கி.பி. 570….!
ஐரோப்பா கண்டம்! கிறிஸ்துவம் முழுமையாக பரவியிராத காலகட்டம் அது! நாம் மேலே சொன்ன இந்த புனித மக்கா மாநகரில் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். தன்னுடைய பிறப்புக்கு முன்னரே தந்தையையும், பிறந்த சிறிது காலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தார்கள். அரபுலகில் கண்ணியத்துக்கு உரியதாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்த அவர், தம்முடைய சிறிய தந்தையாரின் கண்காணிப்பில் வளர்ந்தார்கள்.
தன்னுடைய வாய்மைக்காகவும், நேர்மைக்காகவும், உயர் பண்புகளுக்காகவும் போற்றப்படத்தக்க வகையில் வளர்ந்தார்கள். எந்த அளவுக்கு அவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள் எனில், இரு வேறு பிரிவினருக்கு இடையில் எழும் பிரச்சனைகளுக்கு நடுநிலையான தீர்ப்பை வழங்கும் பொறுப்பு அவர்களிடம் வழங்கப்பட்டது.
அமைதியும், தியானப்பற்றும் கொண்ட ஒரு மனிதர் இவர் என வரலாற்றாசிரியர்கள் இவரைப் போற்றிப் புகழ்கின்றார்கள். இத்தகைய பண்புகளால் சிறப்பிக்கப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள் இயற்கையிலேயே ஆன்மிகத் தேடலை நாடும் மனிதராக விளங்கினார். தனது சமுதாயத்தினரின் தரங்கெட்ட, வெறுப்பான இழிச்செயல்களுக்காக மனம் வெதும்பினவராய் அவற்றை விட்டும் விலகியே இருந்தார்.
இதன் விளைவாக அமைதியை நாடி, இப்பிரபஞ்சதின் உண்மையான மூலத்தை அறிய விழைந்தவராய் மக்கா மாநகருக்கு வெளியே “ஹிரா” எனும் குகைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இக்குகை “ஜபலுந் நூர்” எனப்படும் மலையடிவாரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அக்குகையினுள் சென்று தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.