-அத்தேஷ்
நன்றி மக்கள் உரிமை வார இதழ்.
இந்தியாவில் எங்கேயும் தேடியும் லவ் ஜிகாத் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இது மாதிரி வழக்குகளை விசாரணை செய்ய மத்திய அரசு உருவாக்கிய என்.ஐ.ஏ என்ற நிறுவனம் கோப்புகளை மூடிவிட்டது. ஆணோ பெண்ணோ மதம் மாறி திருமணம் செய்து கொள்வது நடக்கவே செய்கிறது. அதிலும் பெரிய கிரிமினல் குற்றங்கள் காணப்படவில்லை என்கிறது என்.ஐ.ஏ. இது தொடர்பில் மேலும் ஏதேனும் கோப்புகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்வதில்லை என்றும் கூறிவிட்டது. கேரளாவில் இந்து முஸ்லிம் கிறித்தவர் என மும்மதத்தினரும் திருமணத்திற்காக ஆணோ பெண்ணோ மதம்மாறிக்கொள்கின்றனர்.இதில் கிறித்தவ பெண்களும் முஸ்லிம் பெண்களும் இந்துவாக மதம் மாறுவது அதிகமாக நடக்கிறது என்று இரு மதத்தவர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். முதலாளித்துவ சமூகத்தில் இது சாத்தியமான காரியம். இந்துக்கள் காதல் குருஷேத்திரம் நடத்துவதாக புகார் கூறவில்லை. அதே நேரம், முஸ்லிம் இளைஞர்களை விரும்பி இந்து பெண்கள் திருமணம் செய்வதை லவ் ஜிகாத் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பொய்களை பரப்பி வந்தனர்.
இந்த லவ் ஜிகாத்தை தடுக்க வேண்டும் என்ற வழக்குகளெல்லாம் நீதிமன்றங்கள் சென்றன. கடந்த வருடம், அகில என்ற ஹாதியா ஷப்பின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்ட விவகாரம் இந்தியா மட்டுமன்றி உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கேரளாவில் இந்து பெண்களை லவ் ஜிகாத் மூலம் மதம் மாற்றம் செய்து சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் பண்டமாக வெளிநாடுகளுக்கு கொண்டு போகிறார்கள் என கேரள முஸ்லிம் இளைஞர்கள் மீது அபாண்டமான பழியை இந்துத்துவா சுமத்தியது. ஹாதியா மதம் மாறிய காரணத்தால் முஸ்லிமாகிய ஷப்பீன் ஜஹானை திருமணம் முடித்தார். மதம் மாறும் முன்னர் இந்த ஷபீன் யார் என்று ஹாதியாவுக்குத் தெரியாது என்பது உண்மை. ஆனால், ஹாதியா- ஷபீன் திருமணத்தை லவ் ஜிகாத் என்ற கோணத்தில் ஹிμகி கேரள உயர்நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்து ஹாதியாவை பெற்றோருடன் அனுப்பி வைத்து விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று கூறியது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஷபீன் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். முதலில் கேரள மாநில உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து மதம் மாறி திருமணம் செய்வது தனிநபர் உரிமை என்று கூறியது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் தான் கேரளாவில் உண்மையில் லவ் ஜிகாத் என்பது நடக்கிறதா என்பதை விசாரணை செய்து அறிக்கை தரும்படி மத்திய விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு மையத்துக்கு உத்தரவு போட்டது. உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அப்போதே எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஹாதியா திருமணம் தொடர்பில் உருவான சர்ச்சையையடுத்து, கேரளாவில் பதிவான 11 லவ் ஜிகாத் வழக்குகளை விசாரணைக்கு என்.ஐ.ஏ எடுத்துக்கொண்டது. காவல்துறை விசாரணையில் மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட 89 புகார்களில் இருந்து இந்த 11 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 11 வழக்குகளிலும், மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட ஆணோ பெண்ணோ மதம் மாற நிர்பந்தம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை என என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 11 வழக்கில் 4 ல் தான் இந்து ஆண்கள் முஸ்லிமாக மதம் மாறி இருக்கிறார்கள். அல்லது அவர்கள் முஸ்லிமாக மாறுவதற்கு உதவி செய்யப்பட்டு இருக்கிறது. இதர வழக்குகளில் இந்து பெண்களே முஸ்லிமாக மாறி இருக்கிறார்கள் என்று என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது. மூன்று வழக்குகளில் மதம் மாற்றும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என்றும் என்ஐஏ தரப்பு கூறுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் லவ் ஜிகாத் தொடர்பான வழக்கு முடித்து வைத்துள்ளது.
மதம் மாறித் திருமணம் செய்தவர்கள் மதம் மாறுவதற்கு கேரளாவில் உள்ள ஒரு முஸ்லிம் அமைப்பு உதவுவதாக என்ஐஏ கூறுகிறது. இருப்பினும், சட்டவிரோத தடுப்புச் சட்டம் போன்ற என்.ஐ.ஏ பட்டியலில் இடம்பெற்ற குற்றங்களின் கீழ் வழக்கு தொடுக்கும் ஆதாரங்கள் எதுவும் அவர்களுக்கு எதிராக கண்டறியப்படவில்லை என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மத நம்பிக்கைப்படி அமைதியான வழியில் வாழ்வதும், அடுத்தவருக்கு எடுத்துக்கூறுவதும் அனைவருக்கும் அடிப்படை உரிமையாக இருக்கிறது. இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதி வழங்கி இருக்கிறது. கேரளாவில் மதம் மாறுவது குற்றமில்லை. மதம் மாறுவோருக்கு உதவி செய்வதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டது என்கிறார் என்ஐஏ அதிகாரி ஒருவர். இந்து பெண்களை மதம் மாற்றி ஏமாற்றித் திருமணம் செய்து அரபு நாடுகளுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு இங்குள்ள முஸ்லிம்கள் சப்ளை செய்வதாக இது விசயத்தில் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட பயங்கரவாத பொய்யர்களின் முகத்திரை என்ஐஏ விசாரணை மூலம் கிழிந்திருக்கிறது.
வட மாநில முஸ்லிம்களுக்கு மாட்டிறைச்சி பிரச்சனை என்றால் தென் மாநிலம் ஒன்றில் மதம் மாறியவர்களை திருமணம் செய்வதில் பிரச்சனை. இந்துப் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்வது ஒரு திட்டமிட்ட செயல் என்ற பிரச்சாரமும் முறியடிக்கப்பட்டுள்ளது.
பல வழக்குகளில் என்ஐஏ தடுமாறி இருக்கிறது என்றாலும் இந்த வழக்கை முடித்து வைத்து தனது நேர்மையை என்ஐஏ வெளிப்படுத்தி இருக்கிறது.