அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகிகள், சுவர்க்கத்தின் வாடையைக்கூடப் பெறமாட்டார்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 048]
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றதைத் தான் செவியேற்றதாக மஃகில் பின் யசார் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:-
“மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் மனிதருக்கு வழங்கியிருக்க, அவர் அம்மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் மரணித்துவிட்டால், அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்யாமல் இருக்கமாட்டான்!”
( நூல்: முஸ்லிம் – 3734)
7150 – ம் இலக்க நபிமொழியாக புகாரியில் இடம்பெற்றிருக்கும் ஓர் அறிவிப்பில்: “சுவர்க்கத்தின் வாடையைக்கூட அவர் பெற்றுக்கொள்ளமாட்டார்!” என வந்துள்ளது.
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேற்படி ஹதீஸுக்கு இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:
“(நாட்டை ஆளும்) பெரும் ஆட்சியாளர், அல்லது அவரது பிரதிநிதி, அல்லது அமைச்சர், அல்லது சமூகப் பெரியார்கள் ஆகியோரை மட்டும்தான் இது குறிக்கும் என்பது இதன் கருத்தல்ல! மாறாக, வீட்டில் தலைவனாக இருக்கின்ற கணவனையும்தான் இது குறிக்கும். தன் வீட்டினருக்கு மோசடி செய்த நிலையில் இவன் மரணித்தால், சுவர்க்கத்தின் வாடையை இவன் நுகர்வதை விட்டும் நிச்சயம் அல்லாஹ் தடுத்து விடுவான்!.
பண்பாடுகளைப் பாழ்படுத்தும் இசைக்கருவிகளையும், இஸ்லாமியக் கொள்கைசார் விடயங்களைத் தகர்த்தெறியும் விடயங்களையும் தம் குடும்பத்தார்களிடம் விட்டுச் செல்வோர் தம் குடும்பத்தார்களுக்கு மோசடி செய்தவர்கள்தான் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. இந்நிலையில் இவர்கள் மரணித்துவிட்டால், சுவர்க்கத்தின் வாடை (நுகர்வதற்கு) இவர்களுக்குத் தடுக்கப்பட்டுவிடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
ஆரோக்கியத்தையும் ஈடேற்றத்தையும் அல்லாஹ்விடம் நாம் கேட்போமாக!!”
{ நூல்: ‘அத்தஃலீகு அலா கிதாபிbஸ் ஸியாசதிஷ் ஷரஇய்யா’ லிஷைகில் இஸ்லாம் இப்னு தைமிய்யா, பக்கம்: 35 }
عن معقل بن يسار رضي الله عنه قال، سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: [ ما من عبد يسترعيه الله رعيّة، يموت يوم يموت وهو غاشّ لرعيّته إلاّ حرّم الله عليه الجنة ]
( رواه مسلم – ٣٧٣٤ )
وفي رواية للبخاري: [ لم يجد رائحة الجنة ]
( رقم الحديث – ٧١٥٠ )
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى معلقا:
[ ليس المراد الإمام الأعظم أو نائبه أو الوزير أو كبراء القوم فحسب؛ بل حتى الرجل في بيته، إذا مات وهو غاشّ لأهله فإن الله يحرّم عليه رائحة الجنة!
والّذين يدعون عند أهليهم آلات الّلهو المفسدة للأخلاق، المدمرة للعقائد، هؤلاء لاشكّ أنهم غاشون لأهلهم. فإذا ماتوا على هذه الحال – والعياذ باللّه – فيخشى أن تحرم عليهم رائحة الجنة.
نسأل الله العافية والسّلامة!!!
{ المصدر : التعليق على كتاب السياسة الشرعية لشيخ الإسلام إبن تيمية رحمه الله، ص – ٣٥ }
ஆட்சியதிகாரத்தை விரும்பிக் கேட்காதவருக்கு அது வழங்கப்பட்டால், அதற்காக அல்லாஹ் உதவி செய்வான்!
அப்துர்ரஹ்மான் பின் சமுரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் என்னிடம், ‘அப்துர்ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை நீங்களாகக் கேட்காதீர்கள்.ஏனெனில், கேட்டு அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதோடு (தனியாக) விடப்படுவீர்கள். (இறையுதவி உங்களுக்குக் கிடைக்காது. நீங்களாகக்) கேட்காமல் அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (இறைவனின்) உதவி கிடைக்கும்!’ என்று கூறினார்கள்”.
{ நூல்: புகாரி – 7146,7147 }
தமிழில்..
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)