1338. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
புஹாரி :5635 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).
1339. நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள ‘தைஃபூன்’ நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னி ஆராதனை செய்பவர் (மஜூஸி) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவரின் மீது வீசியெறிந்தார்கள். பிறகு ‘நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்…” என்று கூறினார்கள். (அதாவது ‘பல முறை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்” என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி (ஸல்) அவர்கள் ‘சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
புஹாரி : 5426 அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி).
1340. பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர் (ரலி) பார்த்தார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே’ என்று நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) கேட்டார்கள். ”மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர் (ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர் (ரலி) ‘பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை’ என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர் (ரலி) வழங்கினார்கள்.
புஹாரி : 886 இப்னு உமர் (ரலி).
1341. நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத் (ரலி) அவர்களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
புஹாரி :5828 அபூ உஸ்மான் அந்நஹ்தி (ரலி).
1342. நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
புஹாரி : 2614 அலி (ரலி)
1343. ‘(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
புஹாரி: 5832 அனஸ் (ரலி).
1344. ‘நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் ‘பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று’ என்று கூறினார்கள்’.’
புஹாரி : 375 உக்பா இப்னு ஆமிர் (ரலி).