இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். மேலும் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் கையை உயர்த்த வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்வதனால் உங்கள் பக்கத்தில் இருப்பவரும் அவருக்கு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற தேவை இருந்தும் வெட்கப்பட்டு கையை எடுத்துவிடலாம்.
ஆதாரம்: இப்னு மாஜா 3295, ஹுல்யதுல் அவ்லியா 3/74, பைஹகி – ஷுஅபுல் ஈமான் 5478
இந்தச் செய்தியை அப்துல் அஃலா இப்னு அஃயன் என்பர் யஹ்யா இப்னு கஸீரை தொட்டும் அறிவிக்கின்றார்.
இந்தச் செய்தி மிகக் கடுமையான பலவீனமான செய்தியாகும். காரணம் அப்துல் அஃலா என்பவர் யஹ்யா இப்னு கஸீரைத் தொட்டும் அவர் சொல்லாதவற்றை அறிவிப்பதாகவும், இந்த அப்துல் அஃலா என்பவரை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தனது ‘அல் மஜ்ரூஹீன்” என்ற புத்தகத்தின் 773 பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
மேலும் இந்தச் செய்தியை இமாம் இப்னுல் கைஸரானி மற்றும் இமாம் அல்பானி ஆகியோர் கடுமையான பலவீனமான செய்தி என தீர்ப்பளித்துள்ளார்கள். (ஸில்ஸிலதுல் அஹாதீஸுல் லஈபாஃ 238)
இதே கருத்தை வழியுறுத்தும் வகையில் இன்னுமொரு செய்தி பதியப்பட்டுள்ளது. அந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (உணவு உற்கொண்டு முடிந்து) உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை எழுந்திடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் இப்னு மாஜா 3294
இந்த செய்தியும் மிகப் பலவீனமான செய்தியாகும் என்று இமாம் அல்பானி அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஸில்ஸிலதுல் அஹாதீஸுல் லஈபாஃ 239)
இது தொடர்பாக வந்திருக்கும் இரண்டு செய்திகளும் மிகப் பலவீனமான செய்தி என்பதனால் இந்த நடைமுறையை நபியவர்களோடு இணைத்து அவர்களது வழிமுறையாக காண்பிக் கூடாது.
என்றாலும் பொதுவாக இந்த நடைமுறை ஒன்றாகச் சாப்பிடுவதன் ஒழுங்குகளில் பேணப்பட வேண்டிய ஒரு நல்ல நடைமுறையாகும் என பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இமாம் இப்னு ஹஜர் அல் ஹைஸமி, இமாம் ஸன்ஆனி போன்றோர் சாப்பிடுவதன் ஒழுங்கு முறையைக் குறிப்பிடுகையில் ஒன்றாகச் சாப்பிடும் போது இடை நடுவே எழுந்திடுவது மற்றவர்களுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த ஒழுங்கு முறையை பொதுவான ஒழுங்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நபிவழியாக நினைத்து ஒருவருக்கு எழுந்து செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும் போதும் நபிவழிக்கு மாற்றம் செய்யாதீர்கள் என்று அவரைக் கட்டாயப்படுத்தி உட்கார வைக்கக் கூடாது என்பதனை விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அரபு மூலம்: https://islamqa.info
எம். றிஸ்கான் முஸ்தீன்
02-01-2019