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

சிலர் நற்பணிகள் ஆற்றுகின்றனர். அவர்கள் தாம் இறை நம்பிக்கையாளர்கள்.

சிலர் தீமைகள் புரிகின்றனர். அவர்கள் தாம் இறைநிராகரிப்பாளர்கள்.

ஆம்! முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து உளூ செய்து தூய்மையாகி தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் உரிய வல்ல இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குவது கொண்டு அன்றைய தினத்தைத் தொடங்குகிறார்கள்.

இன்னும் சரியாகச் சொல்வதாயின் அன்றைய அதிகாலைப் பொழுது தௌஹீத் எனும் ஏகத்துவச் சிந்தனையுடன் தொடங்குகிறது! எவ்வாறெனில்

ஒரு முஸ்லிம் அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்த வண்ணம் ஆலு இம்றான் அத்தியாயத்தின் இந்த நான்கு வசனங்களை ஓதிட வேண்டுமென்பது ஷரீஅத்தின் போதனை! ஆம்! நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி அதுவே என அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வசனங்கள் இவைதான்:

‘திண்ணமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோர்க்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் எத்தகையவர்கள் எனில், நிற்கும்போதும் உட்காரும் போதும் படுத்திருக்கும் போதும் ஆக எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூர்கிறார்கள். மேலும் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பமைப்பைக் குறித்துச் சிந்திக்கிறார்கள். (பிறகு உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்கள்:)

எங்கள் இறைவனே! இவை அனைத்தையும் (யாதொரு நோக்கமும் இன்றி) வீணாக நீ படைக்கவில்லை. நீ தூய்மையானவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ அவனை நீ உண்மையில் கேவலப்படுத்தி விட்டாய். அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. எங்கள் இரட்சகனே! விசுவாசத்தின்பால் அழைக்கக்கூடிய ஒருவரின் அழைப்பை நாங்கள் செவியுற்றோம். உங்கள் இரட்சகனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். நாங்கள் அவ்வாறே ஏற்றுக் கொண்டோம். எனவே எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக. மேலும் எங்களை நல்லோர்களுடன் மரணிக்கச் செய்வாயாக! எங்கள் இறைவனே! மேலும் தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தருவாயாக! மேலும் மறுமை நாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்,’ (3 : 190 – 194)

இவ்வாறு அதிகாலையில் எழுந்ததும் முஸ்லிம்கள் ஆன்மா தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு அதற்கு விடுதலை வாங்கிக் கொடுக்கின்றனர். நரகத்திலிருந்து!

மறுபுறம், இறைவன் விரும்பாத வெறுக்கக்கூடிய, தடை செய்துள்ள தீமைகளைச் செய்வது கொண்டு அன்றைய தினத்தைத் தொடங்குகிற மக்கள் உள்ளனர். இத்தகையவர்கள் தாம் தங்களது ஆன்மாவை அழிவின் படுகுழியில் தள்ளுகின்றனர்! (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அறிவிப்பாளர் அறிமுகம் – அபூ மாலிக் அல் – அஷ்அரி(ரலி) அவர்கள்

அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் நபித்தோழர்களில் ஒருவரும் மதீனா வாழ் அன்ஸாரியும் ஆவார். அபூ மாலிக் என்பது குறிப்புப் பெயர். அன்னாரது இயற்பெயர் அல் ஹாரிஸ் பின் அல்ஹாரிஸ் என்றும் உபைத் என்றும் உபைதுல்லாஹ் என்றும் கஅப் என்றும் பல கருத்துகள் உள்ளன. இவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்து அறிவித்த ஹதீஸ்கள் ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களில் பதிவாகியுள்ளன. உமர்(ரலி) அவர்களின் காலத்தில் மரணம் அடைந்தார்கள்.

கேள்விகள்

1) பொறுமை வெளிச்சமாகும் என்பதை சுருக்கமாக விளக்கவும்.

2) சுத்தம் ஈமானில் பாதியாகும் என்பதன் கருத்து என்ன?

3) இந்நபிமொழியில் தராசு என்பது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

4) தர்மம் எதற்கு ஆதாரம்? அதன் விளக்கம் என்ன?

5) ஒவ்வொரு மனிதனும் காலையில் ஈடுபடும் பணிகள் என்ன? முஸ்லிம்களின் பணிகளில் உள்ள சிறப்பு என்ன?

6) அல் ஹம்து என்பதிலுள்ள அல் எனும் துணை எழுத்தின் பொருள் என்ன?

7) ஸுப்ஹானல்லாஹ்வில் உள்ள விடுவித்தல் எனும் அம்சம் என்ன? அல் ஹம்துலில்லாஹ்வில் உள்ள அணிவித்தல் எனும் அம்சம் என்ன?

8) இந்நபிமொழியில் பொறுமைக்குரிய தனிச் சிறப்பு என்ன?

9) அறிவிப்பாளர் பற்றி நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *