இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும்.
இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சு+ழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது குறைத்துக் கொண்டால் எம்மால் விற்க முடியாது. எனவே, இது சரியான அடிப்படையல்ல.
அத்துடன் வியாபாரத்தையும் முஸ்லிம்கள் முறையாக அறிந்து நீதி, நேர்மையுடன் செய்யும் போக்கும் குறைந்துவிட்டது. திடீரென வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணத்தில் அதிக முதலீடு செய்தல், அழங்காரத்திற்காகவும் அடுத்தவர்களுக்கு “ஷோ” காட்டுவதற்காகவும் அதிகம் செலவு செய்தல், வட்டியுடன் தொடர்புபட்ட வர்த்தக நடவடிக்கை, என இவற்றில் பல தவறுகளையும் செய்து வியாபாரத்தில் தோல்வியையும், முதல் இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது என்பார்கள். கூடை விழுந்தால் எல்லாம் உடைந்துவிடும். முஸ்லிம்கள் சிலரது வர்த்தக நடவடிக்கைப் போக்கு இப்படித்தான் இருக்கின்றது. அத்துடன் ஒரு சமூகம் ஏதாவது ஒரு துறையில் மட்டும் அதிக ஈடுபாடு கொள்வதும் இப்படியான ஆபத்து நிறைந்ததே!
முஸ்லிம்கள் சகல துறைகளிலும் கால் பதிக்க வேண்டும். குறிப்பாக அரச ஊழியத்தில் முஸ்லிம்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இன்று முஸ்லிம்களில் ஆண்கள் ஆசிரிய தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் முஸ்லிம் பாடசாலைகளில் ஆண் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிழவுகின்றது. இதனால் பாடசாலையில் கற்றல் மற்றும் ஒழுக்க விடயங்களில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. எனவே, எமது இளைஞர்கள் ஆசிரிய தொழிலில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
இவ்வாறே சகல அரச துறைகளிலும் எமது இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அரசு ஊழியத்தில் குறைந்த வருமானம் என்றாலும் இதுதான் எனது வருமானம் என்கின்ற அளவு தெரியும். அந்த அளவை அறிந்து அதற்கேற்ற விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
அத்துடன் அரச ஊழியத்தில் பெண்சன் – ஓய்வூதியம் இருக்கின்றது. மற்றும் பல வரப்பிரசாதங்களும் உள்ளன. வயோதிப காலத்தில் தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். ஒரு சமூக அந்தஸ்த்துடன் வாழ்வைக் கழிக்கலாம். இந்த வகையில் சகல அரச தொழில்களிலும் எமது இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
எந்தத் துறையில் எமது இளைஞர்கள் கால் பதித்தாலும் அது ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு நலன் பயப்பதாக அமையும்.