நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி நின்றதற்கப்பால் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்பார்கள். இது அனுமதிக்கப்பட்ட ஷபாஅத்தின் மாதிரியாகும்.
மற்றொன்று: நபிகளின் ஷபாஅத்தையும், துஆவையும் தமக்கு அருள் புரியும்படி நேராக அல்லாஹ்விடமே கெஞ்சி பிரார்த்தனை செய்வது. கண்பார்வை இழந்த ஸஹாபியும் இம்மாதிரியைத்தான் பின்பற்றியதாக நாம் ஹதீஸில் பார்த்தோம். அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்காகப் பிரார்த்தித்து அம்மனிதரிடமும் நேராக அல்லாஹ்விடம் ஷபாஅத்தை ஏற்றருள நீரும் பிரார்த்தியும் என்று பணித்தார்கள் என்று வருகிறது.