Featured Posts

பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

புனிதமான மார்க்கம் நமது இஸ்லாம். இது இரு அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று: இறைவனுக்கு இணை துணை கற்பிக்காமல் வணக்க வழிபாடுகள் செலுத்துவது. இரண்டு: எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நபிகள் காட்டித் தந்தார்களோ அப்படி அவனை வணங்குவது. இவ்விரு அடிப்படைகளையும் முழுமையாக நாம் எடுத்து செயல்படுவதினால் கலிமத்துஷ் ஷஹாதாவின் உண்மையான தாத்பரியத்தை மெய்ப்பித்தவர்களாக ஆக முடியும். இறைவன் அடியார்களின் இதயத்தால் பயந்து, வழிபட்டு, உதவிகோரி, நேசித்து, பெருமைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆசைவைத்து நடக்கப்படக் கூடியவனாவான். இந்நிலையில் தான் உண்மையாக நாம் அவனை இறைவனாக ஏற்றிருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும். அல்லாஹ்வுக்கு என்னென்ன தன்மைகள், பாத்தியதைகள், உரிமைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதிலும் மனிதர்கள் கூட்டாக மாட்டார்கள். வணக்கமும் அல்லாஹ்வுக்குரியது. வேறு எவரும் வணங்கப்பட மாட்டார்கள். பிரார்த்தனைக்குரியவனும் அவனே. வேறு யாரும் பிரார்த்திக்கப்பட மாட்டார்கள். அவனையே அஞ்ச வேண்டும். வேறு சிருஷ்டிகளுக்கு அஞ்சக் கூடாது.

நபிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இப்படிப்பட்டவர்கள் அல்ல. அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஒரு நடுவராவார்கள். எதை அல்லாஹ் ஹலாலாக்கினானோ அது ஹலாலானது. எதை ஹராமாக்கினானோ அது ஹராமானது. எவற்றை இறைவன் சட்டமாக நியமித்தானோ அவற்றுக்குப் பெயர்தான் மார்க்கமென்பது. அல்லாஹ்விற்கும், சிருஷ்டிகளுக்கும் இடையில் நியமனங்களை நபி (ஸல்) அவர்கள் சேர்த்து வைத்தார்கள். அவன் வாக்குறுதிகளையும், எச்சரிக்கைகளையும் மனிதர்களுக்கிடையில் எடுத்துக் கூறுவார்கள். அல்லாஹ்வின் அனுமதிகளையும், விலக்கல்களையும், மற்றும் ஏனைய உரைகளையும் மனிதர்களுக்கிடையில் சேர்த்து வைக்கின்ற ஒரு நடுவர்தான் நபி (ஸல்) அவர்கள்.

பிரார்த்தனைகளை அங்கீகரித்தல், நோய்நொடிகளைக் குணப்படுத்துதல், நேர்வழி வழங்குதல், செல்வத்தைக் கொடுத்தல், சோதனையிலிருந்து மனிதனைக் காப்பாற்றுதல் இவையனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பொறுப்புகளாகும். அவன் ஒருவனே பிரார்த்தனைகளைக் கேட்கிறான். அவரவருக்குரிய இடங்களைத் தெரிந்து வைத்திருக்கிறான். மனிதர்களின் அகத்தோற்றத்தையும், வெளித்தோற்றத்தையும் நன்றாக விளங்கியிருக்கிறான். அனுக்கிரகங்களைப் பொழிய சக்தி படைத்தவனும் அவனே. நோய் நொடிகளை நீக்க அவன் ஒருவனிடமே கேட்க வேண்டும். தன் சிருஷ்டிகளின் நிலைமையைப் பற்றி அவனிடம் சொல்லிக் கொடுக்க எவரும் தேவையில்லை. அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அல்லாஹ்வுக்கு எவரும் துணைபுரிய வேண்டாம். எல்லா காரணங்களையும் அவனே சிருஷ்டித்தான். காரணங்களுக்கெல்லாம் காரணகர்த்தாவாக அவனிருக்கும் போது யாருடைய ஒத்தாசைதான் அவனுக்குத் தேவைப்படப் போகிறது? ஏகனும், எந்தத் தேவையுமில்லாதவனும், எவரையும் பெறாதவனும், எவராலும் பெறப்படாதவனும், நிகரற்ற நாயனும் அவனே. வானங்களிலும், பூமியிலும் வாழும் அனைத்து படைப்பினங்களும் அவனிடமே கெஞ்சி நிற்கின்றன. “வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவரும் தங்களுக்கு வேண்டியவற்றை அவனிடமே கேட்கின்றனர். அவன் ஒவ்வொரு நாளும் (புதிது புதிதாக) ஒவ்வொரு நிலையிலுமிருக்கிறான்” (50:29) என்று திருமறை கூறுகிறது. அவனால் முடியாத ஒன்றும் இல்லை. ஒருவரின் பிரார்த்தனையைக் கேட்கின்ற வேளையில் மற்றொருவரின் பிரார்த்தனையையும் கேட்பதை விட்டு அவன் சக்தியற்றவனல்ல. அனைத்து மொழிகளிலும் எண்ணிறந்த குரல்களிலும் எழுப்பப்படுகின்ற எல்லா பிரார்த்தனைகளையும், எல்லாத்தொனிகளையும், தேவைகளையும் அவன் செவியுறுகிறான். அலட்டி அலட்டிக் கேட்பவர்கள் அவனை அலுப்பில் வீழ்த்த மாட்டார்கள். மாறாக அலட்டி பிரார்த்திப்பவரை அவன் பெரிதும் நேசிக்கிறான்.

நபித்தோழர்கள் நபியிடம் ஏதாவது சட்டங்கள் பற்றி வினவினால் அதற்கு பதிலை நபியே சொல்ல வேண்டுமென்று அல்லாஹ்வால் பணிக்கப்பட்டுள்ளார்கள். இதைப்பற்றி இறைவன் கூறுகிறான்: “(நபியே! தர்மத்திற்காக) எதைச் செலவு செய்வது என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு (அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று நீர் கூறுவீராக!” (2:219). இன்னும் கூறுகிறான்: (“நபியே!) புதுப்பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கு காலங்களை அறிவிக்கக்கூடியவை, ஹஜ்ஜையும் அறிவிக்கக்கூடியவை என்று நீர் கூறுவீராக!: (2:189).

“(நபியே!) சிறப்பான மாதங்களில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹரம், ரஜப்) யுத்தம் செய்வதைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். அந்த மாதங்களில் யுத்தம் செய்வது பெரும் பாவம்… என்று நீர் கூறும்” (2:217).

அதே நேரத்தில் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் பற்றி (சட்டங்களைப் பற்றியல்ல) நபியிடம் கேட்டால் அல்லாஹ் அவர்களின் சமீபத்திலேயே இருப்பதாக அல்லாஹ்வே விளக்குகிறான். திருமறை கூறுகிறது: “(நபியே!) உம்மிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். எவரும் என்னை அழைத்தால் அழைப்போருக்கு நான் விடையளிக்கிறேன்” (2:186)

அல்லாஹ் நபிகளிடம் சமீபத்தில்தான் இருப்பதாக விளக்க வேண்டுமென்று ஏவவில்லை. சிருஷ்டிகளின் சமீபத்தில் இருப்பதாக அவனே எடுத்துக் கூறினான். அவனை அழைப்பவனின் அருகில் இருக்கிறான் என்ற உண்மையை ஒருவர் சொல்லித் தராமலேயே புரிந்து கொள்ளலாம் என்று இவ்வசனம் விளக்குகிறது. எனவே அல்லாஹ் தன் படைப்பினங்களுடன் மிக நெருங்கியிருப்பதனால் அனைவரின் பிரார்த்தனைகளையும், இரகசியமாகக் கேட்கப்படும் தேவைகளையும் செவியுறுகிறான். இந்த உண்மையை நபி (ஸல்) அவர்களும் கூறியிருக்கிறார்கள்.

பிரார்த்திக்கும் போதும், இறைவனை தியானித்து துதிகள் சொல்லும் போதும் குரலுயர்த்திப் பிரார்த்திப்பவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் ‘ஜனங்களே! உங்கள் ஆத்மாக்களுடன் இரக்கம் காட்டுங்கள். செவிடனையோ உங்கள் கண்பார்வைக்கு அப்பால் இருப்பவனையோ அழைக்கவில்லை. பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வையே நீங்கள் அழைக்கிறீர்கள். நீங்கள் அழைக்கின்ற இறைவன் மிகவும் அருகில் இருக்கின்றான். ஒட்டகை வாகனத்தில் பிரயாணம் செய்கின்றவன் ஒட்டகையின் கழுத்துடன் எத்தனை தூரம் நெருங்கியிருக்கிறானோ அதைவிட அதிகமாக பிரார்த்திப்பவனுடன் அல்லாஹ் நெருங்கியிருக்கிறான். இன்னொரு ஹதீஸில் ‘நீங்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் முகத்துக்கு எதிரில் துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் முகத்துக்கு எதிரில் இருக்கிறான். வலப்புறத்திலும் துப்ப வேண்டாம். அங்கேயும் மலக்கொருவர் இருக்கிறார். இடப்பக்கமாகவோ தன் இரு பாதங்களுக்கு அடியிலோ துப்ப வேண்டும்’ என்று வந்துள்ளது. இது ஸஹீஹான ஹதீஸாகும். இறைவன் வானங்களின் மேலுள்ள தன் அர்ஷில் இருக்கிறான். சிருஷ்டிகளை விட்டெல்லாம் விலகியும் இருக்கிறான். அவனுடைய தரத்தில் எதுவுமே சிருஷ்டிகளிலுமில்லை. அவனுடைய சிருஷ்டிகளில் ஒன்றும் (எதுவும்) அவனுடைய தரத்திலுமில்லை. அல்லாஹ் அனைத்து சிருஷ்டிகளை விட்டும் அர்ஷை விட்டும் தேவையற்றவன். படைப்பினங்களின் ஒரு விஷயமும் அவனுக்குத் தேவையில்லை. உண்மையில் அல்லாஹ்வே தன் ஆற்றலால் அர்ஷைச் சுமந்து நிற்கும் மலக்குகளையும் தாங்கி நிற்கிறான். உலகத்தை இறைவன் பல தட்டுகளாக படைத்திருக்கிறான். மேல்தட்டுகள் கீழ்தட்டுகளின் பால் தேவையாகாத வகையில் உலகைப் படைத்திருக்கிறான். வானமண்டலங்கள் வாயுமண்டலங்களோடு தொடர்புடையதல்ல. வாயு மண்டலம் பூமண்டலத்தோடு தேவையாகாது. இந்த அனைத்துக் கோளங்களுக்கும் கிரகங்களுக்கும் மேலே அகில கோளங்களின் இரட்சகனான அல்லாஹ் இருக்கிறான். இத்தகைய ஆற்றல் தனக்கு இருக்கின்றதாக வர்ணிக்கின்ற இறைவன் கூறுகின்றான்: “அல்லாஹ்வின் மேலான தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. இன்னும் மறுமை நாளில் பூமி முழுவதும் அவனுடைய ஒரு கைப்பிடியிலும், வானங்கள் சுருட்டப்பட்டு அவனுடைய வலக்கரத்திலும் இருக்கும். அவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிக்க மேலானவன். மிகப் பரிசுத்தமானவன்”. (39:67)

இத்தகைய பேராற்றல் படைத்த இறைவன் எத்தனை வல்லமையுடையவன். பிறரிடம் தேவையற்றவன். மாபெரியோன் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவன் மிக உயர்ந்தவன். ஏகன். எவரையும் பெறாதவன். யாராலும் பெறப்படாதவன். அவனுக்கு நிகர் யாருமில்லை. அனைத்துமே அவன் பக்கம் தேவைப்படுகின்றனவே தவிர அவன் எவரிடத்திலும் தேவையற்றவன். இத்தகைய ஏகத்துவ விளக்கங்களை வேறு பல இடங்களில் தந்துள்ளேன். இறைவன் எந்த ஏகத்துவத்தை பரப்புவதற்காக திருத்தூதர்களை அனுப்பினானோ, அத்தகைய பரிசுத்தமான ஏகத்துவம் திருமறையில் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. திருமறையில் ‘ஸூரத்துல் இக்லாஸ்’ ஏகத்துவக் கொள்கையை நனி சிறந்து விளக்கிக் காட்டுகிறது. “(நபியே!) நீர் அல்லாஹ் ஒருவன் என்று கூறும்” என்று ஏவுகிறது. மேலும் செயல் ரீதியான ஏகத்துவத்தை ‘ஸூரத்துல் காஃபிரூன்’ என்ற அத்தியாயம் விளக்கிக் காட்டுகிறது. “(நபியே! காஃபிர்களை நோக்கி) நீர் கூறும். காஃபிர்களே நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. அவ்வாறே இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குகிறவர்கள் அல்லர். உங்களுடைய வினைக்குரிய கூலி உங்களுக்கும், என்னுடைய செயலுக்குரிய கூலி எனக்கும் கிடைக்கும்” (109:1-6).

சொல், செயல் ரீதியான ஏகதெய்வ நம்பிக்கையை இவ்விரு அத்தியாயங்களும் விளக்கிக் கொண்டிருப்பதனால் நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையின் ஸுன்னத்தான இரு ரக்அத்துகளிலும், தவாஃபுடைய இரு ரக்அத்துகளிலும் மற்றும் சில தொழுகைகளிலும் இவ்விரு ஸூராக்களையும் ஓதி வந்தார்கள். தொழுகையின் இந்த கருத்துகள் அடங்கிய கீழ்வரும் ஆயத்துகளையும் நபி (ஸல்) அவர்கள் ஓதி வந்தார்கள்.

முதல் ரக்அத்தில் “(மூமின்களே!) நீங்கள் கூறுங்கள். அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்ற இ(வ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பெற்ற யாவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப் பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்களில் எவருடனும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம். அந்த அல்லாஹ்வுக்கே முற்றிலும் நாங்கள் வழிப்பட்டோம்” (2:136) என்ற ஆயத்தை ஓதினார்கள்.

இரண்டாவது ரக்அத்தில் “வேதம் அருளப்பட்டவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நமக்கிடையிலுள்ள (சம நிலையான) ஒரு மத்திய விஷயத்தின் பால் வாருங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! இதையும் அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்கள் என்று நீங்கள் (எங்களுக்காக) சாட்சியம் கூறுவீர்களாக!” (3:46) என்ற ஆயத்தை ஓதுவார்கள். இவ்விரு ஆயத்துகளும் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கைகளை அடக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு இறை வசனங்களும் சொல்லாலும், செயலாலுமுள்ள ஈமானின் (நம்பிக்கையின்) அம்சங்களைப் பொதிந்திருக்கின்றன. இறைவன் அடியார்களுக்களித்த அனுக்கிரகங்களிலெல்லாம் ஈமானும், இஸ்லாமுமே மிகப் பெரிய அனுக்கிரகங்களாகும். இவ்விரு அனுக்கிரகங்களும் இவ்விரண்டு ஆயத்துகளிலும் அடங்கி இருக்கின்றன.

இது வினா-விடையின் கடைசிப் பகுதியாகும். இதை அப்படியே சுருக்கி எழுத்து வடிவத்தில் இங்கே கொண்டு வருவதற்கு விரும்பியதினால் குறிப்பிடுகிறேன். ஏனெனில் இதில் முக்கியமான இலட்சியங்களும், பயனுள்ள சட்டங்களும் அடங்கியிருக்கின்றன. ஏகத்துவமே அல் குர்ஆனின் (ஸிர்ரு) மர்மமாகும். ஈமானின் நூற்களும் ஏகத்துவத்தைத் தான் போதிக்கின்றன. இத்தகைய ஆதாரங்களின் அமைப்புகளை நல்ல பல சொற்களால் குறிப்பிடுவது மிக முக்கியமானதும், அடியார்களுக்குப் பயன் தரவல்லதுமாகும். அதிலேதான் இம்மை, மறுமையின் பலாபலன்களும் இருக்கின்றன.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
அல்லாஹ்வின் அருளால் முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *