Featured Posts

அழைப்பாளரின் முன் மாதிரி

அல்லாஹ்வுடைய கொள்கையான வேத வரிகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பதற்காக காலத்திற்கும் , மக்களுக்கும் ஏற்ப நபிமார்களை அல்லாஹ் தெரிவு செய்து அனுப்பிக் கொண்டிருந்தான். இந்த உலகத்திற்கு தூது செய்திகளை கொண்டு வந்த அத்தனை நபிமார்களும் அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு யாரும் கிடையாது. வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் செலுத்தப்பட வேண்டும். நாங்கள் அவனின் தூதர்கள் என்று எடுத்துக் கூறினார்கள்.

பலவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உயிரை பணயம் வைத்து ஒவ்வொரு நபிமார்களும்  இறை செய்தியை துணிச்சலுடன் மக்களுக்கு எத்தி வைத்தார்கள்.

இறைவனுக்கு  நெருக்கமான அடியார்களை அல்லாஹ் அடிக்கடி சோதிப்பான் என்ற வரிசையில் உலகத்தில் அதிகமாக அல்லாஹ்வாலும், மக்களாலும் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்களாவர்.

தஃவா பயணத்தை பொருத்த வரை மரணிக்கின்ற வரை பல சோதனைகளும், கஷ்டங்களும் நிறைந்து இருக்கும். உலக ரீதியான பல கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டாலும் இந்த தஃவா பணிகளை தொடராக செய்யும் போது, அந்த கஷ்டங்கள் ஒரு போதும் கஷ்டமாகவே தெரியாது.

தஃவா பணிகளை இறைவனுக்காக செய்யும் போது சிவப்பு கம்பள ஆடையை விரித்து, பூமாலை போட்டு, மக்கள் புடை சூழ வருக! வருக! என்று அழைப்பார்கள் என்று யாரும் எதிர்ப் பார்க்க கூடாது. கரடு, முரடான முட்கள் நிறைந்த பாதையில் நடப்பது எப்படி கஷ்டமோ அதை விட ஒவ்வொரு தஃவாவுடைய அசைவுகளும் கஷ்டமாக இருக்கும்.

நபிமார்கள் பொருளாதார ரீதியிலும், குடும்ப ரீதியிலும், உறவுகள் ரீதியிலும் தொடரான பல கஷ்டங்களுக்கு மத்தியில், மனம் தளராமல் உத்வேகத்துடன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து இறுதி எல்லையை எட்டிப் பிடித்தார்கள். உலக இன்பங்களை இறைவனுக்காக இழந்து, சுவனத்து இன்பங்களை குறி வைத்து, வாழ்வில் வெற்றிக் கண்டார்கள்.

ஒவ்வொரு நபிமார்களும் முதலில் தன்னிடத்தில் சகல நற்பண்புகளையும் தன்னகத்தே வளர்த்துக் கொண்டார்கள். நல்ல பண்புகளும், வாய்மையும், அவர்களின் தஃவாவிற்கு உதவியாக அமைந்தது. நபி (ஸல்) அவர்கள் சிறு பருவத்திலிருந்து அழகிய குணம் உடைவராகவும், நம்பிக்கையானவராகவும் வளர்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் அசிங்கமான வாழ்க்கை வாழ்ந்த ஜாஹிலியத்து மக்கள் நபியவர்கள் நபியாக தெரிவு செய்யும் முன்னரே நபியவர்களைப் பார்த்து, வியந்து, ஆச்சரியப்பட கூடிய அளவிற்கு நபியவர்கள் நற்பண்பில் வளர்ந்தார்கள்.

நபியவர்களின் தஃவின் மிக முக்கியமான ஒரு பகுதி தான் மக்களுக்கு மத்தியில் நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த பழக்கி கொடுத்தார்கள். மேலும் நபியவர்களின் தஃவாவின் மற்றொரு முக்கியமான ஒரு பகுதி தான் சொல்லப்பட்ட அமல்களை அந்தந்த நேரத்தில் நேர்த்தியாக செய்ய தூண்டினார்கள்.

நபியவர்களின் பாசறையில் வளர்ந்த தோழர்களும் தனது கஷ்டமான வாழ்கைக்கு மத்தியிலும் இறைவனின் தஃவா பணிகளை செவ்வனே எடுத்துச் சென்றார்கள்.

அதே பணிகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கண்ணியத்திற்குரிய அழைப்பாளர்களும் தங்களை அவரவர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க கடமை பட்டுள்ளோம். இந்த ஆக்கத்தை எழுதக் கூடிய நான் முதல் அனைத்து அழைப்பாளர்களும் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

மக்கள் நம்மிடம் எதை எதிர்ப்பார்க்கிறார்கள்?
நாம் சொல் வீரர்களாக (பேச்சாளர்களாக மட்டும்) இருக்க கூடாது. நாம் மக்களுக்கு சொல்லும் ஒவ்வொன்றும் நமது வாழ்க்கையில் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கிறார்கள். அவர்கள் எதிர் பார்க்கிறார்களோ இல்லையோ அப்படி தான் நாம் நம்மை அமைத்துக் கொள்ள வேண்டும். நபியவர்கள் எதையெல்லாம் மக்களுக்கு அமல்களாக எடுத்துக் காட்டினார்களோ அதை எல்லாம் முதலில் நபியவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள். அதனை தொடர்ந்து அவர்களின் தோழர்களான ஸஹாபாக்களும் ஆர்வத்துடன் போட்டி போட்டவர்களாக அமல்களை நடைமுறைப்படுத்தி வந்தார்கள். அதனால் தான் அவர்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமான சமுதாயம் என்றும், வெற்றிப் பெற்ற சமதாயம் என்பதை படிக்கிறோம் என்றால், இப்படியான செயல்பாடுகள் குறிப்பாக தாயிகளிடத்தில் சரியாக, தொடராக இருக்க வேண்டும்.

நபியவர்கள் கால்கள் வீங்க கூடிய அளவிற்கு இரவுத் தொழுகையை நின்ற வணங்கினார்கள் என்று உருக்கமாக மக்களிடத்தில் பேசுவதால் எந்த பயனும் கிடையாது. அந்த இரவுத் தொழுகை என்னிடத்தில் தொடராக இருக்கிறதா என்பதை தாயிகள் சிந்திக்க வேண்டும்.

நபியவர்கள் இந்த அமலை இப்படி செய்தார்கள், அந்த அமலை அப்படி செய்தார்கள் என்று எடுத்து காட்டும் நம்மிடத்தில், அந்த அமல்கள் சரியாக இருக்கிறதா என்பதை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நாம் ஜூம்ஆ நிகழ்த்துவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கு போகிறோம் என்றால், நாம் பள்ளியில் நேரகாலத்தோடு அமர்ந்து இபாதத்களில் ஈடுபட வேண்டும். ஒட்டகத்தை குர்பானி கொடுத்த நன்மையில் நானும் பங்கு தாரராக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் மக்களோடு மக்களாக வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.தூர இடத்தில் இருந்து வந்துள்ளேன் என்று மௌலவியின் அறைக்குள்ளேயே நீண்ட நேரம் சும்மா இருந்து விட்டு, ஐந்து நிமிடதிற்கு முன் மக்களை தாண்டிக்கொண்டு பள்ளிக்குள் போகிறோம் என்றால் சற்று நம்மை நாம் சிந்திக்க வேண்டும்.

இது போல பர்ளான தொழுகைக்கு நேரத்திற்கு பள்ளிக்கு போகின்றேனா? பர்ளுடைய முன், பின் சுன்னத்தான தொழுகைகளை பேணி தொழுகின்றேனா? ளுஹா தொழுகை விடயத்தில் நான் எப்படி நடந்து கொள்கின்றேன். எனது மனைவி, மற்றும் பிள்ளைகள் விடயத்தில் நான் எப்படி நடந்து கொள்கிறேன், அவர்களுக்கு செய்ய வேண்டிய சகல அம்சங்களையும் பேணி நடக்கின்றேனா? என்பவற்றையும் ஒரு தரம் திரும்பி பார்க்க வேண்டும்.

மேலும் நாம் அணியும், ஆடைவிடயத்திலும், நமது அன்றாட நடவடிக்கை விடயத்திலும் மார்க்கத்திற்கு முரணில்லாத அடிப்படையில் நடக்கின்றேனா என்பதையும் சீர் தூக்கி பார்க்க கடமைப் பட்டுள்ளோம். மக்களோடு பழகும் போது அனைவரையும் சமமாக மதிக்க கூடிய நிலை நம்மிடத்தில் இருக்கின்றதா? அல்லது வசதி படைத்தவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஏழை மக்களுக்கும் கொடுக்கின்றேனா என்பதையும் திரும்பி பார்க்க வேண்டும். வசதி படைத்தவர்களை கண்டால் சிரித்து, சிரித்து,  நீண்ட நேரம் எடுத்து பேசுவது. ஏழைகளை கண்டால் ஸலாத்துடன் முடித்துக் கொள்வது அல்லது ஸலாமும் கிடையாது. அப்படியா நான் பழகுகிறேன் என்பதையும் ஒப்பிட்டு நம்மை நாம் சீர் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பிறரை மன்னிக்க கூடிய விடயத்தில் நான் தாராளமாக சரியாக நடக்கின்றேனா? அல்லது மக்களுக்கு மட்டும் பிறரை மன்னியுங்கள், மன்னியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேனா? மேலும் மக்களை ஒற்றுமை படுத்தும் விடயத்தில்  எனது பங்களிப்பு எந்த அளவிற்கு இருக்கின்றது. இதற்காக எந்த அளவிற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.  அல்லது மேடைகளில் மட்டும் தான் ஒற்றுமை கோஷமா? அல்லது அலச்சியமாக இருக்கின்றேனா? அல்லது சாட்டு போக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேனா? மக்களைப் பார்த்து ஒற்றுமையாக செயல் படுங்கள் என்று பேசும் நான், ஏன் ஒற்றுமையை விட்டும் விலகி, விலகி போகின்றேன்? மக்களுக்கு மட்டும் தான் ஒற்றுமை உபதேசங்களா? என்பதை நினைத்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒவ்வொரு விடயங்களையும் உரசிப் பார்த்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தாயிகளாகிய நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தாயிகளை பொருத்த வரை மரணம் வரை எளிமையான வாழ்க்கை வாழ பழகி கொள்ள வேண்டும், பொருளாதாரத்தை மட்டும் குறி வைத்து தஃவாவை அமைப்போமேயானால், நாம் பேசும் எந்த உபதேசங்களும் உள்ளத்தில் இருந்து வெளிவராது. மாறாக உதட்டிலிருந்து மட்டும் தான் வெளிவரும். அதனால் மக்களிடத்தில் அது பெரிய தாக்கத்தையோ, அல்லது மாற்றத்தையோ ஏற்பபடுத்தாது. பொருளாதாரம் குவிய,குவிய நமது சகல நல்ல பண்புகளும் ஒவ்வொன்றாக எடுப்பட்டுக் கொண்டே போய் விடும். இறுதியல் இவர் பணத்திற்காக தஃவா செய்கிறார் என்று மக்களை அல்லாஹ் பேச வைத்து விடுவான்.

நபியவர்கள் ஈச்சமர ஓலை பாயில் படுத்தார்கள் என்று கண்கள் கலங்கிய நிலையில் பயானை செய்து விட்டு, ஊரிலே பெரிய வசதி வடைத்தவரின் வீட்டில் ஏசியில் படுக்கிறோம் என்றால் சற்று நிதானமாக சிந்தியுங்கள். ஊரில் இருந்து தஃவாவிற்கு வரும் போதே வசதி படைத்தவர்களை தொடர்பு கொண்டு நான் உங்கள் ஊருக்கு பயானுக்கு வருகிறேன். நீங்கள் சாப்பாட்டை தயார் செய்யுங்கள்,உங்கள் வீட்டில் தங்குவதற்கும் முடிவு செய்துள்ளேன் என்று நாம் வசதியை எதிர்ப் பார்க்கிறோம் என்றால், நமது நிலைகளை நபியோடு ஒப்பிட்டு மாற்றிக் கொள்ள வேண்டும்.வசதி வாய்ப்புகள் தானாக தேடி வந்த நேரத்திலும் கூட, நாம் எல்லாம் வழிப்போக்கர்களைப் போல, மறுமை தான் நமது நோக்கம் என்று கூறி, அனைத்து வசதி வாய்ப்புகளையும் உதறி விட்டு கடைசி வரை அச்சுப்பதியும் ஓலை பாயில் படுத்தார்களே! இந்த உபதேசம் பொது மக்களுக்கு மட்டும் தானா? அல்லாஹ் அவரவர்களுக்கு கொடுத்த நிஃமத்துகளை கட்டாயம் அனுபவிக்க வேண்டும். ஆனால் தாயிகள் தஃவாவிற்கு போகும் இடங்களில் அது தான் வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது.

உபதேசம் செய்யுங்கள் அது முஃமிக்களுக்கு பயன் அளிக்கும் என்ற வகையில் சில விடயங்களை நல்ல நோக்கத்திற்காக எடுத்து காட்டியுள்ளேன். பொருத்தமாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.

இறுதியாக அமல்கள் இல்லாமல் பேச்சோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக் கூடியவர்களுக்கு நபியவர்கள் எச்சரித்த ஹதீஸை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். …“மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்’ என்று கூறுவார். (புகாரி- 3267)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *