-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
சீர் கெட்டு சிதறிக்கிடந்த மனிதர்களை சரியான வழியின் பக்கம் அழைத்து உலக மகா சாதனை படைத்தார்கள் நபியவர்கள். உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவும், அவரையே பின் பற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைப் படி, நமது வழி நபி வழி என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு மத்தியில் பல கூறுகளாக பிரிந்து, பிளவுப்பட்டு, மாறி, மாறி பிறரை ஏசிக் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
நபியவர்களால் தெளிவாக உறுதி செய்யப்பட்ட வழிகெட்ட கூட்டங்கள் ஒரு பக்கம், அது அல்லாமல் நாங்கள் மட்டும் தான் சரியான வழியில் உள்ளோம் என்று போட்டி, பொறாமையின், வெளிப்பாடே இந்தப் பிரிவுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.
உலகில் பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள். நாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என்று கூறி ஒரு கூட்டத்தைப் பிரித்தார்கள்.இப்போது அவர்களுக்குள்ளே பிரிவுகளும், முரண்பாடுகளும்?
உலகில் சூனியத்தை நம்பியவன் முஷ்ரிக் நாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என்று கூறி ஒரு கூட்டத்தைப் பிரித்தார்கள். இப்போது அவர்களுக்குள்ளே முரண்பாடுகள்?
நபியவர்களுடைய சுன்னாக்களை சின்ன பிரச்சனை, சில்லரைப் பிரச்சினை என்று ஒரு சாரார்?
அமல் என்று எதையும் செய்யலாம் எல்லாம் மார்க்கம் என்று இன்னொரு சாரார்?
இது அல்லாமல், தனக்கு ஒரு விடயம் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு பிரிவை ஆரம்பிப்பது, அல்லது யாரோடு சரி சேர்ந்து கொண்டு நச்சுக் கருத்துகளை சொல்லிக் கொண்டே இருப்பது?
நல்லெண்ணங்களை வெளிப்படுத்தவதற்குப் பகரமாக தவறான எண்ணங்கள் தஃவா களத்தில் வலம் வருவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.
இன்றைய தஃவா களம் சரியான ஆரோக்கியமான நிலையில் இல்லை என்பதை சாதாரண பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்?
பிறரின் தவறுகளை, குறைகளை மறையுங்கள் என்று இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் மார்க்கம் படித்த, தஃவா களத்தில் பிரச்சாரம் செய்கின்றவர்களே பிறருடைய குறைகளை பகிரங்கமாக பேசித் திரிவதைக் காண்கிறோம்?
மன்னியுங்கள், விட்டுக் கொடுங்கள் என்ற தலைப்புகளில் மேடைகளில் பொது மக்களை நோக்கி பேசுகிறார்கள் ஆனால் தனது வாழ்க்கையில் அதை நடை முறைப் படு்த்த மறுக்கிறார்கள்?
ஒற்றுமையாகுவோம் என்ற தலைப்பில் மேடைகளில் பொது மக்களை நோக்கிப் பேசுகிறார்கள் ஆனால் வாருங்கள் முதலில் நாம் ஒற்றுமையாகுவோம் என்றால் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி நழுவி விடுகிறார்கள்?
தனக்கு ஒரு அமைப்பை பிடிக்கவில்லை என்றால் அதை பலரிடம் விமர்சனம் செய்து திரிவதும் இன்றைய தஃவா களத்தில் மௌலவிமார்களிடம் சாதாரணமாகி விட்டது?
இன்னும் சிலர் தனக்கு விருப்பமான மௌலவிமார்களை கண்டால் மட்டும் சிரிப்பதும், பேசுவதும்?
இன்னும் சிலர் தனக்கு நிகரான மௌலவிமார்களுடன் மட்டும் தொடர்புகளை வைத்துக் கொள்வார்கள்? ஏனைய மௌலவிமார்களை ஏளனமாக மதிப்பது?
இன்னும் சில மௌலவிமார்கள் தனக்கு மேல் யாரும் வந்து விடக் கூடாது என்று பிறரின் முன்னேற்றத்திற்கு இடையூராக செயல் படுவது?
இன்னும் சில மௌலவிமார்கள் இன்னின்ன மௌலவிமார்கள் ஏறிய மேடைகளில் நான் ஏறமாட்டேன் என்று தவறாக தங்களை அமைத்துக் கொண்டுள்ளார்கள்?
இன்னும் சில மௌலவிமார்கள் இந்த, இந்த பகுதிகளில் நாங்கள் மட்டும் தான் தஃவா செய்வோம் வேறு யாரும் வரக் கூடாது என்ற நிலை?
இன்னும் சில மௌலவிமார்கள் மத்ரஸாக்களில் ஓதாமல் எப்படி அவர் பயான் செய்ய முடியும்? என்ற முரண்பாடு?
இன்னும் சில மௌலவிமார்கள் நாங்கள் இன்ன பாடத்தில் பட்டம் பெற்றிருக்கிறோம் அவர் இணைய தளங்களில் பார்த்து படித்து விட்டு எப்படி அதைப்பற்றி பயான் செய்ய முடியும்? என்ற முரண்பாடு? இப்படி பல விதமான குழப்பங்களோடு ஏதோ தஃவா சென்று கொண்டிருப்பதை காண்கிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டு மெளலவிமார்களுக்கு இடையில் பிரச்சினை வந்திருக்கலாம், அதை சம்பந்தப்பட்டவர்களே உணர்ந்து, மன்னித்து, விட்டுக் கொடுத்து விடலாம். அல்லது நீதியான நடுவர்கள் அவர்களை சமாதானம் படுத்தலாம். எவர் சமாதனத்திற்கு வர மறுக்கிறாறோ அவருக்கு எதிராக செயல் பட வேண்டும் என்பதை குர்ஆன் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
மேலும் உங்களிடம் சிறந்த ஆளுமைகள் இருக்கலாம், ஆற்றல்கள் இருக்கலாம், பொருளாதாரம் கொட்டிக்கிடக்கலாம், நன்றாக அரபு பேசத் தெரிந்து இருக்கலாம், நன்றாக பயான் செய்ய தெரிந்து இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி மனிதர்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். மார்க்கத்தின் பிரகாரம் மனிதர்களை மதிக்க தெரியாதவர்கள் தஃவாவிற்கு அறவே தகுதியில்லாதவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எவ்வளவு பெரிய எதரியாக இருந்தாலும் மன்னிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? பொதுவாக அதிகமாக குறை பேசி திரிபவர்களிடத்தில் தான் அதிகமான குறைகள் காணப்படும். ஆனால் அது அவர்களுக்கு விளங்காது.
மேலும் தனி மனிதனாக இருந்தாலும் சரி, அமைப்பாக இருந்தாலும் சரி, ஜமாஅத்தாக இருந்தாலும் சரி, வேறு நிருவாகங்களாக இருந்தாலும் சரி ஏதோ ரீதியில் சில தவறுகள் இருக்க தான் செய்யும். அதையும் அழகான முறையில் சுட்டிக் காட்டி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எனவே குறைகளை மறைப்போம், மன்னிப்போம், விட்டுக் கொடுப்போம், தவறாக விமர்சனம் செய்யமாட்டோம் என்ற அடிப்படையில் நம்மை முதலில் பக்குவப் படுத்தவோம்.
அதே போல மௌலவி வித்தியாசமாகப் பேசுகிறார், வித்தியாசமாக அணுகுகிறார் என்று பொதுமக்கள் அவசரப்பட்டு விடக் கூடாது.நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கியமான முறையில் தஃவாவை முன்னெடுத்தச் செல்ல பாடுபட வேண்டும். உள்ளத்தில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்கள், கசடுகளை துாரோடு பிடிங்கி வீசிவிட்டு, முகமலர்ச்சியோடு தஃவாவை முன்னெடுத்துச் செல்ல தஃவா களத்தை பயன் படுத்துவோமாக!