Featured Posts

மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.

இவர்கள் நாம் கேட்கிறோம். ‘சிருஷ்டிகளில் சில மற்றதைவிட மேன்மைக்குரியதாக இருந்தாலும் சிருஷ்டி என்ற கோட்டை விட்டும் அப்பாற்ப்பட்டு விட முடியுமா? மேன்மைக்குரியது என்பதனால் அதை அல்லாஹ்வுடைய பங்காளி என்று கூற முடியுமா? மேன்மைக்குரிய படைப்பு என்பதானால் அதை வழிபட முடியுமா? இல்லவே இல்லை. பயந்து அவற்றின் மீது தவக்குல் வைத்து அவற்றுக்காக நோன்பு நோற்று, தொழுது, அவற்றிடம் தேவைகள் கேட்கவும், ஆதரவுகள் வைக்கவும் அருகதையற்றவர்களாக சிருஷ்டிகள் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்த வேண்டிய வழிபாடுகளாகும்.

எனவே அவற்றைக் கொண்டு ஆணையிடுவதும், பிரார்த்திப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. ‘ஒருவன் சத்தியம் செய்ய நினைத்தால் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்யட்டும்! இல்லையென்றால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கட்டும்!’ என்று ஒரு ஸஹீஹான ஹதீஸில் காணப்படுகிறது. ‘அல்லாஹ்வைக் கொண்டல்லாது ஆணையிடாதீர்கள்’ என்று இன்னுமொரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

‘அல்லாஹ் அல்லாதவற்றை (சிருஷ்டிகளை)க் கொண்டு ஆணையிடுகிறவன் இறைவனுக்கு இணை வைத்து விட்டான்’ என்று மற்றொரு ஹதீஸில் காணப்படுகிறது. படைப்புகள் என்ற விஷயத்தில் நபியும், மலக்கும், ஸலிஹீன்களும் எல்லோரும் சமமே. இவர்களுள் யாரைக்கொண்டும் சத்தியம் செய்யக் கூடாது. சிருஷ்டிகள் எத்தனைப் பெரிய மேன்மைக்குரியவை ஆனாலும் அவற்றைத் தனக்கு இணை வைக்கக் கூடாது என்று கண்டித்து இறைவன் குறிப்பிடுகிறான்: “ஒரு மனிதருக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அருள் புரிந்த பிறகு அவர் பிற மனிதர்களை நோக்கி ‘என்னை வணங்குங்கள். அல்லாஹ்வையல்ல’ என்று கூற அவருக்கு (உரிமை) இல்லை. மாறாக ‘நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டு இருப்பதன் காரணமாக இறையடியார்களாக ஆகி விடுங்கள்’ என்று கூற வேண்டும். தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் உங்களை ஏவ மாட்டார். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டதன் பின்னர் குஃப்ரைக் கொண்டு அவர் உங்களை ஏவுவாரா?” (3:79-80)

“நபியே! நீர் கூறும். அல்லாஹ்வையன்றி (கடவுளாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பவற்றை நீங்கள் அழையுங்கள். அவை உங்களுக்கு எந்த கஷ்டத்தையும், நீக்கவோ, தட்டி விடவோ சக்தியற்றவை. இவர்கள் இறைவன் என்று அழைப்பவையும் தங்களுக்காக தங்கள் இறைவனிடம் (வணக்கங்களால்) சமீபிப்பதைத் தேடிக்கொண்டு அவர்களின் இறைவனோடு மிக்க நெருங்கியவர் யார்? என்பதையும் தேடிக்கொண்டு இறைவனுடைய அருளையே எதிர்ப்பார்த்து அவனுடைய வேதனைக்கு பயப்படுகின்றன. ஏனென்றால் உம் இறைவனின் வேதனையோ மிகப் பயப்படக்கூடியதே” (17;56-57)

கடந்த காலத்து சமூகங்களில் சிலர் நபிமார்களான ஈஸா, உஸைர் (அலை) மற்றும் மலக்குகள் போன்றவர்களை அழைத்துப் பிரார்த்தித்து கொண்டிருந்தது பற்றி அல்லாஹ் அவர்களை எச்சரித்து ‘நீங்கள் யாரை அழைத்து பிரார்த்திக்கின்றீர்களோ அவர்கள் அனைவரும் எனது அடிமைகள். என்னையே நாடி நிற்கின்றனர். என் அருளை எப்போதும் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். என்னுடைய வேதனையைப் பயந்துக் கொண்டே வாழ்கின்றனர். நீங்களும் என்னுடைய அதாபை (வேதனையை) பயந்துதான் வாழ்கின்றீர்கள். நீங்கள் என்னென்ன அமல்களைச் செய்து என்னை சமீபிக்கிறீர்களோ அவற்றை அவர்களும் புரிந்து என்னை சமீபிக்க நாடுகின்றனர். இப்படியிருக்க ஏன் இந்த சிருஷ்டிகளை அழைக்கிறீர்கள்?’ என்று ஆன்றோர் (ஸலஃபு)கள் சிலர் அறிவிக்கின்றனர்.

“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் வழிபட்டு, அல்லாஹ்வுக்கு பயந்து, அவனுக்கு மாறு செய்வதை விட்டு விலகிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பாக்கியம் பெற்றவர்கள்”. (24:52)

வழிபாடு, கீழ்படிதல் என்பது அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் செய்ய வேண்டியது. ரஸூலுக்கு வழிபட்டவன் அல்லாஹ்வுக்கு வழிபட்டவனாகிறான் என்று இந்த ஆயத்தில் இறைவன் விளக்கி பயமும், பக்தியும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது. அவற்றில் ரஸூலுக்கு பங்கில்லை என்றும் கூறினான். எனவே ஒரு சிருஷ்டி அது எந்த படைப்பானாலும் சரி. அதற்கு அஞ்சி, பயந்து நடத்தல் கூடாது. அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்ச வேண்டும். மேலும் இறைவன் கூறுகிறான்: “அல்லாஹ் நமக்குப் போதுமானவன். அல்லாஹ் தன் அருளைப் பின்னும் நமக்கு அருள் புரிவான். அவனுடைய ரஸூலும் அருள் புரிவார்கள். நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே (ஆசித்து) ஆதரவு வைத்து வாழ்கிறோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நல்லது” (9:59).

மேலும் கூறுகிறான்: “நீர் ஓய்வு பெற்றால் வணக்கத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளும். அன்றி உம் இறைவனையே நீர் ஆசிப்பீராக!” (94:7-8)

அல்லாஹ்வும், ரஸூலும் கொடுத்ததைக் கொண்டு பொருந்தி வாழ வேண்டுமென்று இவர்களுக்கு வலியுறுத்தியுள்ளான். அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் என்று கூறவும் சொல்லியிருக்கிறான். திருப்தி என்பது அல்லாஹ், ரஸூல் இவர்களுடனும் சேர்க்கப்பட்டுள்ளது. போதுமாக்கிக் கொள்ளுதல் என்பது மேற்குறிப்பிட்ட திருமறை வசனத்தில் அல்லாஹ்வோடு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ரஸூலுடன் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அல்லாஹ் ஒருவன் தான் தன் மூமினான அடியார்களுக்குப் போதுமானவன். ‘அல்லாஹ்வும், ரஸூலும் கொடுத்ததைக் கொண்டு’ என்று கூறினான். ரஸூல் எதைக் கொடுக்க முடியும் என்று சந்தேகித்தல் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வுடைய விதிவிலக்கல்களையும் (ஹராம்களையும்), அவன் அனுமதித்தவற்றையும் (ஹலால்களையும்), மேலும் அவனது நன்மார்க்கத்தையும், எச்சரிக்கைகளையும், வாக்குறுதிகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் நபி (ஸல்) அவர்கள் நடுநாயகமாக இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வும், ரஸூலும் விலக்கியவை ஹராமாகின்றன. அனுமதித்தவை ஹலால் ஆகின்றன. இஸ்லாம் மார்க்கம் என்றாலே அல்லாஹ், ரஸூலின் விதிகளல்லவா? “….நம் தூதர் உங்களுக்கு கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். தடுத்ததைவிட்டு விலகி நடந்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் இன்னுமொரு இடத்தில் குறிப்பிடுகிறான். (59:7)

செல்வமாயினும், வேறு எதுவாயினும் அல்லாஹ், ரஸூல் எதை ஹலாலாக்கிக் கொடுத்தார்களோ, அதைப்பெற்றுக் பொருந்திக் கொள்ள வேண்டும். யுத்தத்தில் கிடைத்தப் பொருட்கள், தர்மச் சொத்துக்கள் போன்ற பொதுச் சொத்துக்களிலும் அல்லாஹ்வும், ரஸூலும் பங்கிட்டுப் பகிர்ந்தளித்தைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதுவே ஒருவருக்குரிய அளவாகும். அளவுக்கு மிஞ்சியதைக் கேட்கக் கூடாதல்லவா? பின்னர் “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்” என்று கூறுவார்கள் என்றும் அல்லாஹ் சொல்கிறான் (9:59). இங்கே ரஸூலைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் அல்லாஹ் ஒருவனே தன் மூமினான அடியார்களுக்குப் போதுமானவனாக இருக்கிறான்.

மூமின்கள் அல்லாஹ்வைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதுபோல நபியும் அவனைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள வேண்டும். இதைப்பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்: “நபியே! அல்லாஹ் ஒருவன் மட்டும் உமக்கும், உம்மைப் பின்பற்றிய விசுவாசிகளுக்கும் போதுமானவன்” (8:64). இவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்றால் இவர்களுக்கு நேர்வழியை அருள் புரியவும், வாழ்க்கையில் எல்லாச் செல்வங்களையும் வழங்கவும், மற்றும் அனைத்திற்கும் அல்லாஹ் ஒருவனைக் கொண்டு போதுமாக்கப்படும் என்பது ஆன்றோர் பலரின் கருத்தாகும். மேற்குறிப்பிட்ட ஆயத்தில் (9:59) அருளுக்குச் சொந்தமானவன் அவன் ஒருவனே என்பதைக் காட்டுவதற்காக அல்லாஹ் தன் ‘அருளை’ என்று குறிப்பிட்டு இருக்கிறான். அதற்கப்பால் ஆசித்தல், ஆதரவு வைத்தல் அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆக வேண்டும். இதைக் காட்டுவதற்காக ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே ஆதரவு வைத்து வாழ்கிறோம்’ என்றான். மனிதன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் எத்தனை மாபெரும் சிருஷ்டியானாலும் அதை ஆதரவு வைத்து நம்பி வாழக்கூடாது. இந்த விதியில் அனைத்து சிருஷ்டிகளும் சமமே. நபிமார்கள், வலிமார்கள், மலக்குகள் இவர்களுள் எவரையும் பயந்து அல்லது நம்பி, ஆசை வைத்து இவ்வையகத்தில் வாழக்கூடாது.

இது விஷயத்தில் இறைவன் கூறினான்: “(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை (தெய்வங்களென) நீங்கள் எண்ணிக் கொண்டீர்களோ அவற்றை அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ, பூமியிலோ அவற்றுக்கு அணுவளவும் ஆதிக்கமில்லை. அன்றியும் அவ்விரண்டில் எதிலும் (அவற்றைப் படைப்பதில்) இவற்றுக்குப் பங்குமில்லை. (இதில்) அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் எவருமில்லை. அவனது அனுமதி பெற்றவர்களைத் தவிர அவனிடத்தில் (எவரும்) பரிந்து பேசுவதும் பயனளிக்காது” (34:22-23). இந்த வசனத்தில் அல்லாஹ்வைத் தவிர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்திப்பவனுக்குப் பயங்கரமான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சிருஷ்டிகளுக்கு எள்ளளவும் அல்லாஹ்வுடன் அதிகாரத்தில் பங்கில்லை. அல்லாஹ்வுக்கு சிருஷ்டிகளில் நின்றும் உதவியாளர்களோ, ஒத்தாசைக்காரர்களோ அவசியமில்லை. அத்தகைய பலவீனமான சிருஷ்டிகளுடன் மனித இனம் தொடர்பு வைப்பதை விட்டு துண்டித்து வாழ வேண்டும், மனிதன் உதவி கேட்பதும், பயப்படுவதும், வணங்குவதும், ஆதரவு வைப்பதும் எல்லாம் அல்லாஹ்வுடனே இருத்தல் வேண்டும். மேலும் படைப்புகளில் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்தால் மட்டும் மறுமையில் சிபாரிசு செய்ய அனுமதி உண்டு என்றும் கூறியிருக்கிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *