இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம்’ என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஓரளவுக்குக் கூட அறியாமல் இருப்பதே காரணமாகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவர்களா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டனையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள். மேலும், குற்றவாளி விடுதலை பெறுவதையும் காண்கிறோம்.
இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் கூறுகின்றானே!
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான். மேலும், இருதயங்களில் உள்ளவற்றையெல்லாம் அல்லாஹ் அறிகிறான்” (அல்குர்ஆன்: 64:4). இன்னும் பல வசனங்களில் (11:5, 67:13-14, 2:284, 5:7, 8:43, 21:4, 20:7, 27:65, 59:22) அல்லாஹ் மட்டுமே இருதயங்களில் உள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே! நாம் கூறாமலேயே நம் தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் ஒரு வக்கீலோ அல்லது அதிகாரியோ எடுத்துச் சொன்னாலே தவிர அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாகக் கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாரு இறைவனுக்கு உவமைகளைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கின்றான்: “ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்” (அல்குர்ஆன்: 16:74)
ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே! அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனைப் புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால், உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன்: 7:194)
ஆய்வு தொடரும்