Featured Posts

76.மருத்துவம்

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5678

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5679

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார். நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர்க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5680

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்’ என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது’ என வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5681

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5682

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5683

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் ‘இருப்பதாயிருந்தால்’ அல்லது ‘இருக்கிறதென்றால்’ நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5684

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது’ என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5685

அனஸ்(ரலி) கூறினார். (மதீனா வந்த ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்’ என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப்பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது ‘மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை’ என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த ‘அல்ஹர்ரா’ எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச் செய்து, ‘இவற்றின் பாலை அருந்துங்கள்’ என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச் சென்று விட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள், அந்த ஆட்களைப் பின்தொடர்ந்து செல்லும்படி (ஒரு படைப்பிரிவை) அனுப்பி (அவர்களைப் பிடித்து வரச் செய்து கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களின் கால்களையும் கைகளையும் துண்டித்து அவர்களின் கண்களில் சூடிட்டார்கள். அவர்களில் ஒருவர் இறக்கும்வரை தன்னுடைய நாவால் தரையை நக்கியபடி இருந்ததை பார்த்தேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் இப்னு மிஸ்கீன்(ரஹ்) கூறினார். அனஸ்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ‘நபி(ஸல்) அவர்கள் வழங்கிய தண்டனைகளிலேயே கடுமையான தண்டனை எது என்று எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கேட்டதாகவும், அப்போது இந்த ஹதீஸை அவரிடம் அனஸ்(ரலி) தெரிவித்ததாகவும் எனக்குத் தகவல் எட்டியது. ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்தபோது ‘(ஹஜ்ஜாஜ் இதைத் தமக்குச் சாதமாக்கிச் கொள்வார் என்பதால்) அவருக்கு இதை அனஸ்(ரலி) தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டுமென விரும்பினேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5686

அனஸ்(ரலி) கூறினார். (‘உரைனா’ குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்ப வெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறு நீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து) வர (ஆட்களை) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபி(ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். அவர்களின் கண்களில் சூடிட்டார்கள்.

கத்தாதா(ரஹ்) கூறினார்: முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்), ‘இது, (கொலை, கொள்ளைக்கான) தண்டனைச் சட்டங்கள் அருளப் பெறுவதற்கு முன்னால் நடந்த சம்பவம்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5687

காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார். எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், ‘நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; ‘சாமை’த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்கள். நான், ‘சாம் என்றால் என்ன?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மரணம்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5688

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதையில் ‘சாமைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது’ என்று கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: ‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்று பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5689

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் ‘தல்பீனா’ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்து வந்தார்கள். மேலும், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்’ என்று கூறக் கேட்டுள்ளேன்’ என்பார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5690

உர்வா(ரஹ்) கூறினார். ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், ‘அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது’ என்று சொல்வார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5691

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவரின் ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தம் மூக்கில் (சொட்டு) மருந்திட்டுக் கொண்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5692

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும் என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5693

உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார். நான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தம் மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்து விட்டது. உடனே தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5694

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5695

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5696

அபூ உபைதா ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார். அனஸ்(ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ‘ஸாஉ’ உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும் தான். மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5697

ஆஸிம் இப்னு உமர் இப்னி கத்தாதா(ரஹ்) கூறினார். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) முகன்னஉ இப்னு சினான்(ரஹ்) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, ‘நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்ளாதவரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அதில் நிவாரணம் உள்ளது’ என்று சொல்வதை கேட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5698

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையிலுள்ள ‘லஹ்யீ ஜமல்’ எனும் இடத்தில் வைத்துத் தம் தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்தார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5699

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5700

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் தமக்கேற்பட்ட (ஒற்றைத் தலை) வலியின் காரணத்தால் ஒரு நீர் நிலையின் அருகில் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். இந்த நீர்நிலை ‘லஹ்யு ஜமல்’ என்றழைக்கப்பட்டு வந்தது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5701

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கேற்பட்ட ஒற்றைத் தலைவலியின் காரணத்தால் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5702

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துவது, அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5703

கஅப் இப்னு உஜ்ரா(ரலி) கூறினார். ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ மூட்டிக் கொண்டிருந்தேன். பேன்கள் என் தலையிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘உங்கள் (தலையிலுள்ள) பேன்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் தலைமழித்துக் கொண்டு (இஹ்ராமின் விதியை மீறியதற்குப் பரிகாரமாக) மூன்று நாள்கள் நோன்பு நோறுங்கள்; அல்லது ஆறு பேருக்கு உணவளியுங்கள்; அல்லது ஒரு தியாகப் பிராணியை அறுத்து (குர்பானி) கொடுங்கள்’ என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப்(ரஹ்) கூறினார்: ‘இவற்றில் எதை முதலில் குறிப்பிட்டார்கள்’ என்று எனக்குத் தெரியவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5704

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5705

ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) ‘கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:) நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள். என்று கூறினார்கள்.

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, ‘அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5706

உம்மு ஸலமா(ரலி) கூறினார். ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். (அதற்காக ‘இத்தா’ இருக்கும்போது) அப்பெண்ணுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்பெண்ணைப் பற்றி மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டு, ‘அவளுடைய கண் பழுதாகி விடும் அபாயமிருப்பதால் அவள் (கண்ணில் சிகிச்சைக்காக) அஞ்சனம் தீட்டிக் கொள்ளலாமா?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘(அறியாமைக் காலத்தில்) உங்களில் ஒருத்தி (தன் கணவன் இறந்தபின்) ‘மோசமான ஆடையணிந்தவளாக தன் வீட்டில் தங்கியிருப்பாள்’ அல்லது ‘மோசமான வீட்டில் சாதாரண ஆடை அணிந்தவளாக (ஆண்டு முழுவதும்) தங்கியிருப்பாள்’ (ஓராண்டு கழிந்தபின் அவ்வழியாக) ஏதேனும் ஒரு நாய் கடந்து சென்றால் அதன் மீது ஒட்டகச் சாணத்தை வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் (கழியும்வரை) அஞ்சனம் இடவேண்டாம் என்று பதில் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5707

அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5708

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சமையல் காளான் ‘மன்னு’ வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்: இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக ஹகம் இப்னு உ(த்)தைபா(ரஹ்) எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோது தான் அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு வந்தேன்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5709

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஆயிஷா(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களை அபூ பக்ர்(ரலி) முத்தமிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5712

ஆயிஷா(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்தபோது அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பது போன்றே (நபி அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.

அவர்கள் மயக்கத்திலிருந்து (முழுமையாகத்) தெளிந்தபோது ‘என் வாயில் மருந்து ஊற்ற வேண்டாமென்று நான் உங்களைத் தடுக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம். ஆனால், நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் வெறுக்கிறீர்கள் என நினைத்தோம்)’ என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், ‘நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருவர் பாக்கியில்லாமல் வீட்டிலுள்ள அனைவரின் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும். அப்பாஸ் அவர்களைத் தவிர. ஏனெனில், (வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5713

உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையை அழைத்துச் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள் இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத்தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (ஏழில்) இரண்டை (மட்டும்) நமக்கு விவரித்தார்கள். (மீதி) ஐந்தை விவரிக்கவில்லை’ என ஸுஹ்ரீ(ரஹ்) கூற கேட்டேன்.

அறிவிப்பாளர் அலீ இப்னு மதினீ(ரஹ்) கூறினார்: சுஃப்யான்(ரஹ்), குழந்தையின் அண்ணத்தை விரலால் அழுத்துவது குறித்து விவரிக்கையில், தம் விரலை மேல்வாயின் உட்புறத்தில் நுழைத்து அழுத்திக் காட்டினார்கள். (இதுதான் நோக்கமே தவிர, மூலத்தில் ‘இஃலாக்’ எனும் சொல் இடம் பெற்றிருப்பதற்காகத்) தொண்டையில் எதையும் மாட்டுவது நோக்கமாகாது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5714

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களுக்கு வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே தொங்கியபடி (என்னுடைய வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ்(ரஹ்) கூறினார்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், ‘ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று நான் கேட்க, நான் ‘இல்லை (தெரியாது)’ என்று சொன்னேன். அவர்கள், ‘அவர் அலீ(ரலி) தாம்’ என்று கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்து நோய் கடுமையாகிவிட்டபோது ‘வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். மக்களுக்கு நான் இறுதி உபதேசம் செய்யக்கூடும்’ என்று கூறினார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் (இன்னொரு) துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தில் அவர்களை அமரச் செய்து, அவர்களின் மீது அந்தத் தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றலானோம். அவர்கள் இறுதியில் எங்களை நோக்கி, ‘(சொன்னபடி) செய்து விட்டீர்கள் போதும்)’ என்று சைகை காட்டலானார்கள். பிறகு மக்களை நோக்கி (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று மக்களுக்கு தொழுகை நடத்தி உரையும் நிகழ்த்தினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5715

உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார். குஸைமா குலத்து ‘அசத்’ கிளையைச் சேர்ந்த உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் அல் அசதிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடு துறந்த) பெண்களில் ஒருவராவார். அவர் உக்காஷா இப்னு மிஹ்ஸான்(ரலி) அவர்களின் சகோதரி ஆவார். அவர் கூறினார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் ‘இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்’ என்று கூறினார்கள். ‘குஸ்த்’ எனும் கோஷ்டமே ‘இந்தியக் குச்சி’ எனப்படுகிறது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5716

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘என் சகோரருக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்து வருகிறது’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவரும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். பிறகு அவர் வந்து, ‘என் சகோதரருக்குத் தேன் ஊட்டினேன்; ஆனால், அது அவருக்கு வயிற்றுப் போக்கை அதிகமாக்கவே செய்தது’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உண்மை சொன்னான். உன் சகோதரரின் வயிறுதான் பொய் பேசியது’ என்று பதில் கூறினார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5717

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது. ‘ஸஃபர்’ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது’ என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5718

உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார். உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடு துறந்த) பெண்களில் ஒருவராவார். இவர் உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) அவர்களின் சகோதரி ஆவார். அவர் கூறினார்:

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வை அஞ்சுங்கள். இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்’ என்று கூறினார்கள். ‘இந்தியக் குச்சி’ என்பது ‘குஸ்த்’ எனும் செய்கோஷ்டத்தைக் குறிக்கிறது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5719

ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார். அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப்(ரஹ்) (அபூ கிலாபா(ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன. அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக் காட்டப்பட்ட ஹதீஸ்களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம் பெற்றிருந்தது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் அனஸ் இப்னு நள்ர்(ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) தம் கையால் எனக்குச் சூடிட்டார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப்பார்க்க அனுமதி அளித்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூ தல்ஹா(ரலி), அனஸ் இப்னு நள்ர்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூ தல்ஹா(ரலி)தாம் எனக்குச் சூடிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5722

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார். (உஹுதுப் போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களின் முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களின் (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்)பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்த போய்க் கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவிவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா(ரலி) பாய் ஒன்றை எடுத்து அதை எரித்து (அது சாம்பலானதும்) அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5723

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ‘(இறைவா!) எங்களைவிட்டு நரகத்தின் வேதனையை நீக்குவாயாக’ என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5724

ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) கூறினார். அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5725

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5726

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5727

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலங்களைச் சேர்ந்த சிலர் (ஹிஜ்ரி ஆறாமாண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, தாம் இஸ்லாத்தை ஏற்பதாகத் தெரிவித்தனர். மேலும், ‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள்; நாங்கள் விளைநிலங்கள் உடையவர்கள் அல்லர்’ என்று கூறி மதீனா(வின் தட்ப வெப்பம்) தமக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனக் கருதினர்.

எனவே, அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கிடும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அவர்கள் குணமடைவதற்காக (மதீனாவுக்கு) வெளியே சென்று (தங்கி) அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.) இறுதியில் அவர்கள் ‘அல்ஹர்ரா’ எனும் இடத்தின் பக்கம் சென்றபோது இஸ்லாத்திலிருந்து விலம் இறைமறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். அத்துடன் (நில்லாது), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களைத் தம்முடன் ஓட்டிச் சென்று விட்டனர். நபி(ஸல்) அவர்களுக்கு இந்த விஷயம் எட்டியதும் (கொடுஞ் செயல் புரிந்த) அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைத் தேடிப் பிடித்து வர) ஆள் அனுப்பினார்கள். அவர்களைத் தண்டிக்கும் படி உத்தரவிட அவ்வாறே (மக்கள்) அவர்களின் கண்களில் சூடிட்டு, அவர்களின் கை(கால்)களைத் துண்டித்து விட்டார்கள். அவர்கள் ‘அல்ஹர்ரா’ (எனும் பாறைகள் நிறைந்த) பகுதியின் ஒரு மூலையில் அப்படியே விடப்பட்டு அதே நிலையில் இறந்து போய்விட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5728

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்.

‘இதை உஸாமா இப்னு ஸைத்(ரலி) (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் அறிவிக்க கேட்டேன்’ என்று இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹபீப் இப்னு அபீ ஸாபித்(ரஹ்) கூறினார்: நான் இப்ராஹீம் இப்னு அத்(ரஹ்) அவர்களிடம், ‘உஸாமா(ரலி) (உங்கள் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா? ஸஅத்(ரலி) அதை மறுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (ஸஅத்(ரலி) அதை மறுக்கவில்லை)’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5729

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 59 ‘சர்ஃக்’ எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். 60 அதற்கு உமர்(ரலி) ‘ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், ‘நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை’ என்று கூறினார்கள். வேறு சிலர், ‘உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை’ என்று கூறினார்கள்.

அப்போது உமர்(ரலி), ‘நீங்கள் போகலாம்’ என்று சொல்லிவிட்டுப்பிறகு, ‘என்னிடம் (மதீனா வாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்’ என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.

அப்போதும் உமர்(ரலி), ‘நீங்கள் போகலாம்’ என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்’ என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), ‘மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்’ என்றனர்.

எனவே, உமர்(ரலி) மக்களிடையே ‘நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்பட இருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்’ என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), ‘அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’ என்று கேட்க, உமர்(ரலி), ‘அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?’ என்று கேட்டார்கள்.
அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், ‘இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல கேட்டேன்’ என்று கூறினார்கள்.

உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5730

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) கூறினார். உமர்(ரலி) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல கேட்டேன்’ என்று கூறினார்கள். உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5731

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்; கொள்ளைநோயும் நுழையாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5732

ஹஃப்ஸா பின்த் சீரின்(ரஹ்) கூறினார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) என்னிடம், ‘(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்?’ என்று கேட்டார்கள். நான், ‘கொள்ளை நோயால் இறந்தார்’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5733

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வயிற்றுப் போக்கால் இறப்பவர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவார்; கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5734

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கி விட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5735

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீதே ஊதிக் கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நானே அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக் கொண்டும் அவர்களின் கையாலேயே (அவர்களின் மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களின் கரத்தின் சுபிட்சம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) கூறினார்:
நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் தம் இருகரங்களின் மீதும் ஊதிப் பிறகு அவற்றால் தம் முகத்தில் தடவிவந்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5736

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) ‘உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?’ என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், ‘நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்க மாட்டோம்’ என்று கூறினர்.

உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) ‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், ‘நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5737

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, ‘உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்’ என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், ‘அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர்?’ என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக் கொண்டார்’ என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5738

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5739

உம்மு ஸலமா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸுபைதி(ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5740

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே’ என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5741

அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார். ஆயிஷா(ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5742

அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார். நானும் ஸாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித்(ரஹ்) ‘அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்’ என்று சொல்ல, அனஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?’ என்று கேட்டார்கள். ஸாபித்(ரஹ்), ‘சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)’ என்று சொல்ல, அனஸ்(ரலி), ‘அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபா அன்லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5743

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். தம் வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து, ‘அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று பிரார்த்தித்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!)

இதைப் போன்றே ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5744

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இம்ஸஹில் பஃஸ், ரப்பன்னாஸ்! பியதிகஷ் ஷிஃபாஉ. லா காஷிஃப லஹு இல்லா அன்த்த’ என்று கூறி ஓதிப்பார்த்து வந்தார்கள். (பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைத் துடைப்பாயாக! நிவாரணம் உன் கரத்தில்தான் உள்ளது. உன்னைத் தவிர துன்பத்தை நீக்குபவர் வேறு எவரும் இல்லை.)

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5745

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோயாளிக்காக, ‘பிஸ்மில்லாஹி துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா’ என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால்… எங்களில் சிலரின் உமிழ் நீரோடு எம்முடைய இந்த பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்று இருப்பவரைக் குணப்படுத்தும்.)

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5746

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது ‘பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா’ என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்… எங்கள் பூமியின் மண்ணும் எங்களில் சிலரின் உமிழ் நீரும் (கலந்தால்) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்.)

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5747

அபூ ஸலமா(ரஹ்) கூறினார். ‘(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக் (கனவில்) கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா(ரலி) சொல்ல செவியுற்றேன். இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்துவிட்)ட காரணத்தால் மலையை விடச் சுமையான ஒரு கனவை நான் கண்டாலும் கூட அதைப் பொருட்படுத்துவதில்லை.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5748

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்றபோது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ்(ரஹ்) கூறினார்: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) தம் படுக்கைக்குச் செல்லும்போது இவ்வாறு செய்வதை நான் பார்த்து வந்தேன்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5749

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித் தோழர்கள் அக்குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க மறுத்து விட்டார்கள். பின்னர், அந்தக் குலத்தாரின் தலைவனைத் தேள் கொட்டிவிட்டது. எனவே, அவனுக்காக அ(க் குலத்த)வர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பர்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் (மருந்து) இருக்கலாம்!’ என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, ‘கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டி விட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா?’ என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து அளிக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது!’ என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர்ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். அந்த நபித்தோழர், தேளால் கொட்டப்பட்டவர் மீது ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..’ என்று ஓதி (இலேசாக) உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வேதனையும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!’ என்று (நபித் தோழர்) ஒருவர் கூறியபோது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது!’ என்று ஓதிப்பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்!’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5750

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரித் தம் வலக் கையால் அவரை தடவிக் கொடுத்து, ‘அத்ஹிபில் பஃஸ், ரப்பன்னாஸ்! வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக – ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறுவார்கள். (பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! குணப்படுத்துவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. நோய் சிறிதும் இல்லாதவாறு குணப்படுத்திடுவாயாக.)

இதைப் போன்றே ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5751

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் (உடல்) மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நான் அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக் கொண்டும் அவர்களின் கையின் சுபிட்சம் (பரக்கத்) கருதி அதைக்கொண்டே (அவர்களின் மேனியை) தடவிக் கொடுததுக் கொண்டும் இருந்தேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) கூறினார்: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதி வந்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளின் மீதும் ஊதிப் பிறகு அவ்விரண்டினாலும் தம் முகத்தின் மீது தடவிக் கொள்வார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5752

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, ‘இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், ‘பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், ‘இங்கும் இங்கும் பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்று விட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் ‘நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில், பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீது அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்)அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்க மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டு விட்டார்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5753

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5754

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5755

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், ‘நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5756

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. நற்குறி எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும். நல்ல (மங்கலகரமான) சொல் தான் அது என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5757

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5758

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஹுதைல்’ குலத்துப் பெண் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்று விட்டாள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகைiயாகத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அப்போது குற்றம் புரிந்த அப்பெண்ணின் காப்பாளர் (கணவர்), உண்ணவோ பருகவோ, மொழியாவோ அழவோ முடியாத ஒரு சிசுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது இறைத்தூதர் அவர்களே! இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் (சாதுர்யமாகவும் அடுக்கு மொழியிலும் பேசுவதில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5759

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (ஹுதைல் குலத்து) இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியைக் கல்லால் அடித்து அப்பெண்ணின் கருவில் இருந்த சிசுவைக் கொன்று விட்டாள். நபி(ஸல்) அவர்கள் இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஒரு பெண் அடிமையைத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5760

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே கொல்லப்பட்டுவிட்ட ஒரு சிசுவின் விஷயத்தில் ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். எவருக்கு எதிராக இத்தீர்ப்பு அளிக்கப்பட்டதோ அவர் (அந்தப் பெண்ணின் கணவர்), ‘உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ முடியாத ஒன்றுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இவர் (வார்த்தை ஜாலத்தில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5761

அபூ மஸ்வூத்(ரலி) கூறினார். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனின் தட்சிணை ஆகியவற்றுக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5762

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். ‘அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் சிலவேளைகளில் எங்களக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அந்த உண்மையான சொல் ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்) கூறினார்: (இந்த ஹதீஸில்) ‘அந்த உண்மையான சொல்’ எனத் தொடங்கும் இறுதித் தொடரை அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் கின் ஹம்மாம்(ரஹ்) நபியவர்களின் சொல்லாக (முதலில்) கூறவில்லை. பிறகு, அது நபியவர்களின் சொல்லே என அவர் கூறினார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘பனூ ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப் பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்டார். அத்தோழர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று சொல்ல, முதலாமவர் ‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?’ என்று கேட்டார். தோழர், ‘லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)’ என்று பதிலளித்தார். அவர், ‘எதில் வைத்திருக்கிறான்?’ என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்’ என்று பதிலளித்தார். அவர், ‘அது எங்கே இருக்கிறது?’ என்று கேட்க, மற்றவர், ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்’ என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ‘ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன’ என்று கூறினார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)’ என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்து விடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) ‘சீப்பிலும் சணல் நாரிலும்’ என்று காணப்படுகிறது. தலையை வாரும்போது கழியும் முடிக்கே ‘முஷாதத்’ (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும்போது வெளிவரும் நாருக்கே ‘முஷாகத்’ (சணல் நார்) எனப்படும்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5764

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், ‘இந்த மனிதரின் நிலையென்ன?’ என்று கேட்டார். மற்றவர், ‘யூதர்களின் நட்புக்குலமான ‘பனூ ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்’ என்று பதிலளித்தார். அவர், ‘எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)’ என்று கேட்க, மற்றவர், ‘சீப்பிலும் சிக்கு முடியிலும்’ என்று பதிலளித்தார். அவர் ‘எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?’ என்று கேட்க, மற்றவர், ‘ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் ‘தர்வான்’ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார். பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், ‘இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன’ என்று சொல்லிவிட்டுப் பிறகு ‘அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது’ என்றும் கூறினார்கள்.

நான், ‘தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?’ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்து விட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை’ என்று சொல்லி விட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5766

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் என்னிடம் இருந்தபோது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ‘ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குக் தெளிவளித்து விட்டான்’ என்று கூறினார்கள். நான், ‘என்ன அது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்க, மற்றவர், ‘இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், ‘இவருக்கு யார் சூனியம் வைத்தார்?’ என்று கேட்க, மற்றவர், ‘பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் எனும் யூதன்’ என்று பதிலளித்தார். முதலாமவர், ‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?’ என்று கேட்க, அடுத்தவர், ‘சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும்’ என்று கூறினார். முதலாமவர், ‘அது எங்கே வைக்கப்பட்டுள்ளது?’ என்று கேட்க, அடுத்தவர், ‘தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில்’ என்று பதிலளித்தார்.

எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.) பிறகு ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, ‘அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்ற (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்தி விட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ என அஞ்சினேன்’ என்று கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5767

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இரண்டு மனிதாகள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சில சொற்பொழிவில் கவர்ச்சி உள்ளது’ அல்லது ‘சொற்பொழிவுகளில் சில கவர்ச்சியாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5768

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் அலீ இப்னு மதீனீ(ரஹ்) அல்லாத மற்றவர்கள் ‘ஏழு பேரீச்சம் பழங்களை’ என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5769

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5770

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல’ என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5771

(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள், ‘வியாதி பிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்தைக் கொண்டு செல்ல வேண்டாம்’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிப்பதை பின்பு செவியுற்றேன். அபூ ஹுரைரா(ரலி) முந்தைய ஹதீஸை (தாம் அறிவிக்கவில்லை என்று) மறுத்தார்கள். நாங்கள், ‘தொற்று நோய் கிடையாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நீங்கள் அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டோம். அவர்கள் (தாம் கூறவில்லையென்று மறுத்துக் கோபத்துடன்) அபிசீனிய மொழியில் ஏதோ பேசினார்கள். இதைத் தவிர (தாம் அறிவித்த) வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்து நான் பார்த்ததில்லை.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5772

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருக்க முடியுமென்றால்) மூன்று விஷயங்களில்தாம் குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும் தாம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5773

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்று நோய் கிடையாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5774

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5775

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தொற்றுN நாய் கிடையாது’ என்று கூறினார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, ‘(பாலை) மணலில் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கும் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து (கலந்து) அவற்றுக்கும் சிரங்கு பிடிக்கச் செய்து விடுகிறதே, இது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் முதல் ஒட்டகத்திற்குத் தொற்றச் செய்தது யார்?’ என்று கேட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5776

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5777

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஹிஜ்ரீ -7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.

அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் (முஹம்மது(ஸல்) அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உங்கள் தந்தை யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘எங்கள் தந்தை இன்னார்’ என்று பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்’ என்று கூறினார்கள். யூதர்கள், ‘நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’ என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கவர்கள், ‘சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே இதையும் அறிந்து கொள்வீர்கள்’ என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘நரகவாசிகள் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்’ என்று பதிலளித்தார்கள்.

(இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புகமாட்டோம்’ என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், ‘நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். யூதர்கள், ‘சரி’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இந்த ஆடடில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (கலந்திருக்கிறோம்)’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்களிக்காது’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5778

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5779

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5780

அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்), ‘நான் ஷாம் நாட்டிற்கு வரும்வரை இந்த ஹதீஸை செவியுற்றதில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5781

மற்றோர் அறிவிப்பில் லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்திருப்பதாவது: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரலி) கூறினார்: நான் அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ(ரஹ்) அவாகளிடம், ‘கழுதைப் பாலில் நாங்கள் அங்கசுத்தி (உளூ) செய்யலாமா? அல்லது அதைப் பருகலாமா? அல்லது விலங்குகளின் பித்த நீரை, அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை அருந்தலாமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘முஸ்லிம்கள் ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சை பெற்றுவந்தார்கள். அதில் தவறேதும் இருப்பதாக அவர்கள் கருதவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென்று தடை விதித்ததாகச் செய்தி எமக்கு எட்டியுள்ளது. ஆனால், அவற்றின் பாலை அருந்துங்கள் என்றோ அருந்தாதீர்கள் என்றோ எந்தக் கட்டளையும் அல்லது தடை உத்தரவும் நமக்கு எட்டவில்லை’ என்று கூறினார்கள்.

விலங்குகளின் பித்த நீரைப் பொறுத்தவரை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார். ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விலங்குகளின் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்’ என்று அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார் என அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) என்னிடம் தெரிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5782

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்து விடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *