Featured Posts

அணுகுண்டு வீசப்பட்டால்..

சென்னை மாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டால்…

ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள்.

சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு – கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது.

கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ – வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ – வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் – நமது சென்னையை நாசமாக்க – வெளிப்படுகிறது. சரி, மைக்ரோ – வினாடி என்றால் என்ன? கண்ணிமைக்கும் நேரம்? இல்லை, ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு.

அந்த நான்காவது மைக்ரோ வினாடியில் சென்ட்ரலைச் சுற்றி கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் ஆரத்தில் எல்லாமே ஆவியாகிவிடுகின்றன. சூரியனைப் போன்ற மிக வெப்பமான ஒளி எழும்புகிறது. ரயில் வண்டிகள், இருப்புப் பாதைகள், மின் கம்பிகள், சிக்னல் கம்புகள் – எதுவுமே உருகிக் குழம்பாகக் கூட நேரமில்லாமல் அப்படியே ஆவியாகி விடுகின்றன.

சென்ட்ரல் நிலையத்தில் வழக்கமாக காலை 8மணிக்கு கிட்டத்தட்ட 5000 பேர் இருப்பார்கள். அவர்கள்தான் நகரிலேயே மிக அதிர்ஷ்டசாலிகள். வெடியின் சத்தம் கூட கேட்காமல், அதன் ஒளியைப் பார்க்கும் முன்னேயே அவர்கள் பரலோகம் போய்ச் சேர்ந்து இருப்பார்கள்.

அந்த ஒளிப் பிழம்பின் பின்னர் வருவது ஒரு மிகப் பெரிய வெடிச்சத்தம். இம்மாதிரி ஒன்றை நீங்கள் நிச்சயம் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. இந்த ராட்சத இடிதான் மிகப்பெரிய சர்வ நாசத்தை உண்டாக்குகிறது. இதை அதிர்வலை என்பார்கள். உருகிய உலோகத்தை இதுவே இட்டுச் செல்கிறது வழியெல்லாம் அழிவைப் பரப்பியவாறு!

ஒரு அரை கிலோமீட்டர் ஆரம் கொண்ட வட்டத்தில், ரிப்பன் கட்டடத்திலும், தங்க சாலையிலும் கூட இந்த அதிர்வலை கொலையலை ஆகிறது. இதை கொலை அதியழுத்த பிரதேசம் என்பார்கள். இந்த ஒலியின் அடர்த்தியே மனித உடலை நாராகக் கிழிக்கும் வலிமை பெற்றுள்ளதால், இங்குள்ள கிட்டத்தட்ட 10,000 பேர் வெடிச்சத்தம் கேட்கும் முன்னரே சதையும் பிண்டமுமாக சிதறுகிறார்கள். எங்கும் ஓடவோ ஒளியவோ நேரமில்லை, இடமில்லை.

குண்டு வெடித்து இன்னும் ஒரு வினாடி கூட ஆகவில்லை கிட்டத்தட்ட 20.000 பேர் இறந்து விட்டனர். சென்னை சென்ட்ரல் மேலே ஒரு காளான் மேகம் உருவாகி மேலெழும்பத் தொடங்கியுள்ளது. கதிரியக்க வீச்சு தொடங்கிவிட்டது. முதல் சில மில்லி – வினாடிகளில் (மில்லி – வினாடி = வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) உருவாகிய மின் காந்த அதிர்ச்சி பரவலாக (கிண்டிவரை) எல்லா எலெக்ட்ரானிக் சாமான்களையும் அப்பளமாகச் சுட்டுவிட்டது. நகரம் சாகத் தொடங்கிவிட்டது.

இன்னும் ஒரு ஒன்றரை – இரண்டு கிலோ மீட்டர் ஆரத்தில் அதிர்வலை ராட்சசத்தனமாய் இயங்குகிறது. பஸ்கள், லாரிகள், கட்டடங்கள், ரயில் வண்டிகள் எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. மனிதர்கள் மீது விழுகின்றன. எங்கும் பறக்கும் பாறைகள். தீ பற்றி எரிகிறது. இந்தப் பகுதியிலுள்ள இரண்டு லட்சம் போர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20,000 பேர் உடனே உயிரிழக்கின்றனர். மீதிப்பேர் படுபாயமுறுகின்றனர்.

இன்னும் ஐந்து வினாடிகள் கூட ஆகவில்லை 40,000 பேர் மரணம் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் படுகாயம்.

செக்ரடேரியட் கட்டடமும், திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் தரைமட்டமாகி விட்டன. அங்கு தீ எரிகிறது. ரத்தக் களறியாய் உள்ளது. அணுகுண்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை.

பெரம்பூரிலும் ராயப்பேட்டையிலும் நாச அலை கிட்டத்தட்ட சூறாவளி வேகத்திற்கு (வீரியும் குறைந்து) காணப்படுகிறது. செங்கல் கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. குடிசைகளெல்லாம் அழிவு. இன்னும் பத்து லட்சம் பேருக்கு பாதிப்பு, பத்தாயிரம் பேர் மடிகின்றனர்.

பத்து வினாடி – 40,000 பேர் மரணம். ஆறு லட்சம் பேர் படுகாயம். பெசன்ட் நகரில், ஆவடியில் அதிர்வலை புயல் வேகமாய் குறைந்து தெரிகிறது. இங்கு எல்லோரும் பிழைத்து விடுவார்கள். தாம்பரத்தில் கதிரியக்கக் காற்று மட்டும் வீசுகிறது.

தமிழ் நாட்டின் வர்த்தக உயிர் நாடியான பகுதி முற்றிலும் அழிந்து கிடக்கிறது. எண்ணூரிலிருந்து திருவான்மியூர் வரை எங்கும் அழிவு. சென்னையோடு வெளிவட்டாரங்களும், உலகும் தொலைத் தொடர்பு இழந்துவிட்டன. மின்காந்த அதிர்ச்சி எல்லா தொடர்பு சாதனங்களையும் பொரித்து விட்டது.

அடுத்த சில நாட்களில் கதிரியக்கக் காற்று மெதுவாக வீசி செங்கை, வேலூர் விழுப்புரம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களிலும் காற்றை விஷமாக்கும். தமிழ்நாட்டு கடலோரத்தில் வங்காள விரிகுடாவில் கடல் தண்ணீரும், கடல் மணலும் விஷமாகும்.

குடும்பங்கள் பிளவுபட்டுவிட்டன. அண்ணா நகரிலிருந்து வேலைக்கு சென்றவர் என்ன ஆனார் என்று குடும்பத்துக்கு தெரியாது. குண்டு பாதிப்புப் பகுதியில் (உயிர் தப்பியும்) சிக்கியுள்ள இருபது லட்சம் பேருக்கு உணவு போய்ச் சேர எந்த வழியும் கிடையாது. வாகனங்கள், தெருக்கள் கூட இல்லை. எங்கும் பீதி, கொலை, கொள்ளை, நாசம், பற்றி எரியும் தீ.

நண்பர்களே! நரகத்தை கற்பனையில் கண்டு விட்டீர்களா? ஆனால் அது மட்டுமா? எதிரி வேண்டுமானால் நம்மவர்களில் பத்து லட்சம் பேரைக் காயப்படுத்தி, அரை லட்சம் பேரைக் கொன்றிருக்கலாம். நம் ஆட்சியர் சும்மா இருப்பார்களா? இதே போல் எதிரியின் நகரம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்குள், ஆம் 9மணிக்குள், இதைவிட சக்தி வாய்ந்த ஒரு குண்டை வெடிப்பார்கள். பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.

ஆனால் இறுதியில் என்ன? இரு நகரங்களிலும், கிட்டத்தட்ட 30லட்சம் மனிதர்கள், குடும்பங்கள் தாம் இதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அழிவு, சாவு, மீதியிருப்பவர்களின் காயம், துயரம், பிளவுபட்ட குடும்பங்கள், பட்டினி, அடுத்து இரண்டு தலைமறைகளுக்கு கான்சர் மற்றும் குறைகளோடு பிறக்கும் குழந்தைகள் – மாநிலம் முழுவதும் விஷமான நீரும், காற்றும், அதன் விளைவுகளும்.

அதோடு அரசின் பல மையமான கேந்திரங்களும் அழிந்து விட்டதால் தேவைப்படும் நிவாரண வேலைகள் மேற்கொள்வதில் ஏராளாமான பிரச்சனைகள் வேறு.

ஆம், எமனின் ஆயுதத்தைக் கையில் பிடித்து விட்டோம் – இதையெல்லாம் நினைத்தே ஆகவேண்டும், மேற்கொண்டே தீர வேண்டும்.

டாக்டர் ஆர்.ராமனுஜம்
த.வி.வெங்கடேஷ்வரன்

நன்றி: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான புத்தரின் சோகம்.

4 comments

  1. பிருந்தன்

    அருமையான கட்டுரை, உதாரணத்துக்கு செண்ணையையா எடுப்பது, நமக்கென்று வரும்போது நிஜம் கசக்கிறது.

  2. அபூ முஹை

    uuபிருந்தன் அவர்களே!

    //நமக்கென்று வரும்போது நிஜம் கசக்கிறது.// – சரியாகச் சொன்னீர்கள்.

  3. இறை நேசன்

    மிக அருமையான கட்டுரை. மீள் பதிவு செய்தமைக்கு நன்றிகள் அபூ முகை அவர்களே!
    //திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் தரைமட்டமாகி விட்டன//

    வேறு ஒரு துரும்பினை கூட ஒன்றும் செய்யாமல் இச்சம்பவம் நடக்க வேண்டும். அதன் வீச்சினால் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் ஒருவரை கூட விடாமல் அத்தனை பேரையும் காவு கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அணுகுண்டு கிடைத்தால் அணுகுண்டினால் மிக்க நன்மையே.

    அணுகுண்டு இல்லா ஓர் உலகம் வேண்டும். அங்கு எனக்கு ஓர் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அரசாங்கம் வேண்டும்.

    அன்புடன்
    இறை நேசன்

  4. அபூ முஹை

    நன்றி இறைநேசன் அவர்களே!

    அரசியல்வாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதல்ல, திருந்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

    அணுவைப் பிளந்து, மாபெரும் சக்தியினை வெளிப்படுத்த முடியும் என்ற கருத்தை முதலில் முன்வைத்த விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம், ”மூன்றாம் உலகப்போர் எப்படியிருக்கும்” என்று கேட்கப்பட்டது.

    இரண்டாம் உலகப் போரில் இவரது ஆலோசனையால் கண்டுபிடிக்கப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய விளைவுகளின் பின்னணியில் இந்தக் கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஐன்ஸ்டீன் ”நான்காம் உலகப் போரின் போது வெறும் கற்கள் தான் ஆயுதங்களாக பயன் படுத்தப்படும்” என்று கூறினார். அதாவது மனிதன் மீண்டும் கற்காலத்தை நோக்கிச் செல்வான் என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கருத்து தெளிவுபடுத்துகிறது.

    சிறந்த அறிவாற்றலை முறையின்றி பயன்படுத்தியதால் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற விபரீதங்களை அனுபவித்தோம் – இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஈவு இரக்கமற்ற அணு ஆயுதச் சண்டையிலிருந்து முற்றாக விடுபட்டு கற்கால சண்டைக்கு மனிதன் திரும்புவான் என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கருத்து பலிக்க வேண்டும்.

    ”அணுகுண்டு இல்லா ஓர் உலகம் வேண்டும்.” – உங்களின் ஆவலும் விரைவில் நிறைவேறட்டும்.

    அன்புடன்,
    அபூ முஹை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *