அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே மனிதனை படைத்தான். அவன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் அவனுக்கு சில இயல்புகளிலும் ஏற்படுத்தினான்.
இவையே ‘மனித இயல்புகள்’ என்று சொல்லப்படுகிறது.
குர்ஆன் மனித இயல்புகளை பற்றி பல இடங்களில் விரிவாகச் சொல்கிறது.ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வியல்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டு திகழ்கிறான்
எனவே! மனித இயல்புகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதற்கு முற்றிலும் மாற்றமான மூஃமினின் நிலையை பற்றியும் இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் பார்ப்போம்.
அவசரக்காரன்
பொதுவாகவே! மனிதன் அனைத்து விடயங்களிலும் அவசரத்தையே விரும்புகிறான்.
அவனைப் படைத்தவனே அவனின் இயல்புகளைப் பற்றி பேசுகிறான்:
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ.
எனினும் நிச்சயமாக (மனிதர்களாகிய) நீங்கள் அவசரப்படுவதையே விரும்புகிறீர்கள்.(75:20)
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا.
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். (70:19)
இதைத் தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான்.
اِلَّا الْمُصَلِّيْنَ.
தொழுகையாளிகளைத் தவிர (அவர்கள் அவசரபடமாட்டார்கள்). (70:22)
ஆகவே ஓர் இறைநம்பிக்கையாளன் ஒரு காரியத்தை செய்யும் முன் அதை நிறுத்தி நிதானித்து யோசித்து செயல் படுவான்.
ஒரு வார்த்தையானாலும் சரியே!
இறைநம்பிக்கையாளன் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவன் அவன் ஒரு வார்த்தையை பேச விரும்பினாலும் அதைப் பலமுறை யோசித்து பேசுவான். மனிதனோ சிந்திக்காமல் வாயில் வருவதையெல்லாம் பேசிவிடுவான் அதன் விளைவு!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் (நன்மையா தீமையா) என்று சிந்திக்காமல் ஒரு வார்த்தையை பேசி விட்டால். அதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தூரத்தில் நரகத்தில் எறியப்படுவான். (முஸ்லிம்:2988)
சிந்திக்காமல் அவசரப்பட்டு பேசியதன் விளைவை இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது.
எனவே! இறை நம்பிக்கையாளர்களாக இருக்கக்கூடிய நாம் ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை அவசரமின்றி நிதானித்து செய்ய வேண்டும்.
மற்றொரு அறிவிப்பில் 70 ஆண்டுகள் தூரத்தில் நரகில் தூக்கி எறியப்படுவான் என்றும் வந்தது (திர்மிதீ:2314)